4 மாதமாக.. கலெக்ட்ரின் புகாரில் ஆக்சன் எடுக்காமல்..கள்ளக்குறிச்சி MLAவிற்கு தீபாவளி பரிசு தந்த விஜய்
சென்னை: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீது 4 மாதங்களுக்கு முன்பே புகார் எழுப்பப்பட்டும், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
காவல்துறை மற்றும் உள்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் விஜய்யின் கவனத்திற்கு இந்த விவகாரம் ஆரம்பத்திலேயே சென்றிருந்தும், சுமார் 4 மாதங்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், இதே 4 மாத காலகட்டத்தில் சட்டசபை முதல் பொதுக்கூட்டங்கள் வரை பல மேடைகளில் பெண்களின் கண்ணியமும் பாதுகாப்பும் எங்கள் அரசின் உயிர்மூச்சு என முதல்வர் விஜய் பேசிய பேச்சுகளும், சமீபத்தில் சர்ச்சைக்குரிய எம்.எல்.ஏ உள்ளிட்டோருக்கு அவர் தீபாவளி பரிசு வழங்கிய நிகழ்வும் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

கடந்த ஜூலை 31 முதல் நவம்பர் 24 வரையிலான இந்த 4 மாதங்களில், பெண்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் பேசிய முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பு..
தமிழ்நாடு சட்டப்பேரவை - காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் (செப்டம்பர் 7, 2026):
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்களுக்குப் பதிலளித்து, காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தை முடித்து வைத்துப் பேசிய முதல்வர் விஜய், பெண்களின் கண்ணியம் குறித்து ஆவேசமாக உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசியலில் வன்மமும் ஆபாசமும் ஆறாக ஓடுகிறது. பெண்களை ஆபாசமாகவோ, இழிவுபடுத்தியோ பேசினால் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டேன். நம் வீட்டிலும் தாய், சகோதரி இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துப் பேசுங்கள். என்னுடைய அரசியல் வெற்றிக்குப் பெண்களே முக்கியக் காரணம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அரசியல் தலையீடின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன், என்றும் அவர் பேரவையில் உறுதி அளித்தார்.
சட்டப்பேரவை - பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு தீர்மானம் (ஆகஸ்ட் 12, 2026)
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அரசின் சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் விஜய், "பெண்களுக்கான உரிமையும் பாதுகாப்பும் யாரும் வழங்கும் சலுகை அல்ல.. அது சமூக நீதி என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் ஆண்களை விடப் பெண்கள் வாக்காளர்களே அதிகம் என்றும், அனைத்து நிலைகளிலும் பெண்களுக்குச் சமமான பாதுகாப்பும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
80-வது சுதந்திர தின உரை - சென்னை கோட்டை கொத்தளம் (ஆகஸ்ட் 15, 2026)
முதல்வராக பதவியேற்ற பிறகு தனது முதல் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றி உரையாற்றிய விஜய், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கொள்கையின் அடிப்படையில் தனது ஆட்சி நடைபெறுவதாகக் கூறினார். ஊழலையும் போதைப் பொருள் கலாச்சாரத்தையும் ஒழிப்பதோடு, தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை. உறுதி செய்வதே தனது அரசின் முதன்மையான கடமை என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன் உதவி வழங்கும் விழா - பெருந்துறை, ஈரோடு (நவம்பர் 3, 2026)
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முழுவதும் சுமார் 26,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். பல்லாயிரக்கணக்கான பெண்கள் திரண்டிருந்த அந்த மேடையில் பேசிய அவர், பெண்கள் பொருளாதார ரீதியாகச் சுயசார்பு பெறுவதன் மூலமே சமூகத்தில் அவர்களுக்கான பாதுகாப்பும் மரியாதையும் முழுமையாகக் கிடைக்கும் என்றும், பெண்களுக்கு எதிரான எந்தச் சுரண்டலையும் அரசு அனுமதிக்காது என்றும் பேசினார்.
எம்.எல்.ஏ-க்களுடனான ஆலோசனைக் கூட்டம் - சென்னை (நவம்பர் 23, 2026)
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், நேற்று தனது முகாம் அலுவலகத்தில் கூட்டணி மற்றும் தோழமைக் கட்சி எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ டி. லதா, பெண்கள் பாதுகாப்பு மற்றும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகார் குறித்து நேரடியாகக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த முதல்வர் விஜய்.. பெண்களின் பாதுகாப்பை எங்கள் அரசு நிச்சயம் உறுதி செய்யும்; இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.. என உத்தரவாதம் அளித்தார். ஆனால் எம்எல்ஏ மீது நேற்று ஆக்சன் எதுவும் இல்லை.
எம்.எல்.ஏ-க்களுக்கு தீபாவளி பரிசும் (நவம்பர் 11, 2026)
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி விவகாரம் பொதுவெளியில் சர்ச்சையாக வெடித்திருந்த நேரத்தில், கடந்த நவம்பர் 11-ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தவெக எம்.எல்.ஏ-க்களைத் தனித்தனியாகச் சந்தித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது, பொதுவெளியில் கண்ணியத்துடன் நடந்து கொள்ளுமாறு எம்.எல்.ஏ-க்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், சர்ச்சையில் சிக்கிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசுகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
ஒருபுறம் 4 மாதங்களுக்கு முன்பே பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதுடன், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-வுக்கு தீபாவளி பரிசு வழங்கியதும், மறுபுறம் சட்டசபையிலும் பொதுமேடைகளிலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆவேசமாகப் பேசியதும் தற்போது எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.





Click it and Unblock the Notifications
