டாலர் வெளியே.. தங்கம் உள்ளே.! திட்டம் மொத்தமா மாறிடுச்சு.. ரேட் உயர இதுவே காரணம்.. ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை இப்படித் தாறுமாறாக உயர்ந்து வருவதற்கு என்ன காரணம் என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கொரோனா சமயத்தில் உச்சத்திற்குப் பறந்த தங்கம் விலை அதன் பிறகு குறையவே இல்லை. அடுத்தடுத்து நடக்கும் உலக நிகழ்வுகள், புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வந்தது.

இன்றைய தங்கம் விலை
அதிலும் குறிப்பாக டிரம்ப் அதிபரான பிறகு, தங்கம் விலையை மேலும் புதிய உச்சத்திற்குக் கொண்டு போய்க்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே கடந்த 3 நாட்களாக எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்தது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9015க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் இப்போது ரூ.560 உயர்ந்து, ரூ.72,120ஆக உள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்களால் அதை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தங்கம் விலை உயர்வுக்கு உண்மையில் என்ன காரணம் என்பதைப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், வரும் காலங்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக தனியார் டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. இன்றும் கூட தங்கம் விலை உயர்ந்துள்ளது. 3% ஜிஎஸ்டி மற்றும் ஸ்டாம்பிங் சார்ஜ் சேர்த்தால் 24 கேரட் தங்கம் ரூ.10 ஆயிரத்தைத் தாண்டிவிடும். ஆபரணத் தங்கமும் காயினாக வாங்கினால் கூட ரூ.9500க்கு போய்விட்டது. நகை என்றால் நிச்சயம் கிராமுக்கு ரூ.10 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இது இன்னும் உயரவே வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
டாலர் வெளியே
நான் 3, 4 ஆண்டுகளாகவே தங்கம் விலை உயரும் எனத் தொடர்ந்து சொல்லி வருகிறேன். தங்கம் விலை உயரப் பெரிய காரணம் எல்லாம் எதுவும் இல்லை. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. பல்வேறு உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களிடம் உள்ள டாலரை விற்றுவிட்டுத் தங்கத்தை வாங்கி வருகிறது. சீனாவும் ரஷ்யாவும் தங்கத்தை வாங்கிக் கொண்டு இருக்கும் வரை தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.
தங்கம் உள்ளே
ரஷ்யா வசம் இருந்த டாலரை அமெரிக்கா முடக்கியது. அப்போது முதல் தான் டாலருக்கு பதிலாகத் தங்கத்தின் மீது உலக நாடுகள் ஆர்வம் காட்டத் தொடங்கின. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கின" என்றார்.
உலக நாடுகள்
அதாவது உக்ரைன் ரஷ்யா இடையே போர் வெடித்தபோது ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளையும் பொருளாதாரத் தடைகளையும் விதித்தன. அதில் முக்கியமாக ரஷ்யா வசம் இருந்த டாலரை பயன்படுத்த முடியாத வகையில் அமெரிக்கா முடக்கியது. சர்வதேச வர்த்தகத்திற்கு டாலரை ரஷ்யா வைத்திருந்த நிலையில், அதை பைடன் நிர்வாகம் யாரும் எதிர்பார்க்காத வகையில் முடக்கியது. எங்கு வரும் காலங்களில் தங்களுக்கும் இதுபோல நடக்குமோ என அஞ்சியே உலகின் பல்வேறு நாடுகளும் டாலருக்கு பதிலாகத் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications