இந்த முறை அவமதிப்பு நடவடிக்கை மிக கடுமையாக இருக்கும்.. திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் வார்னிங்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இந்த முறையும் கார்த்திகை தீபம் ஏற்றப்படாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு தீபம் ஏற்றப்படாதபோது என்ன நடந்ததோ, அதேபோன்ற சூழல் தற்போதும் தொடர்வதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழக்குகள் உள்ளது. இதில் இந்தாண்டு ஒரு முறை மட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே இது தொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை
உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரியும், கடந்த ஆண்டை போன்ற நிலை மீண்டும் ஏற்படக் கூடாது என்றும் தொடரப்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தன. மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார். பக்தர்கள் கைது செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டது. தனக்கு அது தொடர்பான விவரங்கள் தெரியாது என்றும், கைது நடைபெறவில்லை எனக் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நவம்பர் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இதைக் கேட்ட நீதிபதி சுவாமிநாதன், நிஷாந்த் கிருஷ்ணாவின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என கேள்வி எழுப்பினார்.
கடும் நடவடிக்கை
உச்ச நீதிமன்ற உத்தரவை மீற முடியாது என்றாலும், அதை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் கோவில் நிர்வாகம் முறையாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், திருப்பரங்குன்றம் வழக்கில் இந்த முறை அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு இருந்த காவல்துறை அதிகாரி இனிகோதான் இப்போதும் இருக்கிறார் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். கடந்த ஆண்டு தீபம் ஏற்றப்படாமல் என்ன நடந்ததோ அதேபோல தற்போதும் நடக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு பணியில் இருந்த காவல்துறை அதிகாரியே தற்போதும் தொடர்வதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியதுடன், இந்த முறையும் உத்தரவு அமல்படுத்தப்படாமல் போனால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும் என எச்சரித்தனர். தொடர்ந்து நடைபெற்ற வாதங்களுக்குப் பிறகு வழக்கின் விசாரணை மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னணி
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது நீண்டகால வழக்கமாக இருந்து வருகிறது. உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகே உள்ள தீப மண்டபத்தில்தான் வழக்கமாக தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால், கடந்தாண்டு ஆண்டு மலை உச்சியில் தர்காவுக்கு அருகே அமைந்துள்ள கல் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அந்த தூண் தீபம் ஏற்றுவதற்கான இடம் என்றும், அங்கு கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தின.
உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இருப்பினும், கடந்தாண்டு அங்கு தீபம் ஏற்றப்படாமல் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கடந்த நவம்பர் 20ஆம் தேதி, இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தன்று மட்டும் ஒருமுறை மலை உச்சித் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
