"தங்கத்தில் காசு வராது.." வெடியை எடுத்து வீசும் ஆனந்த் சீனிவாசன்.. முழுசா படிங்க காரணம் புரியும்
சென்னை: கடந்த வாரம் சில நாட்கள் குறைந்த தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், பலரும் வெள்ளியில் முதலீடு செய்யலாமா என்றும் யோசித்து வருகிறார்கள். இதற்கிடையே தங்கம், வெள்ளி இரண்டையும் ஒப்பீட்டு பேசிய ஆனந்த் சீனிவாசன், தங்க முதலீடு தொடர்பாக மிக முக்கிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.
கடந்த பல வாரங்களாகவே உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த வாரம் சட்டென சரிந்தது. தொடர்ச்சியாக 5 நாட்கள் எந்தவொரு ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் தங்கம் விலை இருந்தது. ஆனால், விட்ட இடத்தை பிடிப்பது போல மீண்டும் கடந்த 3 நாட்களாக உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை
கடந்த ஒரு 10 நாட்களில் மட்டும் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.150 வரை அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 19ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8290க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அது ரூ.8340க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை மட்டுமின்றி வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.114க்கு விற்கப்பட்டது. இன்றைய தினமும் தங்கம் விலை ஏற்றம் தொடர்ந்தது. இன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 160 உயர்ந்தது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ 8,360-க்கும் ஒரு சவரன் 66,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது
ஆனந்த் சீனிவாசன்
தங்கம் விலை தான் எங்கோ புதிய உச்சத்திற்குப் போய்விட்ட நிலையில், இப்போது வெள்ளியில் முதலீடு செய்யலாமா.. அப்படிச் செய்தால் தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் வரும் காலங்களில் அதிகரிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் வரும். இதற்கான காரணத்தைப் பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தங்கம் vs வெள்ளி
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "என்னைப் பொறுத்தவரைத் தங்கத்தைச் சேமிப்பாக வாங்கி வைப்பது மட்டுமே சிறந்தது. வெள்ளியைப் பொறுத்தவரை அதில் ஏற்ற இறக்கம் பெரிதாக இருக்கும்.. மேலும், அதற்கு மேக்கிங் சார்ஜ் அதிகம், சேமித்து வைப்பதும் கடினம்..
தங்கத்தில் காசு வராது
சிலர் வாரன் பபெட் தங்கத்தை விட்டுவிட்டு வெள்ளியில் முதலீடு செய்து காசு பார்த்ததாக சொல்வார்கள். ஆனால், அது வேறு காலம்.. 1970களில் ஹண்ட் பிரதர் காலத்தில் வாரன் பபெட் இதைச் செய்தார். அப்போது சந்தையில் வெள்ளிக்கான தேவை இருந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு காசு பார்த்தார். ஆனால், அவரை பொறுத்தவரைத் தங்கம், வெள்ளி இரண்டுக்கும் ஒரே லாஜிக். அதாவது இரண்டுமே ஒரு சொத்து. அதை லாக்கரில் வைத்து நான் தான் செலவு செய்ய முடியும். அதில் இருந்து காசு (free cash flow) வராது. இதனால் இரண்டுமே வேஸ்ட் என்பதே வாரன் பபெட் கருத்து.
தங்கத்தை போல வேறு எதுவும் உதவாது
ஆனால், நாம் வாரன் பபெட் சொன்னதைக் கேட்டு சூடு போடக்கூடாது. அவர் பெரிய முதலீட்டாளர். நாம் சாதாரண மிடில் கிளாஸ். நாளை எதாவது ஒரு செலவு வந்துவிட்டது என வைத்துக் கொள்வோம். மருத்துவ காப்பீடு இருந்தாலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் போனால் நாம் தான் கை காசை போட வேண்டும். அதுபோன்ற காலங்களில் தங்கத்தைப் போல வேறு எதுவும் கைகொடுக்காது. மருத்து செலவு, குழந்தையின் பள்ளி கட்டணம், கல்லூரி கட்டணம் என எதுவாக இருந்தாலும் தங்கம் கையில் இருந்தால் அதை அடகு வைத்து உடனே பணத்தைப் புரட்டலாம்" என்றார்.
விலை எப்படி இருக்கும்
தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்துப் பேசிய அவர், "அமெரிக்காவில் ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் முதல்முறையாக 3100 டாலரை தாண்டியுள்ளது. கரண்ட் மார்க்கெட்டில் 3065 டாலர் வரை சென்றது. இதனால் இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தற்போது நமது நாட்டில் விற்கும் தங்க விலையுடன் 6% சேர்த்தால் கிட்டதட்ட ரூ.9000 வந்துவிடும். அதாவது காயினாக வாங்கினாலும் 3% வரை சார்ஜ்ஸ் கட்ட வேண்டும். அதுபோக 3% ஜிஎஸ்டி இருக்கிறது.
24 கேரட் தங்கம் ஏற்கனவே ரூ.9000 தாண்டிவிட்டது. கூடிய சீக்கிரம் அது ரூ.10 ஆயிரத்தைத் தாண்டிவிடும். 22 கேரட்டும் அதன் பின்னர் உடனே ரூ.10,000 தாண்டிவிடும். தங்கம் விலை அதிகரிக்க இருக்கும் காரணங்கள் வலுவாக இருக்கிறது. எனவே, தங்கம் விலை குறைவதற்கு எந்தவொரு அறிகுறியும் இல்லை" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications