ஸ்டாலினுக்கு இன்னொரு சிக்கல்.. கொளத்தூர் விவகாரத்தில் மீண்டும் அதிர்ச்சி.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சென்னை: இந்தாண்டு கொளத்தூர் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டிற்கே அதிர்ச்சி கொடுத்தது என்பதைச் சந்தேகமே இல்லாமல் சொல்ல முடியும். இதற்கிடையே கொளத்தூர் தேர்தல் முடிவுகள் குறித்த பழைய வழக்கு ஒன்று இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. இந்த வழக்கின் பின்னணி என்ன.. ஏன் இப்போது இது சர்ச்சையாகியுள்ளது என்பதை நாம் பார்க்கலாம்!
தமிழ்நாட்டில் இந்தாண்டு சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது கொளத்தூர் தான். அங்குப் போட்டியிட்டிருந்த மாஜி முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தோல்வி அடைந்தார். தவெக வேட்பாளரிடம் சுமார் 8,800 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பழைய கொளத்தூர் வழக்கு
இது ஒரு பக்கம் இருக்கக் கடந்த 2011ம் ஆண்டு சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இப்போது ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. அதாவது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முதலிலிருந்து விசாரிக்கப்படுமாம்.. புதிய அமர்வின் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலின் போது கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வென்றதைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு கடந்த 2017 ஜூன் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அதே ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
என்ன நடந்தது
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, நீண்ட இழுபறிக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 19 அன்று நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் இறுதித் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர். விசாரணையின் போது, சைதை துரைசாமி தரப்பு வழக்கறிஞர்கள் போதிய தயாரிப்பு இன்றி ஆஜரானதால் நீதிபதிகள் தங்களின் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினர். இப்படியே ஆதாரத்தை சமர்ப்பிக்காமல் இருந்தால் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டி இருக்கும் என்றே கூறினர்.
மீண்டும் விசாரணை
தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில், இப்போது வழக்கில் பெரிய ட்விஸ்ட் நடந்துள்ளது. அதாவது வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் அமர்வு தற்போது இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை முழுமையான மறுவிசாரணைக்காக புதிய அமர்வின் கீழ் தலைமை நீதிபதி மீண்டும் பட்டியலிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது..
உச்ச நீதிமன்ற நடைமுறைகளின்படி, ஒரு வழக்கின் வாதங்கள் முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்படும் போது, அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளில் யாராவது ஒருவர் ஓய்வுபெற உள்ளார் என்றால், அதற்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஒருவேளை தீர்ப்பு வழங்கப்படாமல் நீதிபதி ஓய்வுபெறும் பட்சத்தில், அந்த வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றப்பட்டு மீண்டும் முதலிலிருந்து விசாரிக்கப்படுவதுதான் வழக்கம்.
பெரிய கேள்வி
ஆனால், இந்த அமர்வைப் பொறுத்தவரை உள்ள நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி வரும் ஜூன் 28ம் தேதி தான் ஓய்வு பெறுகிறார். இன்னும் ஒரு மாதம் டைம் இருக்கிறது. மற்றொரு நீதிபதி 2029ல் தான் ஓய்வு பெறுகிறார். அப்படியிருக்கும்போது எதற்காக மீண்டும் முதலில் இருந்து விசாரணைக்குக் கேட்டுக்கொண்டுள்ளனர் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது.
ஏற்கனவே பிப்ரவரி விசாரணையின் போதே, சைதை துரைசாமி தரப்பிடம் வலுவான ஆதாரங்கள் இல்லை என நீதிபதிகள் அதிருப்தி காட்டியிருந்தனர். தற்போது புதிய அமர்வு விசாரிக்கும் நிலையில், அப்போதாவது சைதை துரைசாமி தரப்பு ஏதேனும் வலுவான ஆதாரங்களை முன்வைக்குமா, அல்லது காலதாமதத்தைக் கருத்தில் கொண்டு இந்த மேல்முறையீட்டு மனு சுலபமாகத் தள்ளுபடி செய்யப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications