உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத கர்நாடகாவுக்கு வேல்முருகன் கண்டனம்!

சென்னை: காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத கர்நாடகாவிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரியில் தமிழகத்துக்கு செப்டம்பர் 21-ந் தேதி முதல் 6,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா நடைமுறைப்படுத்தாதது கடும் கண்டனத்துக்குரியது.

TVK leader Velmurugan condemns Karnataka government

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறது கர்நாடகா. அதுவும் மத்திய அமைச்சராக உள்ள சதானந்த கவுடா தொடர்ந்து காவிரி பிரச்சனையில் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விடும் வகையில் பேசி வருகிறார்.

தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடாமல் சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டப் போவதாக அறிவித்திருப்பது ஏற்க முடியாதது. சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி உச்சநீதிமன்றத் தீர்ப்பை மிதிக்க முயற்சிக்கும் கர்நாடகா அரசை மத்திய அரசு வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

தாம் ஒரு மத்திய அமைச்சர் என்பதை மறந்து இனவெறியுடன் வன்முறையை தூண்டிவிட்டு வரும் சதானந்த கவுடாவை அமைச்சரவையில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து உடனடியாக கர்நாடகாவின் அணைகளை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு உரிய அழுத்தங்களை தமிழக அரசு தர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக பிரதிநிதிகள் குழு பிரதமர் அவர்களை சந்திப்பதற்கான நடவடிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

English summary
TVK leader Velmurugan condemned for Karnataka government standing on Cauvery issue.
Please Wait while comments are loading...

Videos