விஜய்யை தடுக்க திமுக, அதிமுக ரகசிய கூட்டணி? மாணிக்கம் தாகூர் இப்படி சொல்றாரே? தமிழக அரசியலில் பரபர
சென்னை: ஒரே ஒரு மனிதனை வீழ்த்த, வாழ்நாள் எதிரிகளான இரு திராவிடக் கட்சிகளும் ஒரே இரவில் ஒன்றிணைந்துள்ளன என்று காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.. மதச்சார்பின்மை பேசிவிட்டு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் பி-டீமுடன் கைகோர்ப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என்றும் அவர் விளாசியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத பல அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு, காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை முதன்முதலாகத் தெரிவித்தது.

காங்கிரஸ் தந்த பலம்
தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு தொகுதியை அவர் முறைப்படி ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது. இதனால் தவெகவின் பலம் 107 ஆகக் குறையும் சூழலில், காங்கிரஸின் 5 இடங்களையும் சேர்த்து அக்கட்சியின் பலம் 112 ஆக உள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை ஆளுநர் மாளிகையில் நிரூபிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
ராமதாஸ் விடுத்த கருத்து
இந்த இக்கட்டான சூழலில், தவெக ஆட்சி அமைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உடனடியாக தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், அமையவுள்ள புதிய அரசுக்கு அவர் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதே கருத்தை திமுக தலைவர் ஸ்டாலினும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது அரசியல் களம் தவெகவை சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது.
ஒரே ஒரு மனிதனை வீழ்த்த..
இந்நிலையில், தமிழக அரசியலின் "பரம எதிரிகள்" என்று கருதப்படும் திமுகவும் அதிமுகவும் கைகோர்க்கத் துணிந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் புயலைக் கிளப்பியுள்ளன. தவெக ஆட்சி அமைப்பதைத் தடுப்பதற்காக இரு திராவிடக் கட்சிகளும் ரகசியமாக ஒன்றிணைந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
"ஒரே ஒரு மனிதனை வீழ்த்த, வாழ்நாள் எதிரிகளான இரு திராவிடக் கட்சிகளும் ஒரே இரவில் ஒன்றிணைந்துள்ளன" என்று அவர் கடுமையாக சாடியுள்ளார். மதச்சார்பின்மை பேசும் கட்சிகள், பாஜகவின் நிழலாகக் கருதப்படும் தரப்புடன் கைகோர்ப்பதை ஏற்க முடியாது என்றும், 'நிலையான அரசு' என்பது வெறும் அதிகாரத்தைக் காக்கும் மொழி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
108 எம்எல்ஏக்களும் ராஜினாமா?
மறுபுறம், திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டால், அதை முறியடிக்க தவெக அதிரடி முடிவை எடுத்துள்ளது. தவெகவின் 108 எம்.எல்.ஏ-க்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகத் தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெகவின் இந்த "மாஸ்" முடிவு, தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் வருமா அல்லது தவெக அரியணை ஏறுமா என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் எகிற வைத்துள்ளது. அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றக்கூடும் என்பதால், ஒட்டுமொத்த மாநிலமும் ஆளுநர் மாளிகையின் முடிவை நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications