போர் இல்லாமலேயே ஏன் எண்ணெய் விலை உயர்கிறது? 5 நாட்கள்: சந்தைகள் வெளிப்படையாக சொல்லாத உண்மை!
கடலில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை கண்டால் சுட டிரம்ப் உத்தரவு விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் பெரிய அளவில் அதிகரித்துள்ளன. இதனால் மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகத்தை மொத்தமாக முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக சர்வதேச எண்ணெய் விலைகள் தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்து வருகின்றன. தற்போது ஈரான் - அமெரிக்கா மத்தியில் போர் இல்லாவிட்டாலும், ஹார்முஸ்-ஐ சுற்றி நடக்கும் விஷயம் பெரிய போராக வெடிக்கும் சாத்தியக்கூறுகளை காட்டுகிறது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் டிரம்ப்-ன் அதிரடி உத்தரவால் காலையிலேயே கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன. இது தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாகும். ஈரான் ராணுவம் ஹார்முஸ் நீரிணைப்பில் ஒரு சரக்குக் கப்பலை கைப்பற்றும் காட்சியை, படகில் பயணித்து, சரக்கு கப்பலில் முகமுடியுடன் ஏறுவதைப் படமாக வெளியிட்டது. இந்த வீடியோ புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஈரான் தனது வான்பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணையை எதிர்த்து தாக்கியதாகவும் அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மத்தியிலான நேரடி மோதலுக்குள் செல்லும் அச்சத்தை அதிகரித்துள்ளன. இருப்பினும், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்து வந்த அறிவிப்புகளால் கச்சா எண்ணெய் சந்தை இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 1.23 டாலர் உயர்ந்து 106.3 டாலரை எட்டியது. அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) விலை ஒரு பேரல் 1.07 டாலர் அதிகரித்து 96.92 டாலராக இருந்தது. வியாழக்கிழமை இரு கச்சா எண்ணெய்யும் 3 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ஒரே நாளில் சுமார் 5 டாலர் அதிகரித்திருந்தன. இன்றும் இதே நிலை தொடர்கிறது.
இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஹார்முஸ்-ல் சரக்கு போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். ஆனால் ஹார்முஸ் நீரிணைப்பு வழியாக செல்லும் கப்பல்கள் ஈரானின் அனுமதி பெற வேண்டும் என்று ஈரான் வலியுறுத்துகிறது. அதேசமயம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த நீரிணைப்பின் மீது அமெரிக்கா "முழு கட்டுப்பாடு" கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்க கடற்படை ஈரான் துறைமுகங்கள் மற்றும் கப்பல்களை இலக்காகக் கொண்ட தடையைத் தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. இவை அனைத்தும் கச்சா எண்ணெய் போக்குவரத்தை முடக்கியுள்ளது.
போர் நிறுத்தம் நீடிக்குமா?
சந்தை நிபுணர்கள் தற்போதைய போர் நிறுத்தத்தின் நீடிப்பு குறித்து சந்தேகம் அடைந்துள்ளனர். ஹைடாங் ஃபியூச்சர்ஸ் அறிக்கையின்படி, தற்போதைய போர் நிறுத்தம் பெரிய மோதலுக்கான தயாராகும் காலமாக இருக்கலாம். ஏப்ரல் முடிவுக்குள் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைகள் பலனளிக்கத் தவறினால், எண்ணெய் விலை இந்த ஆண்டின் புதிய உச்சத்தைத் தொடலாம் என கணித்துள்ளது.
மேக்வாரி நிறுவனத்தின் கணிப்பின் படி, அடுத்த சில வாரங்களுக்கு இந்த விநியோக இடையூறுகள் தொடர்ந்தால் அல்லது அதிகரித்தால் விலை படிப்படியாக 110 டாலரை நோக்கி உயரும். நீண்டகால மோதல் ஏற்பட்டால் பிரெண்ட் விலை 150 டாலர் வரை உயரும் அபாயம் உள்ளது என கணித்துள்ளது.
எண்ணெய் விலை உயர்வு சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும். கச்சா எண்ணெய் விலை 100 டாலர் இருக்கும் வேளையில் மத்திய அரசு பெட்ரோல் விலையை 102 ரூபாயில் இருந்து 120-130 வரையில் உயர்த்துவதாக கணிப்புகள் வெளியாகி வரும் வேளையில் தற்போது கச்சா எண்ணெய் விலை 150 டாலர் வரையில் உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக கச்சா எண்ணெய் விலை உயர்வின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, பொருட்கள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு அதிகம். உலக சந்தைகளுக்கு இது பெரிய நிச்சயமற்ற தன்மையையும் ஏற்ற இறக்கத்தையும் ஏற்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications