1 கோடி ரொக்கம், சொகுசு கார் கொடுத்தும் அடங்காத பேராசை! கணவர் டார்ச்சரால் தீபிகா எடுத்த விபரீத முடிவு
லக்னோ: ஒரு கோடி ரூபாய் ரொக்கம், சொகுசு கார் கொடுத்த பிறகும்.. அது போதாது எனச் சொல்லித் திரும்பத் திரும்ப வரதட்சணை கேட்டு இளம் பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அப்பாவிப் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் வரதட்சணை வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகவே இருக்கிறது. இருந்த போதிலும், வரதட்சணை கொடூரம் என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் பலரும் கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

வரதட்சணை மரணம்
அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது தற்போது உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் நடந்துள்ளது. இங்கு ஒரு கொடூரமான வரதட்சணை மரணம் அரங்கேறியுள்ளது. திருமணமான வெறும் 14 மாதங்களில் 24 வயது இளம்பெண் ஒருவர், கணவர் மற்றும் மாமனாரின் தொடர் சித்திரவதை தாளாமல் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கோடி ரொக்கம்
நொய்டாவின் எக்கோடெக்-3 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜல்புரா கிராமத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. தீபிகா என்ற 24 வயது பெண்ணுக்கும், ரித்திக் என்பவருக்கும் கடந்த 14 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது தீபிகாவின் குடும்பத்தினர் பெரும் தொகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ₹1 கோடி ரொக்கம் மற்றும் ஒரு சொகுசு ஃபார்ச்சூனர் எஸ்யுவி கார் ஆகியவற்றை வரதட்சணையாகக் கொடுத்துக் கோலாகலமாகத் திருமணத்தை நடத்தியுள்ளனர்.
ஆனாலும், ரித்திக் மற்றும் அவரது தந்தை மனோஜ் ஆகியோரின் வரதட்சணை ஆசை அடங்கவில்லை. திருமணத்திற்குப் பிறகும் தீபிகாவைத் தொடர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர் அச்சுறுத்தல்கள் மற்றும் கொடுமைகளால் மனமுடைந்த தீபிகா, நேற்று மே 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
போலீஸ் விசாரணை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீபிகாவின் உடலைக் கைப்பற்றிப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது உடலில் பல கடுமையான காயங்கள் கண்டறியப்பட்டன. அவர் இறப்பதற்கு முன்பு மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார் என்பதை இந்த அடையாளங்கள் காட்டுவதாகப் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மகளின் மரணத்தால் நிலைகுலைந்து போன தீபிகாவின் தந்தை, காவல் நிலையத்தில் அளித்த எழுத்துப்பூர்வப் புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக முயன்ற கணவர் ரித்திக் மற்றும் மாமனார் மனோஜ் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தீபிகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கின் பின்னணி குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதனை
₹1 கோடிப் பணம், சொகுசு கார் என அள்ளி அள்ளிக் கொடுத்த போதிலும் மீண்டும் மீண்டும் வரதட்சணை கேட்டதால் அப்பாவி பெண்ணின் உயிர் போய் இருக்கிறது. சட்டம் எவ்வளவு கடுமையானாலும், இந்த காட்டுமிராண்டித்தனமான குணம் மாறாதவரை இதுபோன்ற கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. படித்த குடும்பங்களிலும் கூட இந்த அவலம் தொடர்வதுதான் வேதனை!
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications