கனிமொழி கொளத்தூரில் போட்டியா? ஸ்டாலின் பின்வாங்குகிறாரா? உதயநிதி பெயர் அடிபடுவது ஏன்?
சென்னை: கொளத்தூர் இடைத்தேர்தலில் திமுக யாரை களமிறக்க போகிறது என்ற கேள்வி இப்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவாரா, கனிமொழிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற விவாதமும் எழுந்துள்ளது. இதில் திமுகவின் அரசியல் கணக்கு என்னவாக இருக்கும், கனிமொழி போட்டியிட்டால் அது உதயநிதிக்கான போட்டியாக பார்க்கப்படுமா என்பது குறித்துப் பேசியுள்ளார் அரசியல் விமர்சகர் கோடீஸ்வரன்.
வழக்கறிஞரும், அரசியல் விமர்சகருமான கோடீஸ்வரன் அரசியல் களம் சேனலில் பேசும்போது, "கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டுமா என்று கேட்கிறீர்கள்.. ஒரு பத்திரிகையாளராக பார்த்தால் அவர் அங்கு போட்டியிடுவது நல்ல செய்தியாக இருக்கும். அவர் வெற்றி பெற்றாலும் அது பேசுபொருளாகும். ஆனால், தேர்தல் வியூக அடிப்படையில் பார்த்தால் அதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.

உதயநிதி ஸ்டாலின்
ஸ்டாலின் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் உடனடியாக முதலமைச்சராக முடியாது. ஆட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் வந்தால்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட முடியும். அப்படியிருக்கும்போது, வெறும் சட்டமன்ற உறுப்பினராவதற்கு ஏன் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும்? அவர் வெற்றி பெற்றால் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியாது. ஸ்டாலின் மீண்டும் அந்த பொறுப்புக்கு வந்தால் உதயநிதிக்கு அது மனக்கஷ்டத்தை ஏற்படுத்தலாம்.
கொளத்தூரில் கனிமொழி
கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால், கட்சியின் முக்கியத் தலைவர்கள் அவர் போட்டியிட வேண்டாம் என்று நினைக்கிறார்கள். இந்த நிலையில், கனிமொழியின் பெயரும் அடிபடுகிறது. அவர் கொளத்தூரில் போட்டியிட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
கனிமொழி களமிறங்கினால் அது உதயநிதிக்கு எதிரான போட்டியாக பார்க்கப்படுமா என்று கேட்கிறீர்கள்.. யார் யாருக்கு போட்டி என்பதைவிட ஒரு கட்சி தொடர்ந்து வலுவாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். கொளத்தூர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், அது தவெகவுக்கு ஒரு முக்கியமான அரசியல் செய்தியாக இருக்கும். எனவே, திமுகவில் ஸ்ட்ராங்கான விஐபிதான் கொளத்தூரில் வேட்பாளராக நிறுத்த வேண்டும்.
ஏற்கெனவே தாராபுரத்தில் அதிமுக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. 2வது இடத்தைக் கூட பிடிக்காமல் 3வது இடத்துக்கு சென்றுவிட்டது. தவறான கணிப்பும், அளவுக்கு அதிகமான நம்பிக்கையும்தான் இதற்கு காரணமாக இருக்கலாம்.
திருச்சி கிழக்கு - ஸ்டாலின் கொளத்தூர்
தற்போது தவெக இருப்பதால்தான் இடைத்தேர்தல் இந்த அளவுக்கு பேசப்படுகிறது. ஆளுங்கட்சியாக திமுக அல்லது அதிமுக இருந்திருந்தால், இடைத்தேர்தலில் மற்ற கட்சிகள் வெற்றி பெறுவது மிகவும் கடினமாக இருந்திருக்கும். தவெகவின் வெற்றி வித்தியாசமும் குறைவாகவே இருக்கிறது. 9 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெறுகிறார்கள்.
கொளத்தூர் தேர்தல் முடிவு திமுகவுக்கு முக்கியமானதாக இருக்கும். அந்த தொகுதி மீண்டும் அரசியல் பேசுபொருளாக மாறுமா அல்லது மற்ற தொகுதிகளை போல சாதாரண இடைத்தேர்தலாக கடந்து போகுமா என்பதை பார்க்க வேண்டும். இதற்கு முன்பு திருச்சி கிழக்குத் தொகுதி முதலமைச்சரின் தொகுதி என்பதால் கவனம் பெற்றது. இப்போது ஸ்டாலின் காரணமாக கொளத்தூர் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
வளர்ச்சி பெற்ற கொளத்தூர்
சென்னையிலேயே அதிக வளர்ச்சியைப் பெற்ற தொகுதி கொளத்தூர்தான்.. அதே நேரத்தில், தஞ்சாவூர், திருவாரூர் போன்ற பகுதிகளுக்கும் இன்னும் நிறைய தேவைகள் இருக்கின்றன. ஒரு தொகுதியில் எந்த சமூகத்தினரின் வாக்குகள் எவ்வளவு இருக்கின்றன என்ற கணக்கை மட்டும் வைத்து தேர்தலை சந்திக்கக் கூடாது. சாதி அடிப்படையிலான கணக்குகளைவிட மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதற்கே கட்சிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.. மக்கள் கையில்தான் தேர்தல் முடிவு இருக்கிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
