Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாழ்க்கைக்கு வண்ணம் கொடுத்த வாழ்த்து அட்டைகள்! பாசத்தை உணரச் செய்யுமா வெறும் பார்வேர்ட் மெசேஜ்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டும், பொங்கலும் அடுத்தடுத்து வரப்போகிறது. வாட்ஸ்அப்பை திறந்து பார்க்க முடியாத அளவுக்கு வரிசையாக வாழ்த்து மெசேஜ்கள் வந்து குவியப்போகின்றன. சில மெசேஜ்களை உடனே திறந்து பார்ப்போம். சில மெசேஜ்களை, அப்புறமாக பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்திப் போட்டு பார்ப்போம்.

இதில் இன்னொரு சங்கடம் வேறு சிலருக்கு வரும். அனுப்பிய ஒவ்வொருத்தருக்கும், திருப்பி மெசேஜ் அனுப்பனுமே.. இருக்கிற வேலையில், இதுவேறையா.. என்று நொந்து கொள்பவர்களும் உண்டு.

அதுக்குன்னே சில புத்திசாலிகள் ஒரு வழியை கண்டுபிடித்திருப்பார்கள். ஒரு நண்பர் அனுப்பிய மெசேஜை இன்னொரு நண்பருக்கு அப்படியே பார்வேர்ட் செய்து "அப்பாடா கடமை முடிந்தது" என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்வார்கள்.

A 90s kids nostalgic memory on greeting cards

இப்படி பார்வேர்ட் அனுப்பும் அவசரத்தில், தனக்கு அனுப்பியவருக்கே, அதே மெசேஜை அனுப்பி "பல்ப்பு" வாங்கியவர்களும் உண்டு. இதெல்லாம், கடமைக்கு செய்யும்போது ஏற்படும் பக்கவிளைவுகள். ஆனால், உள்ளார்ந்த அன்புடன், பொறுமையாக பார்த்து பார்த்து, வாழ்த்து அனுப்பிய அதே தலைமுறைதான் நாம் என்றால், நமக்கே இப்போது நம்ப முடியாது.

ஆமா.. வாழ்த்து அட்டை (Greeting card) பற்றிதான் சொல்றோம்.. கண்டிப்பாக நீங்களும் எழுதியிருப்பீர்கள், அல்லது வாழ்த்து அட்டையை பெற்றிருப்பீர்கள். பொங்கலுக்கும், புத்தாண்டுக்கும், வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம், சுமார் 10 வருடங்களுக்கு முன்புவரை இருந்தது. இப்போதுதான் அது அருகி வரும் அரிய உயிரினம் லிஸ்டில் சேர்ந்துவிட்டது.

1990கள் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டங்களில் வாழ்த்து அட்டை மட்டும்தான், வாழ்த்து தெரிவிக்கும் ஒரே வடிவமாக இருந்தது. பொங்கல், புத்தாண்டுக்கு பல நாட்கள் முன்பே கடைகளுக்கு போய் வாழ்த்து அட்டை தேட வேண்டும். அப்படி தேடி அனுப்பி விட்டால்தான், சரியாக பொங்கலுக்கு முன்பாக போகும். கொஞ்சம் லேட்டாக அனுப்பினாலும், மாட்டுப் பொங்கலுக்கோ, காணும் பொங்கலுக்கோதான் போய் சேர்ந்து மானத்தை வாங்கும். அஞ்சல் வழியாக அனுப்பும்போது ஊர்களின் தூரத்தைப் பொறுத்து ஒரு வாரம் வரை காலம் தேவைப்படும் காலம் அது.

ஒரு வீட்டுக்கு எத்தனை முறை அஞ்சல்காரர் போகிறாரோ, அந்த அளவுக்கு அந்த குடும்பத்திற்கு ஊரில் மதிப்பு இருக்கும். "பாரேன்.. எவ்ளோ சொந்தக்காரங்க கார்டு அனுப்புறாங்க" என அக்கம்பக்கத்தினர் ஆச்சரியமாக பேசுவதை கேட்பதில் ஒரு அலாதி பிரியம். வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன் டோன் பக்கத்து ரூமுக்கே கேட்காதபோது, இந்த சந்தோஷத்தை இப்போதைய தலைமுறை எப்படி அனுபவிக்க முடியும்?

வாழ்த்து அட்டையும் ஒரு வகையில், கல்யாண கார்டு செலக்ஷன் மாதிரிதான். நம்மோட ரசனை அதில் இருக்க வேண்டும், நமது பொருளாதார ஸ்டேடஸ் அதில் இருக்க வேண்டும். கொஞ்சம் பணக்கார சொந்தக்காரங்களுக்கு காஸ்ட்லியா கார்டு வாங்குவதும், மற்றவர்களுக்கு முடிந்த விலையில் கார்டு வாங்குவதும் பலரது வாடிக்கை. பணக்கார சொந்தங்களுக்கு கம்மி விலையில் கார்டு அனுப்பிவிட்டால் நமது கவுரவம் என்னவாகும் என்று நினைத்து பார்த்து பார்த்து புது டிசைனாக பார்த்து வாங்குவதற்கே பல நிமிடங்கள் பிடிக்கும்.

ரஜினி ரசிகராக இருந்தால் ரஜினி படம் போட்ட வாழ்த்து அட்டைகள் அனுப்புவார்கள், கடவுள் முருகன் படம் போட்ட வாழ்த்து அட்டைகள் ரொம்பவே பிரபலம். பொதுவாக பெரியவர்கள் என்றால் பொங்கல் பொங்கும் பானை, பக்கத்தில் கரும்பு இப்படியாக படம் இருப்பதைத்தான் செலக்ட் பண்ணுவார்கள். ஒரு வாழ்த்து அட்டையை வைத்தே, அதை அனுப்பியவர்களின் வாழ்க்கை ரசனையை முழுவதும் கண்டுபிடித்துவிடலாம். யாரோ அனுப்பும் மெசேஜை பார்த்தும் பார்க்காமலும் வாட்ஸ்அப்பில் பார்வேர்ட் பண்ணும்போது, இந்த அனுபவம் எப்படி கிடைக்கும்?

இது எல்லாவற்றையும்விட வாழ்த்து அட்டைகளுக்கு என்று ஒரு மணம் இருக்கும். அந்த வாசத்தை பல வருடங்கள் கழித்து நீங்கள் நுகர்ந்து பார்த்தாலும், பழைய காலத்திற்கே அழைத்துப் போய்விடும். "ஓட, நீரோட.. இந்த உலகம் அதுபோல.. ஓடும் அது ஓடும்.. இந்த காலம் அதுபோல.... நிலையா நில்லாது, நினைவில் வரும் நிறங்களே.." என்ற அவதாரம் பட பாட்டு வரி மாதிரி, நிறங்கள் மட்டும் நினைவில் வராது. வாசனையும் உங்களை காலச் சக்கரத்தில் பின்னோக்கி அழைத்துச் செல்லும் சக்தி கொண்டது. நுகர்ந்தவர்.. உணர்ந்தவர்!

வாழ்த்து அட்டையில் இன்னொரு வசதியும் இருக்கிறது. அங்கு உங்கள் கையெழுத்து இடம் பிடிக்கும். உங்களுக்கு பிடித்தவர் கையெழுத்து இடம் பிடிக்கும். காலத்தால் அழியாத பட்டையம் அந்த எழுத்துக்கள். கையெழுத்தை பார்த்ததுமே, அனுப்பியவர் முகம் உங்களுக்கு சட்டென்று ஞாபகம் வந்துவிடும். அதுதான் கையெழுத்தின் மகத்துவம், தனித்துவம். என்னதான் வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ்சில் மெசேஜ் அனுப்பினாலும், அது தட்டச்சு கண்டுபிடித்தவரின் அச்சு வடிவம்தானே தவிர, உங்கள் மனதின் வரி வடிவம் இல்லையே. "இங்க்" சிந்திவிட கூடாது என பார்த்து பார்த்து எழுதிய அந்த அக்கறை, இந்த மெசேஜில் இருக்கப்போவது கிடையாதே.

உங்களுக்கு பிடித்தவர்கள் அனுப்பும் வாழ்த்து அட்டையை பார்க்கும்போது தனி "பீலிங்" வர முக்கிய காரணம் உண்டு. ஏனெனில்.. அது உங்களுக்கானது. உங்களுக்கு மட்டுமேயானது! பத்தோடு பதினொன்றாக பார்வேர்ட் செய்யப்படும் மெசேஜ் போன்றது கிடையாது. உங்களுக்காக கடைக்குப் போய் தேர்ந்தெடுத்து, உங்களுக்காக நேரம் ஒதுக்கி, உங்களுக்காகவே கைப்பட எழுதிய அன்பின், பெரும் ஊற்று அது. அந்த அட்டை எத்தனை வருடம் கடந்தாலும் உங்கள் பெட்டகத்தில் மாறாமல் அப்படியே இருக்க கூடியது. இந்த தனித்துவம், இப்போதைய, எந்த தகவல் தொடர்பு சாதனத்தாலும் கொடுக்க முடியாத தனிச்சிறப்பு.

அன்பு, நாஸ்டாலஜி என்ற பல விஷயங்களை தாண்டி, தாய்மொழியாம் தமிழுக்கு செழுமை சேர்க்க வாழ்த்து அட்டை உதவியது. எழுதும்போது நமது மொழியாற்றல் பெருகியது. இப்படியான பாரம்பரியம் உள்ளவர்கள் என்பதாலோ என்னவோ, இப்போதும் சமூக வலைத்தளங்களில் தமிழில் டைப் செய்வதில் மற்ற மாநிலத்துக்காரர்களைவிட, தமிழர்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். நல்லவேளையாக இதையாவது செய்வது தாய்மொழிக்கு நாம் செய்துவரும் கைமாறுதான். ஆனாலும் தவறு செய்துவிடாமல் எழுத வேண்டும், அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வை கொடுத்தது வாழ்த்து அட்டை மட்டும்தான்.

பழைய பெருமையை பேசுவதற்காகவும், நினைவுகளை அசைபோட்டு மகிழ மட்டுமே என்று இந்த பதிவை நிறுத்துவிட வேண்டாம். பழையபடி பேனாவை கையில் எடுங்க. வாழ்த்து அட்டையை தேர்ந்தெடுங்க. பழைய மாதிரியே உறவுகளுக்கும், நட்புகளுக்கும் கார்டு அனுப்புங்க. அவர்களையும் எழுத தூண்டுங்கள். காலச் சக்கரத்தின் மடியில் அமர்ந்து பின்னோக்கி பயணிக்கும் அனுபவத்தை பெறுங்கள். வரும் 2021 நமது பாரம்பரியத்தை காக்கும், எழுச்சிமிகு புத்தாண்டாக அமையட்டும்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+