சென்னை வியாசர்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் தனுஷ் படுகொலை! ஒரே குடும்பத்தினர் 4 பேர் கைது! நடந்தது என்ன?
சென்னை: சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தந்தை மற்றும் அவரது மூன்று மகன்கள் என நான்கு பேரை எம்.கே.பி. நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 62-வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (19). ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவர் மீது ஏற்கெனவே மூன்று குற்ற வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவரது அண்ணன் சிலம்பரசன்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் சிலம்பரசன், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 58-வது பிளாக் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அப்புகுட்டி என்பவர் குடிபோதையில் அங்கு நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சிலம்பரசனை வழிமறித்த அவர், ஏன் இந்தப் பகுதியில் வருகிறாய் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன், அவரைத் தாக்கியதாகவும் தெரிகிறது. இதையடுத்து வீட்டிற்குச் சென்ற சிலம்பரசன், தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தனது தம்பி தனுஷிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனுஷ், சம்பவ இடத்திற்குச் சென்று அப்புக்குட்டியிடம் போய், "என் அண்ணனை ஏன் அடித்தாய்?" என தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது அங்கு குடிபோதையில் இருந்த அப்புகுட்டி, அவரது தந்தை பொய்யாது மற்றும் சகோதரர்களான சூர்யா, ரவி உள்ளிட்ட ஆறு பேர் சேர்ந்து தனுஷைச் சரமாரியாக அரிவாளால் வெட்டித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தனுஷின் முகம், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தனுஷை அங்கிருந்தவர்கள் ஆட்டோ மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி தனுஷ் உயிரிழந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கிடையே இன்று காலை வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாடு அருகே பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் வியாசர்பாடி ஜெ.ஜெ.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த பொய்யாது (58) மற்றும் அவரது மகன்களான அரவிந்த் என்கிற அப்புகுட்டி (29), சூர்யா (28), ரவி (26) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கொலைக்கான பின்னணி என்ன?
கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியபோது, கொலைக்கான பின்னணியாக இரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
உயிரிழந்த தனுஷின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், பொய்யாது தரப்பை சேர்ந்த ஒருவருக்கும் இடையே முறையற்ற தொடர்பு இருந்ததாகவும், இந்த விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் இரு குடும்பத்தினரும் சமாதானமாகச் சென்றதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த விவகாரத்தில் தனுஷ் தலையிட்டு பொய்யாதிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், இதன் காரணமாக தனுஷுக்கும் பொய்யாது குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் தொடர்ந்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த தீபாவளி அன்றும் பொய்யாதின் மகன்கள் சிலம்பரசனை வழிமறித்து தாக்கியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த தனுஷ் மீண்டும் அவர்களிடம் தட்டிக் கேட்கச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட பொய்யாது உள்ளிட்ட நான்கு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்த எம்.கே.பி. நகர் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வியாசர்பாடி பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
