சென்னை: தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரப் போகிறது என்ற தகவல் கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதைவிட முக்கியமாக சில முக்கிய அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாகவும், ஐஏஎஸ் அதிகாரிகளும் தூக்கி அடிக்க படலாம் என்கின்றனர். எல்லாவற்றையும் விட முதல்வரின் ஆலோசகர்கள் இருவர் எம்எல்ஏக்களையே சந்திக்க விடாமல் செய்வதாக உளவுத்துறை வட்டாரங்கள். முதல்வர் விஜய்க்கு ரிப்போர்ட் கொடுத்துள்ள நிலையில் அவர்களும் கண்ட்ரோலில் எடுக்கப்படலாம் என்கின்றனர்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய் தனது முதல் அமைச்சரவையை அமைத்திருக்கிறார். செங்கோட்டையனை தவிர அனைவரும் அமைச்சரவைக்கு புதிது என்பதால் கிட்டத்தட்ட 100 நாட்கள் அவர்களை போக்கில் விட்டு விட்டு ரகசியமாக கண்காணித்து வந்தார் என சொல்கின்றனர்.
இதற்கு இடையே அமைச்சர்களின் 100 நாள் செயல்பாடுகள் குறித்து உளவுத்துறை மூலம் ஒரு பெரிய பட்டியிலேயே எடுத்து வைத்திருக்கிறார் முதல்வர் விஜய் என்கின்றனர். அதன் அடிப்படையில் மூன்று பேரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் உலாவுகிறது. 5 பேரின் துறைகளை மாற்றி கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சில முக்கிய அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட இருக்கிறது. அமைச்சரவையில் தற்போது தமிழக வெற்றி கழகம் தவிர்த்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விசிக கட்சியினரும் இடம் பெற்றுள்ளனர். 31 பேர் தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமைச்சரவை அமைந்ததற்கு பின்பு அவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என உளவுத்துறைக்கு உத்தரவு பறந்திருக்கிறது. 50வது நாளில் ஒரு ரிப்போர்ட்டும், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டாவது ரிப்போர்ட்டும் முதல்வர் விஜய் டேபிளில் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் சில அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. செயல்பாடுகள் சரியில்லை, துறை சார்ந்த பணிகளை கவனிக்கவில்லை, அதிகாரிகளின் தலையீடு என பல்வேறு புகார்கள் அந்த ரிப்போர்ட்டில் இடம் பெற்று இருக்கிறது. இதையெல்லாம் கவனித்த விஜய் விரைவில் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த போகிறார் என்கின்றனர். ஏற்கனவே சொன்னது போல சிலர் இலாக்காக்கள் பறிக்கப்பட்டு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் தரப்பட இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் புதிய முகங்களுக்கும் வாய்ப்பு தரப்பட உள்ளது. இது தவிர அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களில் இருக்கும் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பொறுப்பு தரப்பட உள்ளது. அதைவிட முக்கியமான தகவல் தான் தற்போது ஹாட் டாபிக். அமைச்சர்கள் உடன் சேர்ந்து கொண்டு வழக்கமான சில பல வேலைகளை அதிகாரிகளும் செய்து வருகிறார்கள். குறிப்பாக செயலர்கள், இணை - துணை இயக்குனர்கள் கடந்த காலங்களைப் போல கைநீட்டி வருவதாக தகவல் வந்திருக்கும் நிலையில் அவர்களும் பந்தாட படலாம் என்கின்றனர். மேலும் விஜய் கட்சி ஆரம்பித்தபோது துணையாக இருந்த பலருக்கு அரசு பொறுப்புகள் வழங்கப்பட்டது. அவர்கள் அதிகாரிகளை கண்ட்ரோலில் எடுத்ததும், எம்எல்ஏக்களைக் கூட முதல்வர் விஜய்யை சந்திக்க விடாமல் செய்வதாக உளவுத்துறை வட்டாரங்கள் அறிக்கை தந்திருக்கின்றன. இதை அடுத்து அவர்களை தனியே கண்காணித்து வரும் விஜய் அவர்களது பதவியை பறிக்கலாமா? எனவும் யோசித்து வருவதாக சொல்கின்றனர். இந்த உளவுத்துறை தகவல்களை தங்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தெரிந்து கொண்ட அமைச்சர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள் என்கின்றனர். மேலும் தங்கள் பெயர் அந்த பட்டியலில் இருக்கிறதா என சில அதிகாரிகளும் பயத்தில் இருக்கிறார்களாம். இதனால், இன்னும் சில தினங்களில் அதிரடி அரங்கேறப் போவது உறுதி என்கின்றன தலைமைச் செயலாக வட்டாரங்கள்.விஜய் அரசு
உளவுத்துறை
அமைச்சரவை மாற்றம்
ஐஏஎஸ் அதிகாரிகள்
அரசு அதிகாரிகள்