தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு - அச்சம் வேண்டாம் என்கிறார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி


டெல்லி: அமெரிக்காவுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதற்கு உள்நாட்டு பொருளாதாரம் காரணமல்ல. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் மாறுபாட்டிற்குச் சர்வதேச விளைவுகளே காரணம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெட்லி, டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் கரன்சி அதிகளவில் சரிவடைந்துள்ள நிலையில், ரூபாயின் மதிப்பு பலவீனம் அடையாமல் சிறப்பாக இருப்பதால் அதுபற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. 1 டாலருக்கு நிகரான மதிப்பு 71.80 ரூபாயாகும். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து ரூபாய் மதிப்பு சரிவை சந்திப்பதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன.

இறக்குமதி நடவடிக்கைகளிலும் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலை நீடித்தால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிக அளவில் உயர வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தவிர, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையிலும் இது பெரும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்று மதியை விட இறக்குமதி அதிகரித்தால் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தவறான பொருளாதார கொள்கை, வர்த்தக நடவடிக்கைகள் காரணமாகவே ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் கருத்துக்கள் உள்ளன. எதிர்க்கட்சிகளும் இந்த காரணத்தை கூறி மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றன.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, சீனா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் குறித்த அச்சம், அர்ஜென்டினா, துருக்கி வர்த்தக சூழல் ஆகிய காரணங்களால் டாலர் மதிப்பு உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் எரிபொருள் தேவையில் 81 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யும் நாடுகளின் தேவைக்கு ஏற்ப எண்ணையை அந்த நாடுகள் உற்பத்தி செய்வதில்லை. இந்த காரணங்கள் அனைத்தும் உலக அளவில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதன் அடிப்படையிலேயே, இந்தியாவில் ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. விரைவிலேயே ரூபாய் மதிப்பு ஸ்திரமான நிலையை எட்டும் என்று நிதியமைச்சக அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு குறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அமெரிக்காவுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதற்கு உள்நாட்டு பொருளாதாரம் காரணமல்ல என்றார்.

சர்வதேச காரணிகளால் ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் கரன்சி அதிகளவில் சரிவடைந்துள்ள நிலையில், ரூபாயின் மதிப்பு பலவீனம் அடையாமல் சிறப்பாக இருப்பதால் அதுபற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அருண் ஜெட்லி அறிவுறுத்தியுள்ளார்.


Have a great day!
Read more...

English Summary

Finance Minister Arun Jaitley on Wednesday attributed the fall in rupee to global factors and stressed that the domestic unit was better off as compared to other currencies.