தங்கம் விலை 2026 முடிவதற்குள் ராக்கெட் வேகத்தில் உயரும்.. ஈரான் போருக்கு மத்தியில் புதிய ட்விஸ்ட்!
தங்கத்தின் விலை சமீபத்தில் சற்று குறைந்திருந்தாலும், நீண்டகால பார்வையில் அது இன்னும் வலுவான நிலையில் தான் இருக்கிறது. தங்கம் இன்றளவும் சர்வதேச முதலீட்டு சந்தையில் முக்கிய சொத்தாகவே பார்க்கப்படுகிறது, அமெரிக்க அரசு கடுமையாக முயற்சி செய்து டாலரின் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த முயற்சிகள் உடையும் பட்சத்தில் தங்கம் விலை முக்கிய சொத்தமாக மாறி தங்கம் விலை உயரும்.
ஏப்ரல் 27ஆம் தேதியன்று (இன்று) தங்கம் ஒரு டிராய் அவுன்ஸ் 4,715.16 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. ஜனவரி மாத உச்ச விலையான 5,600 டாலரை விட 15.8 சதவீதம் குறைவுதான். ஆனால் கடந்த ஆண்டின் இதேகாலக்கட்டத்தை ஒப்பிடுகையில் சுமார் 50 சதவீதம் அதிகமாகவே உள்ளது.
இந்த நிலை உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் தங்கம் எப்படி வலுவாக நிற்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இதுதான் தங்க முதலீட்டாளர்களின் முக்கிய நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

விலை சரிவு அல்ல, இயல்பான திருத்தம்
சமீபத்திய விலை வீழ்ச்சியை சந்தை நிபுணர்கள் "ஆரோக்கியமான திருத்தம்" (healthy correction) என்றே கருதுகின்றனர். ஆண்டின் தொடக்கத்தில் 5,000 டாலரை தாண்டிய வேகமான உயர்வுக்குப் பிறகு, சில முதலீட்டாளர்கள் லாபம் பார்த்து விற்பனை செய்வது இயல்பானது. தற்போது தங்கம் ஒரு உறுதியான வரம்புக்குள் (consolidation phase) வர்த்தகமாகும் நிலையில் உள்ளது. அடுத்த சில மாதங்களில் 4800 முதல் 5500 டாலர் வரை வர்த்தகம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் தங்கம் இன்னும் வலுவாக உள்ளது?
உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருவதே முக்கிய காரணம். உலக தங்க கவுன்சில் தகவலின்படி, பல நாடுகள் உலகளாவிய நிச்சயமற்ற தன்மையிலிருந்து தங்களைப் பாதுகாக்க தங்க கையிருப்பை அதிகரித்து வருகின்றன. இந்த நிலையான கொள்முதல் தங்க விலைக்கு வலுவான ஆதரவை அளிக்கிறது. இதேபோல் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்கம், வெள்ளி இறக்குமதியை பெரிய அளவில் குறைத்துள்ளது.
உலகளாவிய கடன் அளவு அதிகரிப்பது குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. வரலாற்று ரீதியாக, கடன் அதிகரிக்கும் போதும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் போதும் மக்கள் பாதுகாப்பான சொத்தான தங்கத்தை நோக்கி திரும்புகின்றனர். இதுவும் தற்போது தங்கம் விலை உயர்வுக்கு சாதகமாக உள்ளது.
அடுத்த சில மாதங்களில் உலக மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கத் தொடங்கினால் (ரெசிஷன் அச்சம் முடிந்த பின்பு) தங்கத்தின் விலை மீண்டும் வலுவாக உயரும் வாய்ப்பு உள்ளது. வட்டி விகிதம் குறையும் போது வங்கி சேமிப்புகளில் கிடைக்கும் வருமானம் குறையும். அப்போது வட்டி வருமானம் தராத தங்கம் மிகவும் ஈர்க்கக்கூடிய முதலீடாக மாறும்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம், எண்ணெய் விலை உயர்வு, ஹார்முஸ் நீரிணை போன்ற முக்கிய பாதைகளில் ஏற்படும் அச்சுறுத்தல் ஆகியவை உலக அளவில் பதற்றத்தை அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான இடமாக தங்கத்தைத் தேர்வு செய்கின்றனர், ஆனால் டாலர் மதிப்பு வலுபெறுவதால் தங்கம் தற்போது தனது பொலிவை இழந்துள்ளது.
உலகளாவிய வங்கிகளின் நம்பிக்கை
வெல்ஸ் பார்கோ, கோல்ட்மேன் சாக்ஸ், ஜேபி மார்கன் உள்ளிட்ட முன்னணி உலக வங்கிகள் தங்கத்தின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் உள்ளன. இதன் காரணமாக 2026-க்கான தங்கம் விலை உயர்வு இலக்கை 5400 முதல் 6000 டாலர் வரை உயர்த்தியுள்ளன. இந்த கணிப்புகள் திடீர் உயர்வை அல்ல, நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியை சுட்டிக்காட்டுகின்றன.
தங்கம் விலை
தற்போது சர்வதேச வர்த்தகத்தில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4714.15 டாலராக உள்ளது. இதை இந்திய ரூபாயில் கணக்கிட்டால் ஒரு கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.15,524 ஆக இருக்கிறது. இங்கே ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், உலக விலைக்கும் இந்திய விலைக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான்.
உலக விலை (1 கிராம்): $4,714.15 / 31.1035 = 151.56 டாலர்
இந்திய விலை (1 கிராம்): ரூ.15,524
இந்திய சந்தை காரணி (Factor): ரூ.15,524 / 151.56 = 102.428 ரூபாய்
அதாவது சர்வதேச சந்தையில் 1 டாலர் மதிப்புள்ள தங்கம், இந்தியாவுக்கு வரும்போது டாலர் விலை, இறக்குமதி வரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல செலவுகள் சேர்ந்து சுமார் ரூ.102.43 ஆக மாறுகிறது. அதாவது, வெளிநாட்டு விலையோடு இந்திய வரிகளும் கூடுதலாக சேர்ந்து நம்மிடம் விற்கப்படுகிறது.
இப்போது தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 6,000 டாலருக்கு உயர்ந்தால் என்ன ஆகும்? முதலில், ஒரு அவுன்ஸை கிராமாக மாற்றினால் ஒரு கிராம் தங்கத்தின் உலக விலை சுமார் 192.90 டாலராகும். இதை நமது இந்திய "காரணி" (ரூ.102.43) மூலம் கணக்கிட்டால், இந்தியாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.19,758 வரை செல்லும். தற்போது 1 அமெரிக்க டாலர் சுமார் ரூ.94.22 ஆக உள்ளது.
இதன் மூலம் தற்போதைய நாணய மதிப்பு தொடரும் பட்சத்தில் தங்கம் விலை இந்த வருடத்தின் இறுதிக்குள் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 20000 ரூபாய் வரையில் உயரும் என கணக்கிடப்படுகிறது.
குறுகிய காலத்தில் கவனிக்க வேண்டிய விலை நிலைகள்
அடுத்த சில வாரங்களில் தங்க விலையில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். 4,200 டாலர் என்பது மிக முக்கியமான ஆதரவு நிலை (support level) உள்ளது. இந்த விலைக்கு மேல் தங்கம் இருக்கும் வரை ஒட்டுமொத்த உயர்வு போக்கு தொடரும். மறுபுறம் 4,300 டாலரில் எதிர்ப்பு (resistance) உள்ளது. 4,430 முதல் 4,500 டாலர் வரை உடைத்தால் விலை மேலும் உயரும் வாய்ப்பு அதிகம். இதேவேளையில் 4200 டாலருக்கு கீழே சரிந்தால் தங்கம் விலை தொடர்ந்து சரிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
நீண்ட கால பார்வை
2026-க்கு அப்பால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்க விலை நிலையாக உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 2031-ல் 8,000 முதல் 10,000 டாலர் வரை செல்லும் வாய்ப்பு உள்ளது. பணவீக்கம், அரசியல் அச்சுறுத்தல்கள், மத்திய வங்கிகளின் தொடர் வாங்கல் ஆகியவை இந்த நீண்டகால வளர்ச்சிக்கு வலு சேர்க்கும்.
தங்க விலையின் சமீபத்திய சரிவு பலவீனத்தை அல்ல, வலுவான உயர்வுக்குப் பிறகான இயல்பான ஓய்வாக மட்டுமே முதலீட்டாளர்கள் பார்க்கின்றனர். இதேவேளையில் உலக நாடுகளின் கடன், அரசியல் நிச்சயமின்மை, வட்டி விகித மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணிகள் தங்கத்துக்கு சாதகமாகவே செயல்படுகின்றன.
குறுகிய காலத்தில் விலை ஏற்ற இறக்கம் இருந்தாலும், தங்கம் நீண்டகால பாதுகாப்பான முதலீடாகவே திகழ்கிறது.












Click it and Unblock the Notifications