யார் இந்த எஸ். ராஜேஷ் குமார்? தமிழக அமைச்சரவையில் காங்கிரஸின் முகமாக மாறும் கிள்ளியூர் எம்எல்ஏ!
சென்னை: தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக் குழு தலைவர் ராஜேஷ் குமார் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். கிள்ளியூர் தொகுதியில் இருந்து 3வது முறையாக எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராஜேஷ் குமாரின் அரசியல் பயணம் குறித்து பார்க்கலாம்.
1967க்கு பின் தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தாலும், 2 தொகுதிகளில் இந்த இரு கட்சிகளாலும் ஒருமுறை கூட வென்றது கிடையாது. அந்த 2 தொகுதிகளில் ஒன்றுதான் கிள்ளியூர் தொகுதி. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்றே சொல்லலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர் மார்சல் நேசமணி. இவரின் முக்கிய தளபதியாக இருந்தவர் தான் பொன்னப்ப நாடார். 1952ல் கன்னியாகுமரி கேரளாவின் ஒரு பகுதியாக இருந்த போது, கிள்ளியூர் தொகுதியில் இருந்து சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தொடர்ந்து தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்த பின், 1962 சட்டசபைத் தேர்தலிலும் கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றார். 1971 சட்டசபைத் தேர்தலிலும் பொன்னப்ப நாடார் வெற்றி பெற்றார். இதன்பின் பொன்னப்ப நாடாரின் மகன் விஜயராகவன் கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ-வாக செயல்பட்டார்.
பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம் என்பதால், விஜயராகவனின் மகனான ராஜேஷ் குமாரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவருக்கு 2016 சட்டசபைத் தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தேர்தலில் ராஜேஷ் குமார் 51,494 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மீண்டும் 2021 தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்ட ராஜேஷ் குமார் 55,400 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2026 சட்டசபைத் தேர்தலில் 3வது முறையாக கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்ட ராஜேஷ் குமார் 1,311 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய காங்கிரஸ் சட்டசபைக் குழு தலைவராக இருந்த கு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் குரலாக ஒலிக்க, சட்டமன்றக் குழுவின் புதிய தலைவராக கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 2024 பிப்ரவரி 18 முதல் இன்று வரை சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த முகமாகவும், சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் மிகக் கண்ணியத்துடன் பணியாற்றி வருகிறார்.
இதன் மூலம் ராஜேஷ் குமாருக்கான முக்கியத்துவம் காங்கிரஸ் கட்சியில் அதிகரித்தது. இம்முறை காங்கிரஸ் கட்சி சார்பாக வென்ற 5 எம்எல்ஏக்களில் ராஜேஷ் குமார் தான் சட்டசபை அனுபவம் கொண்ட சீனியர். இதனால் மீண்டும் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் ராஜேஷ் குமாருக்கு இடம் கிடைத்துள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவரும் அமைச்சர்களாக நாளை பொறுப்பேற்க உள்ளனர். இதன் மூலமாக 59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications