அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்!
சென்னை: அரசு பள்ளிகளை பொறுத்த அளவில், கணிதம் சப்ஜெட்டுக்கு வரும் ஆசிரியரே சமூக அறிவியல் பாடத்தையும் எடுப்பதெல்லாம் ரொம்பவும் சாதாரண விஷயம். ஏனெனில் அந்த அளவுக்கு ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. இந்நிலையில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், விரைவில் ஆசிரியர் பற்றாக்குறை களையப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில், அரசு மற்றும் நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிலவி வரும் மொத்த ஆசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 12,000 முதல் 15,000 வரை இருப்பதாகக் கல்வித் துறை வட்டாரங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.

தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்கு போதுமான அளவில் ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து மாணவர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பும் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் இது குறித்து பேசியிருக்கிறார்.
அவர் பேசியதாவது, "கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டிருக்கின்றன. முந்தைய ஆட்சியில் தொடர்ந்ததை போலவே, இந்த ஆட்சியிலும் காலை உணவு திட்டம் தொடர்கிறது. மாணவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் கொடுக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆசிரியர் பற்றாக்குறையை பொறுத்தவரை, எங்கெல்லாம் காலி பணியிடங்களை நிரப்ப முடியுமோ, அதையெல்லாம் துறைசார்ந்த நடவடிக்கையின் மூலம் நிரப்பியிருக்கிறார்கள்.
சில விஷயங்கள் நீதிமன்றத்தில் இருக்கின்றன. ஒரு சில விஷயங்களை சட்டப்பூர்வமாகவும், சில விஷயங்களை மனிதாபிமானத்துடனும் அணுக வேண்டும். எனவே காலியாக இருக்கும் இடங்களுக்கு முறைப்படி கவுன்சிலிங் செய்யப்பட்டு, அந்த இடங்கள் நிரப்பப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
பள்ளிகளில் லேப்டாப் திருட்டு குறித்து பேசிய அவர், எந்த வகையிலும் இந்த குற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. லேப்டாப்கள் குழந்தைகளுக்கு சொந்தமானவை. எனவே, இந்த விஷயத்தில் என்ன சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.
ஆசிரியர் பற்றாக்குறையின் தீவிரம்
தமிழகத்தில் அரசுத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் சுமார் 8,600-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசுப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற முக்கியப் பாடங்களுக்கான பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் கணிசமான பற்றாக்குறை நீடிக்கிறது. உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஓவியம், தையல் போன்ற சிறப்புப் பாட ஆசிரியர்களுக்கான இடங்களும் ஆயிரத்திற்கும் மேல் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications