கரூர் மக்கள் புலம்பல்.. விஜய் நடவடிக்கை எடுப்பாரா.. இனி ஒவ்வொரு நாளும் கஷ்டம்!
தமிழ்நாட்டின் முக்கிய டெக்ஸ்டைல் மற்றும் ஏற்றுமதி மையங்களில் திருப்பூர் முக்கியமானதாக இருந்தாலும், பல பகுதிகள் திருப்பூர்-க்கு போட்டியாகவும், வேகமாகவும் வளர்ந்து வருகிறது. இப்படி டெக்ஸ்டைல் துறையில் கொடிக்கட்டி பறந்து வரும் கரூர் பகுதியில் டெக்ஸ்டைல் தொழில் நிலைமை தற்போது தீவிர நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக டெக்ஸ்டைல் பொருட்களின் உற்பத்தி செலவுகள் பெரிய அளவில் உயர்ந்துள்ளதால், தொழிற்சாலைகளின் லாபம் ஈட்டுவது குறைந்தது மட்டும் அல்லாமல் பல தொழிற்சாலைகள் நஷ்டத்திலும், குறைந்த ஊழியர்களுடன் இயங்க வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது.

இதுக்குறித்து டெக்ஸ்டைல் தொழில் உரிமையாளர்கள் கூறுகையில், மேற்கு ஆசியாவில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் முடக்கம் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள டெக்ஸ்டைல் தொழிலையும் மறைமுகமாக பாதித்துள்ளது என கூறுகின்றனர். இத்துறையின் பாதிப்பை களைய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
உலகளவிலான பதற்றம் - உள்ளூர் தொழிலுக்கு அடி
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் எரிபொருள் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதால், டெக்ஸ்டைல் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பல மூலப்பொருட்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. முக்கியமாக ஆடை தயாரிக்க பயன்படுத்தப்படும் பாலியஸ்டர், டெக்ஸ்டைல் ரசாயனப் பொருட்கள், சாயங்கள், பாலித்தீன் உறைகள் மற்றும் பேக்கேஜிங் பொருட்கள் ஆகியவற்றின் விலை 30 முதல் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கரூர் தொழில் மையங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தொழிற்சாலைகள் இயங்குவதற்கே அதிக செலவு ஏற்படுகிறது.
பருத்தி நூல் விலை
டெக்ஸ்டைல் உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான பருத்தி நூலின் விலையும் இந்தியாவில் 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த உயர்வு இறுதி ஆடை உற்பத்தி செலவை நேரடியாக பாதிக்கிறது. மத்திய அரசு பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று இத்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேற்கு ஆசிய போர் பதற்றம் காரணமாக சர்வதேச கப்பல் போக்குவரத்து தாமதமடைந்துள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் சரியான நேரத்தில் வராததால், சாயம், அச்சு போடுதல் உள்ளிட்ட பணிகளின் செலவு அதிகரித்துள்ளது. உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் விற்பனையாளர்கள் கூடுதல் தொகையை கொடுக்க மறுக்கும் காரணத்தால் உற்பத்தி முடங்கியுள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறை
செலவு உயர்வுடன் சேர்த்து, கரூர் டெக்ஸ்டைல் தொழிலில் தொழிலாளர் பற்றாக்குறையும் தீவிரமாக உள்ளது. பல தொழிற்சாலைகளுக்கு போதுமான தொழிலாளர்கள் கிடைக்காததால் உற்பத்தி வேகம் குறைந்துள்ளது. விநியோக காலக்கெடுக்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சிறிய நிறுவனங்கள் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
செலவு அதிகரிக்கிறது, ஆனால் விற்பனை விலையை உயர்த்த முடியவில்லை. இந்த நிலை நீண்டகாலம் தொடர்ந்தால், சில தொழிற்சாலைகள் உற்பத்தியை குறைக்கவோ, விரிவாக்கத் திட்டங்களை ஒத்திவைக்கவோ அல்லது நிதி நெருக்கடியை எதிர்கொள்ளவோ வேண்டிய நிலை ஏற்படும்.
கரூர் டெக்ஸ்டைல் தொழில் தற்போது தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கும் துறையாக உள்ளது. இந்த நெருக்கடி தொடர்ந்தால் பல லட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதை சரி செய்ய மத்திய அரசை தாண்டி மாநில அரசின் உதவிகளையும் கரூர் டெக்ஸ்டைல் தொழிற்துறையினர் நாடியுள்ளனர். இந்த நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் கரூர்- திருப்பூர் டெக்ஸ்டைல் துறையின் நெருக்கடியை எத்தகைய நடவடிக்கையை எடுக்கும்?














Click it and Unblock the Notifications