கோவை: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம், வேட்புமனுவில் வயதை குறைத்து வருமானத்தை மறைத்துள்ளதாக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகி தேர்தல் ஆணையத்தில் புகார் அனுப்பியுள்ளார்.
மதுராந்தகம் இடைத்தேர்தலில். தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக களம் காண்கிறார். இவர் வேட்புமனு பிரமாண பத்திரத்தில் பல உண்மைத் தகவல்களை மறைத்துள்ளதாக, தேர்தல் ஆணையத்திற்கு கோவை காங்கிரஸ் நிர்வாகி பிரபு புகார் அனுப்பியுள்ளார். அந்த மனுவில், "மரகதம் குமரவேல் கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்.
இடைத்தேர்தலில் அவர் தவெக வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த பொதுத்தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த படிவம் 26 பிரமாணப் பத்திரத்திற்கும், தற்போது இடைத்தேர்தலுக்காக சமர்ப்பித்துள்ள பத்திரத்திற்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. பொதுத்தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது வயது 44 என்று குறிப்பிட்டிருந்த வேட்பாளர் மரகதம், சில மாதங்களிலேயே தாக்கல் செய்த புதிய பத்திரத்தில் தனது வயதை 43 எனக் குறைத்து காட்டியுள்ளார். மேலும், வேட்பாளர் மற்றும் அவரது கணவரின் வருமான வரிக் கணக்கு விவரங்களில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பெரும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. முந்தைய பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த 2025-26 நிதியாண்டுக்கான வருமான விவரங்கள் தற்போதைய மனுவில் முற்றிலுமாக விடுபட்டுள்ளது. முந்தைய பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக் கணக்கு விவரங்கள் தற்போது விடுபட்டுள்ளன. வேட்பாளரின் கணவருக்கு கரூர் வைஸ்யா வங்கியில் இருந்த ரூ.19 லட்சம் கடன் விவரங்களை கூறாமல் மறைத்துள்ளனர். இப்படி பல தகவல்களை திட்டமிட்டு மறைத்து, 11 வகையான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவிற்கு இன்னும் இண்டு நாட்களே எஞ்சியுள்ளது. தேர்தல் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உண்மை நிலையை ஆய்வு செய்ய வேண்டும். தகவல்களைத் தெரிந்தே மறைத்ததற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 125A-இன் கீழ் வேட்பாளர் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். கூட்டணியில் இருந்து கொண்டே தங்கள் வேட்பாளர் மீது புகார் கூறிய, காங்கிரஸ் மீது தவெகவினர் கடுப்பில் உள்ளனர்.வருமானரி குறைவு
வேட்பாளர் மீது நடவடிக்கை