"கலெக்டர் என்ன தான் நினைத்து கொண்டு இருக்கிறார்.." திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!
மதுரை: திருப்பரங்குன்ற மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையின்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவின் மனதில் என்ன தான் ஓடிக்கொண்டிருக்கிறது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பக்தர்கள் கைது செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டது. தனக்கு கைது நடவடிக்கைகள் குறித்து எந்த விவரமும் தெரியாது என்று அவர் தெரிவித்தார். கைதுகள் நடக்கவே இல்லை என்று தான் கூறவில்லை என்றும் ஆனால் கைது குறித்த விவரம் தற்போது தன்னிடம் இல்லை என மட்டும் குறிப்பிட்டார். இதற்கிடையே திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், இன்று காலை கைது செய்யப்பட்டதாக நீதிபதி சுவாமிநாதன் சுட்டிக்காட்டினார்.
படித்து காட்டினார்
இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பானவை என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தையே அணுக வேண்டும் என கோபால் சங்கரநாராயணன் வாதிட்டார். மேலும், நவம்பர் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் அவர் நீதிமன்றத்தில் படித்து காட்டினார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி சுவாமிநாதன், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறவோ, அதில் தலையிடவோ உயர் நீதிமன்றம் விரும்பவில்லை என்றார். அதேநேரத்தில் அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் கோவில் நிர்வாகம் முறையாக செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இருப்பதாக தெரிவித்தார்.
என்ன தான் நினைத்து கொண்டு இருக்கிறார்
மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவின் மனதில் என்ன தான் ஓடிக்கொண்டிருந்தது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை நீதிபதி சுவாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வழக்கறிஞர் சங்கரநாராணன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டை போன்ற சூழல் மீண்டும் உருவாகக் கூடாது என்பதற்காகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், அதற்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது.
கிரிவலம்
திருப்பரங்குன்றத்துக்கு வரும் பக்தர்கள் கிரிவலம் சென்று தரிசனம் செய்ய விரும்புவார்கள் என்றும், இந்த உத்தரவை செயல்படுத்தாமல் தடுப்பதால் அவர்களின் வழிபாட்டு உரிமை பாதிக்கப்படக் கூடாது என்றும் நீதிபதி வலியுறுத்தினார். அரசியலமைப்பு சட்டத்தின் 25வது பிரிவின்கீழ் மத உரிமைகளில் தலையிடக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இந்த வழக்கை மீண்டும் மாலை 4 மணிக்கு விசாரிப்பதாக கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.


Click it and Unblock the Notifications
