தமிழ்நாட்டில் "பூச்சாண்டி" அரசியல்.. விஜய் முதல்வரான நிலையில்.. ஸ்ரீதர் வேம்பு முக்கியமான பதிவு
சென்னை: மத்தியில் பா.ஜனதா ஆட்சியில் இருப்பதை வைத்து, தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்துக் கட்சிகளும் அவர்களை ஒரு 'அரக்கனைப்' போலச் சித்தரித்து அரசியல் செய்து வருகின்றன. குறிப்பாக, பிரதமர் மோடியைத் தாக்குவதையே திமுக தனது ஒரே கொள்கையாகக் கொண்டுள்ளது. ஒருவேளை காங்கிரஸ் கட்சியுடன் எடப்பாடி தலைமையிலான அதிமுக சென்றிருந்தால், அவர்களும் இதே பாணியைத் தான் பின்பற்றியிருப்பார்கள் என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் "பூச்சாண்டி" அரசியலும் - பாரதத்தின் ஒரு அங்கமான தமிழகமும்.. என்ற பெயரில் பாஜகவின் தீவிர ஆதரவாளரான ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில் "மத்தியில் பா.ஜனதா ஆட்சியில் இருப்பதை வைத்து, தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்துக் கட்சிகளும் அவர்களை ஒரு 'அரக்கனைப்' போலச் சித்தரித்து அரசியல் செய்து வருகின்றன. குறிப்பாக, பிரதமர் மோடியைத் தாக்குவதையே திமுக தனது ஒரே கொள்கையாகக் கொண்டுள்ளது. ஒருவேளை காங்கிரஸ் கட்சியுடன் எடப்பாடி தலைமையிலான அதிமுக சென்றிருந்தால், அவர்களும் இதே பாணியைத் தான் பின்பற்றியிருப்பார்கள்.

இதை தமிழில் "பூச்சாண்டி காட்டுதல்" என்று சொல்வோம். சிறு வயதில் எனது பாட்டி, நான் குளத்திற்குச் சென்று நீந்தக் கூடாது என்பதற்காக "அந்த மரத்தில் பேய் இருக்கிறது, அங்கு போகாதே" என்று பயமுறுத்துவது போல, இங்கு 'மோடி' என்ற பெயரைக் காட்டி பூச்சாண்டி அரசியல் செய்கிறார்கள்.
எனவே, யாராவது "பாஜகவைத் தமிழகத்திற்குள் விடக்கூடாது" என்று பேசினால், அதன் அர்த்தம் "அவர்கள் ஏதோ கொள்கை ரீதியாகப் பேசுகிறார்கள்" என்பதல்ல; தங்களின் "இரட்டை ஆட்சி அதிகாரச் சுவைக்கு" எந்தப் போட்டியும் வந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் உண்மையான எண்ணம். ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறது, அந்த மாநிலங்கள் மிகச்சிறப்பாக முன்னேறி வருகின்றன. அப்படியிருக்க, தமிழ்நாடு மட்டும் எப்படி "தனித்துவமானது" என்று சொல்ல முடியும்?
உண்மையில் தமிழகத்தில் உள்ள இக்கட்சிகள் (திமுக அல்லது எடப்பாடி திமுக), பா.ஜனதாவுடன் ரகசியமாகவோ அல்லது பகிரங்கமாகவோ கூட்டணி வைத்துக்கொண்டு, அதே நேரத்தில் தமிழகத்தில் அக்கட்சியை வளரவிடாமல் நசுக்க நினைக்கின்றன.
முன்னோக்கிச் செல்லும் வழி என்ன?
நீண்ட கால அடிப்படையில் அர்ப்பணிப்புடன் போராடக்கூடிய, துடிப்புள்ள இளைஞர்களைத் தலைமையேற்கச் செய்ய வேண்டும்.
கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்த வேண்டும்.
இந்த "பூச்சாண்டி" அரசியலைப் புறக்கணிக்க வேண்டும்.
"தமிழ்நாடு தனித்துவமானது" (தனிநாடு போன்ற பிம்பம்) என்று பேசுபவர்களுடன் கூட்டணி வைக்கக் கூடாது. தமிழ்நாடு என்பது பாரதத்தின் ஓர் அங்கம். இந்த மறைமுகப் பிரிவினைவாதத்தை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.
அண்ணாமலை அவர்கள் இந்த மாற்றத்தை நோக்கிய பயணத்தில் முன்னேறி வந்தார். ஆனால் அவருக்கு இன்னும் கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டது. அவர் இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வந்து ஒரு உண்மையான அரசியல் இயக்கத்தை உருவாக்கினார்.
நானும் கூட பூஜ்ஜியத்திலிருந்து ஒரு விஷயத்தைக் கட்டியெழுப்புவதை விரும்புபவன் தான்; இந்தப் பணியில் தன்னார்வலராகச் சேர எனக்கும் விருப்பமுண்டு. ஆனால், நான் இப்போது தொழில்நுட்பத் துறையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன், பாரதத்திற்கு அதுவும் மிக அவசியம். எனவே, என் வாழ்நாளில் நான் நேரடி அரசியலில் இறங்கப் போவதில்லை. இருப்பினும், எனது அரசியல் கருத்துக்களைத் தெரிவிப்பது எனது அடிப்படை உரிமை.நமது படித்த குடிமக்கள் அனைவரும் இந்த அரசியல் விவாதங்களில் ஈடுபட வேண்டும், தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், அதை நாம் அனைவரும் மரியாதையுடன் செய்ய வேண்டும்" இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார் .














Click it and Unblock the Notifications