1 சவரன் தங்கம், 25 லட்சம் காப்பீடு! விஜய்யால் சாத்தியமா? பணம் எங்கிருந்து வரும்? கணக்கு கேள்விக்குறி
தலைவர் விஜய், 2026 தேர்தல் வாக்குறுதிகளாக பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை, மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், இதுகுறித்த எதிர்பார்ப்புகள் தற்போது மீண்டும் எழ துவங்கி உள்ளன.
கடந்த வாரம் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், "ஏகப்பட்ட வாக்குறுதிகளை சொல்லி இருக்கிறார் விஜய்.. தேர்தல் வாக்குறுதிகள் மிகவும் பிரம்மாண்டமானவை, அவற்றை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன.

1 பவுன் தங்க நகை
திருமணமாகும் பெண்களுக்கு 1 பவுன் தங்க நகை தரவேண்டும்.. 60 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய், முதியோர் உதவித்தொகை 3,000 ரூபாய் போன்ற வாக்குறுதிகள் உள்ளன.. தங்கம் விலை ஒரு லட்சம் 25 ஆயிரம் நெருங்கும் நிலையில், இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டு ஒரு பவுன் தங்கம் வழங்குவதற்கான நிதி எங்கிருந்து வரும்?
இலவசப் பேருந்து பயணம், மாநிலம் முழுவதும் சாத்தியமா? ஏற்கனவே போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலைகள் உயர்ந்து வரும் சூழலில், இலவச சிலிண்டர் வழங்குவது எப்படி சாத்தியம்.
இவை அனைத்தும் நீண்டகாலத் திட்டங்கள் கிடையாது. ஆட்சிக்கு வந்த அடுத்த 2 அல்லது 3 மாதங்களிலேயே மக்கள் இவற்றைச் செய்யும்படி எதிர்பார்ப்பார்கள்" என்று சந்தேகம் கிளப்பியிருந்தார்.
விஜய் தந்த தேர்தல் வாக்குறுதிகள்
இந்நிலையில் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்த தேர்தல் வாக்குறுதிகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதிநிலைக்கும், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவைப்படும் நிதிக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளி பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, பிரபல சேனல் ஒன்றுக்கு பேசிய பொருளாதார ஆய்வாளர் டி.வி.சோமு, தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், இத்தகைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
பயிர்க்கடன் தள்ளுபடி சாத்தியமா
ஒவ்வொரு தேர்தலிலும் அந்தந்தக் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகளையும் அதற்கான செலவுகளையும் தான் கணக்கிடுவது வழக்கம் என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் மொத்த பட்ஜெட்டே சுமார் 4 லட்சம் கோடி ரூபாய்தான் என்றும், ஆனால் தவெக-வின் திட்டங்களை நிறைவேற்ற மட்டும் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்றும் கூறினார். இதற்கு "வாய்ப்பே இல்லை ராஜா... வாய்ப்பே இல்லை" என்று அடித்து கூறுகிறார்.
25 லட்சம் ரூபாய் காப்பீடு
தொடர்ந்து பேசிய ஆய்வாளர் சோமு, ஒரு குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கினால் அதற்கான பிரீமியம் தொகையே ஆண்டுக்கு 60,000 ரூபாய் வரும், இதன் மூலம் ஒரு திட்டத்திற்கே 1.30 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாகப் பயணிப்பது நல்லது என்றாலும், மாநிலம் முழுவதும் அனைவருக்குமே இலவசம் என்றால் அதன் இழப்பு பல ஆயிரம் கோடிகளாக இருக்கும்" என்று சுட்டிக்காட்டினார்.
ஆண்டுக்கு 6 லட்சம் திருமணங்கள் நடக்கும் சூழலில் ஒரு பவுன் தங்கம் வழங்குவதற்கும் மிகப்பெரிய தொகை தேவைப்படும், . ஒருவேளை விஜய் தனது சொந்தப் பணத்தில் இதைச் செய்யப் போகிறார் என்றால், ஆண்டுக்கு 10 லட்சம் கோடி ரூபாயை அவர் சொந்தப் பணத்திலிருந்து கொடுக்க வேண்டும் என்றும் தன்னுடைய கருத்தாக பொருளாதார ஆய்வாளர் சோமு தெரிவித்துள்ளார்.
எனினும், முதலமைச்சராகப் பொறுப்பேற்க போகும் விஜய், இவ்வளவு பெரிய நிதிச் சுமையை எவ்வாறு கையாளுவார்? எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்? என்பது அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பையும் சஸ்பென்ஸையும் ஏற்படுத்தியுள்ளது...!!












Click it and Unblock the Notifications