நீங்க கில்லியாக இருந்தாலும்.. தப்பிக்க முடியாது ராஜா.. கையில் பணத்தை சேர்த்து வைச்சுக்கோங்க.. உதவும்!
உலகின் முன்னணி தணிக்கை நிறுவனமான கேபிஎம்ஜி அமெரிக்காவில் தனது ஆடிட் பார்ட்னர்களில் 10 சதவீத பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. மெட்டா நிறுவனமும் 10 சதவீத ஊழியர்களை குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் 8750 ஊழியர்களை வாலெண்டரி பை-அவுட் வாங்கிக்கொண்டு பணியை விட்டு செய்ய உத்தரவிட்டு உள்ளது.
இந்த 3 நிகழ்வுகளும் ஒன்றையே சுட்டிக்காட்டுகின்றன, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இனி வேலை பாதுகாப்பு இல்லை. இதைவிட முக்கியம் நீங்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் சரி, எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் சரி, உங்கள் வேலை ஆபத்தில் உள்ளது.

உதாரணமாக கேபிஎம்ஜி போன்ற உலகின் பிக் 4 கம்பெனியில் பார்ட்னர் என்ற நிலையை அடைவது எந்த அளவுக்கு கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களுக்கே இந்த நிலை என்றால், பொதுவான ஊழியர்களின் நிலை என்னவாக இருக்கும்?
இதேபோல மெட்டாவில் பணியாற்றும் சிறந்த சாப்ட்வேர் இன்ஜினியர்களும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றி நிறுவனத்திற்குள் அதிக செல்வாக்கு கொண்டவர்கள் தான் தற்போது பணிநீக்க அலையில் சிக்கியுள்ளனர். இது தற்செயலான நிகழ்வு அல்ல. தொழில்துறை முழுவதும் நடைபெறும் பெரிய மாற்றத்தின் அறிகுறி இது. இதனால் நீங்கள் கில்லியாக இருந்தாலும் இந்த அலையில் இருந்து தப்பிக்க முடியாது என்பது தெளிவாகிறது.
ஏன் இந்த பணிநீக்க அலை?
முதல் காரணம் போட்டி
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஒவ்வொரு துறையிலும் புதியவர்களுக்கு வாய்ப்பை அதிகரித்துள்ளது. தணிக்கை, ஆலோசனை சேவைகள் போன்ற துறைகளில் கூட ஏஐ குறைந்த விலையில், விரைவாக, மேம்பட்ட சேவை வழங்க உதவுகிறது.
இதனால் ஒருப்பக்கம் வர்த்தகம் குறைகிறது, மறுபுறம் பழையபடி நிறுவனங்களால் அதிக விலை நிர்ணயம் செய்யும் சக்தி குறைகிறது. இதனால் நிறுவனத்தை காப்பாற்றவும், தொடர்ந்து இயக்கவும் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்திக்கொண்டு செலவுகளை குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. ஊழியர் செலவு தான் பெரும்பாலான நிறுவனங்களின் முக்கிய செலவு என்பதால், உலகளவில் அனைத்து துறையிலும் பணிநீக்கம் தற்போது மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
இரண்டாவது காரணம் முதலீடு தேவை
போட்டியை சமாளிக்க நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தில் பெரும் தொகையை செலவழிக்க வேண்டியுள்ளது. பெரிய தணிக்கை நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் முதலீடு செய்து சொந்த மென்பொருள் உருவாக்குகின்றன.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் டேட்டா சென்டர்களுக்கு பல பில்லியன் டாலர்கள் செலவழிக்கின்றன. இந்த முதலீட்டுக்கு (கேபெக்ஸ்) பணம் தேவைப்படும்போது, செயல்பாட்டு செலவுகள் (ஓபெக்ஸ்) குறைக்கப்படுகின்றன. ஊழியர் குறைப்பு அதற்கு விரைவான வழி.
மூன்றாவது காரணம் தானியங்கி முறை
ஏஐ வேலைகளை வேகமாக ஆட்டோமேட் செய்கிறது. புதிய வருவாய் உருவாகும் வேகத்தை விட ஊழியர்கள் வேலையிழக்கும் வேகம் அதிகமாக உள்ளது. பல நிபுணர்கள் ஏஐ இறுதியில் அதிக வேலைகளை உருவாக்கும் என்று நம்பினாலும், தற்போது அந்த பலன் தெரியவில்லை.
நான்காவது காரணம் கொரோனா கால விளைவு
கொரோனா லாக்டவுன் காலத்தில் பணம் எளிதாக கிடைத்தது, காரணம் வட்டி குறைவாக இருந்தது. இதேபோல் திறமையானவர்கள் குறைவாக இருந்ததால், பல நிறுவனங்கள் தேவைக்கு அதிகமாக ஊழியர்களை பணியமர்த்தின. இப்போது அந்த அதிகப்படியான ஊழியர்களை குறைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் கடனுக்கான வட்டியும் அதிகரித்து வருகிறது. இதனால் உடனடி செலவு குறைப்புக்கு பணிநீக்கம் தான் முதன்மையான வழியாக உள்ளது.

உங்கள் வேலை உங்களுக்கு மட்டுமே
இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. எனவே ஒவ்வொரு ஊழியரும் தனது எதிர்காலத்தை தானே திட்டமிட வேண்டும். உங்கள் நிறுவனத்துக்கு வெளியே வலுவான கான்டெக்ட் நெட்வொர்க்-ஐ உருவாக்குங்கள். சொந்த தொழில் தொடங்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். பணத்தை சேமியுங்கள். எதிர்காலத்தில் வேலை இழப்பு ஏற்பட்டாலும் தயாராக இருங்கள்.
ஏஐ யுகத்தில் வேலை தேடுபவராக இல்லாமல், வாய்ப்புகளை உருவாக்குபவராக மாற வேண்டிய காலம் இது. தற்போதைய சூழலை புரிந்துகொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பவர்களே இந்த அலையில் இருந்து மீண்டு கரையை அடைவார்கள்.
இது பலருக்கும் எச்சரிக்கையாகவும், எரிச்சலூட்டும் வகையில் இருந்தாலும் இதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை. முடிந்தால் உங்களுடைய பழைய கம்பெனி மேனேஜரிடம் நிலைமையை விசாரித்து பாருங்கள், உங்களுடைய தற்போதைய மேனேஜர் கள நிலவரத்தை உங்களிடம் முழுமையாக சொல்ல முடியாத நிலையில் இருக்கலாம்.












Click it and Unblock the Notifications