தவெகவா? திமுகவா? எந்த கூட்டணியில் தொடர்வது.. குழப்பத்தில் பாமக தலைமை.. அன்புமணி முடிவு என்ன?

  • சென்னை: அதிமுக உடன் கருத்து வேறுபாட்டில் இருக்கும் பாமக தலைமை, எந்தக் கூட்டணிக்கு செல்லலாம் என்பது தொடர்பாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாறி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இடைத்தேர்தல் முடிவுக்கு பின் தவெகவிடம் இருக்கும் அழைப்பு வரும் என்று பாமக தலைமை கருதி இருக்கிறது. ஆனால் எந்தவித முறையான அழைப்பும் வராததால், திமுக பக்கம் நகரலாமா என்பது குறித்து ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலின் போது அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்காமல் பாமக பின்வாங்கியது. இதன் மூலமாக தவெக மதுராந்தகம் தொகுதி எளிதாக வென்றது. இந்த இடைத்தேர்தலின் போதே பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் முடிவில் தவெக இருப்பதாகவும், செளமியா அன்புமணிக்கு முக்கிய அமைச்சரவை கொடுக்க விஜய் முடிவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகின.

    Advertisement

    இதன்பின் பாமக கூட்டணிக்குள் வந்தால், தவெக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்று திருமாவளவன் அறிவித்தார். இதன்பின் தவெக முகாம் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டது. அதேபோல் செளமியா அன்புமணியும் நாங்கள் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று கூறி சென்றார். என்டிஏ கூட்டணியில் இருந்தாலும், அதிமுக உடன் மட்டும் கருத்து வேறுபாட்டில் இருப்பதாக தெரிகிறது.

    காவிரி விவகாரத்தின் போது ராகுல் காந்தி மேகதாது அணை குறித்து தமிழ்நாட்டிற்கு ஆதரவாக பேசினால், நான் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியில் வரத் தயார் என்ரு அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனால் பாமக கூட்டணி மாறும் திட்டத்தில் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியது. இருப்பினும் இடைத்தேர்தலுக்கு பின் தவெகவிடம் இருந்து அழைப்பு வரும் என்று பாமக தலைமை எதிர்பார்த்தது.

    Advertisement

    ஆனால் முதல்வர் விஜய்யோ அல்லது தவெக தலைமையோ இதுவரை எந்தவொரு சிக்னலும் காட்டவில்லை. விசிகவும் தவெகவின் செயல்பாடுகள் மீது எந்தவொரு விமர்சனமும் வைப்பதில்லை. இன்னொரு பக்கம் திமுக தரப்பில் சபரீசன் மூலமாக பாமக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    திமுக கூட்டணி பக்கம் பாமக வந்தால், ஓபிசி வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் இந்த கூட்டணியால் ஈர்க்க முடியும் என்ற அளவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது. உள்ளாட்சித் தேர்தலிலேயே பாமக வேறு கூட்டணிக்கு மாறுமா அல்லது லோக்சபா தேர்தலின் போது புதிய கூட்டணியை அமைக்குமா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

    English Summary

    Caught Between AIADMK Rift and TVK Silence: Is PMK Heading Towards the DMK Alliance?