மொத்தமாக ஏலத்திற்கு வரும் நகைகள்.. "ஏற்பட போகுது மிக பெரிய சிக்கல்.." ஆனந்த் சீனிவாசன் பகீர் தகவல்
சென்னை: இந்தியாவில் தங்கத்தை வைத்து கடன் வாங்குவது என்பது மிகவும் வழக்கமாக நடக்கும் ஒன்றாகவே இருக்கிறது. அதேநேரம் சமீப காலமாகத் தங்கத்தை வைத்து கடன் வாங்கும் பொதுமக்கள், அதை எடுக்கும்போது பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
நமது நாட்டில் தங்கம் தான் எப்போதுமே பொதுமக்களின் முதல் சேமிப்பாக இருக்கிறது. சேமிப்பை ஆரம்பிக்கும் அனைவருமே நமது நாட்டில் முதலில் தங்கத்தையே வாங்குவார்கள். தங்கம் விலை உயரும்போது எப்போதான் குறையுமோ.. வாங்க வேண்டும் என யோசிப்போம்.. மறுபுறம் குறைந்தால் ஐயோ என்ன இப்படி குறையுது என்ற பயம் நமக்கு வந்துவிடும். அப்போதும் இன்னும் குறைந்த பிறகு தங்கம் வாங்கலாம் என்றே யோசிப்போம்.

இன்றைய தினம் கூட ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,14,880க்கு விற்பனையாகிறது. அதேபோல ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.14,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் மாற்றமின்றி ரூ.275க்கு விற்பனையாகிறது.
ஆனந்த் சீனிவாசன்
இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் தங்க மார்கெட் தொடர்பாகவும் உலக பொருளாதார சூழல் தொடர்பாகவும் சில முக்கியமான கருத்துகளைக் கூறியுள்ளார். மேலும், நமது நாட்டில் உள்ள நகைக்கடன் விவகாரம் தொடர்பாகவும் அவர் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், "அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென பல்டி அடித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அறிவித்ததால் ஷேர் மார்க்கெட் சற்று ஏறியுள்ளது. அதேநேரம் இது தொடர்பாக ஈரான் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மறுபுறம், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பு ஏற்படும்.
பாதிக்கும்
போர் விரைவில் நின்றுவிடும் என்ற நம்பிக்கையில் மார்க்கெட் ஏறினாலும், அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது போல எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், நம்பிக்கையில் மார்கெட் ஏறி இருக்கிறது. அதேநேரம் அப்படியே போர் நின்றாலும் கூட ஏற்கனவே ஏப்ரல் மாதம் முழுவதும் போய்விட்டது. மே மாதத்தின் முதல் 15 நாட்களும் பொருளாதார ரீதியாகச் சவாலாகவே இருக்கும். இதனால் இந்த குவார்ட்டர் ஏர்னிங்ஸ் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அமெரிக்கா பணவீக்கம்
அமெரிக்காவின் மொத்த விலை பணவீக்கம் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.. அங்கு எரிசக்தி விலையும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.. ஆனால் இப்போதைய சூழலில் வட்டி விகிதம் குறையாது, மாறாக உயரவே வாய்ப்புள்ளது. டிரம்ப் நியமித்த கெவின் வார்ஷுக்கு இதுவரை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் ஜெரோம் பவல் இன்னும் இரண்டு மாதங்கள் தொடர்வார் என்பதால், அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைவது இனி சாத்தியமில்லை.
இந்தியாவில் கோல்டு லோன் 16 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.. இது இரண்டாவது பெரிய ரீடெயில் செக்மென்ட் ஆகும். சொத்துகளுக்கு எதிராகக் கடன் வாங்குவதற்கு அடுத்து கோல்டு லோன் தான் 2வது இடத்தில் இருக்கிறது. மக்கள் அதிகளவில் தங்கத்தை வைத்து கடன் வாங்குவதால் அதில் அழுத்தம் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் சின்ன தொகையை வைத்து கடன் வாங்குவார்கள். ஆனால், இப்போது பெரிய தொகையை வைத்து வாங்குகிறார்கள்.
கோல்ட் லோன்
மக்கள் அதிக அளவில் கடன் வாங்கினாலும், முன்புபோல அவற்றை உடனே திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இதனால் கோல்டு லோன் துறையில் அழுத்தம் அதிகரித்துள்ளது. அதிலும் தங்கம் விலை உச்சத்தில் இருந்து கிட்டத்தட்ட ரூ.2000 வரை சரிந்த நிலையில், அதை அடஜெஸ்ட் செய்ய மக்கள் கூடுதல் பணத்தைக் கட்ட வேண்டி இருந்தது.
மேலும், ஆர்பிஐ விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளதால், வட்டி மட்டும் கட்டாமல் முழுப் பணத்தையும் கட்டி நகையை மீட்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் வரும் காலங்களில் நகைகள் அதிக அளவில் ஏலத்திற்கு வர வாய்ப்புள்ளது. போர் காரணமாகத் துபாய் வழி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆபரண ஏற்றுமதி 35 சதவீதம் குறைந்துள்ளது" என்றும் அவர் கூறினார்












Click it and Unblock the Notifications