தேனி அரசு பள்ளி விவகாரம்.. தமிழக அரசுக்கு டாஸ்மாக் வருவாய் தான் முக்கியமா? வானதி சீனிவாசன் கேள்வி
தேனி: தேனி மாவட்டத்தில் அரசு பள்ளி தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் மதுபோதை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வெளியான நிலையில், தற்போது தேனி மாவட்டத்தில் தேசியக் கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் மதுபாட்டிலைக் கட்டித் தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கரியணம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தீபாவளி விடுமுறையை முன்னிட்டு பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில், இரவு நேரத்தில் பாதுகாப்பு வேலியைத் தாண்டி உள்ளே சென்ற மர்ம நபர்கள் பள்ளி வளாகத்தில் மது அருந்தியுள்ளனர்.

தேனி காலி மது பாட்டில்
பிறகு காலி மதுபாட்டிலைக் கயிற்றில் கட்டி, தேசியக் கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் கொடி போலத் தொங்கவிட்டு சென்றுள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த கோம்பை போலீசார் மதுபாட்டிலை அகற்றினர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுதொடர்பாக காட்டமான பதிவு ஒன்றை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளார்.
வானதி சீனிவாசன் கண்டனம்
அந்த பதிவில், "தாயை விட, தாய் நாட்டை உயிரினும் மேலாக போற்றும் நாட்டுப் பற்று மிக்கவர்கள் வாழும் நம் நாட்டில், தேனி மாவட்டத்தில் உள்ள ஓர் பள்ளியில் தேச விரோத சக்திகள் சிலர் தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தின் மீது மது பாட்டிலை கட்டி தொங்க விட்ட செய்தியானது தேசியக் கொடிக்கும், கொடிக்கம்பத்திற்கும் மிகப்பெரிய அவமரியாதை செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தேசியக் கொடியை கீழே விழாமல் பாதுகாத்து தன்னுயிரைத் தியாகம் செய்த திருப்பூர் குமரன் பிறந்த நாட்டில் மதுவினால் மதியிழந்து இளைஞர்கள் சீரழிவதை காணும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.
தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் வருவாய் தான் மிக முக்கியம். இளைஞர்கள் எப்படி போனால் என்ன? " என்று காட்டமாக கேட்டுள்ளார்.
கன்னியாகுமரி 2 மாணவிகள்
தமிழகத்தில் மதுபானத்தால் ஏற்படும் சீரழிவுகள் தொடர்ந்து வானதி அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.. சமீபத்தில்கூட, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் 2 பேர் வகுப்பறைக்கு வெளியே மது அருந்தியதாகக் கூறப்படும் வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்தது. இந்தச் சம்பவத்துக்கும் வானதி சீனிவாசன் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தார்.
பள்ளி வளாகத்திலேயே மாணவிகள் இதுபோன்று ஒழுங்கீனமாக நடந்துகொள்வது ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளின் மாண்பையும் பெயரையும் சீர்குலைக்கும் என்று வானதி கூறியிருந்தார்.
பள்ளிகளில் ரீல்ஸ் மோகம், சினிமா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கத்தையும் கீழ்ப்படிதலையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க ஆசிரியர்கள் மாணவர்களை முறையாக நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில், இப்போது தேனி பள்ளி சம்பவத்துக்கும் அவர் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
