கலெக்டராக இல்லாமல்.. ஆளுங்கட்சி MLA மீது சாமானிய பெண் புகார் தந்திருந்தால்..? ப்ளூ சட்டை மாறன் பதிவு
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் விவகாரம் இப்போது தமிழக அரசியலில் பெரும் விவாதமாக இருக்கிறது. ஆளும் கட்சி எம்எல்ஏ மீது பெண் அதிகாரி புகார் கொடுத்திருக்கும் நிலையில், திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் எழுப்பி இருக்கும் ஒரு கேள்வியும் கவனம் பெற்றுள்ளது. ஒரு கலெக்டருக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதுதான் அவர் கேட்டிருக்கும் கேள்வி.
ப்ளூ சட்டை மாறன் பதிவு
ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில், "கலெக்டராக இல்லாமல்.. ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது சாமானிய பெண் ஒரு புகார் தந்து இருந்தால் இந்த அளவுக்கு செய்தியாகி இருக்குமா? வழக்கு பதிவாகி இருக்குமா? Can you respond.. மிஸ்டர் தாய்மாமன்" என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவில் அவர் எழுப்பி இருக்கும் கேள்வி தற்போது இந்த விவகாரத்தில் நடக்கும் அரசியல் விவாதத்தின் முக்கியமான ஒரு விஷயத்தை தொட்டிருக்கிறது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ பத்மஜாவுக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசமாக மெசேஜ்களை அனுப்பியதாக கடந்த சில வாரங்களாகவே பேசப்பட்டு வந்தது. மேலும் பொது நிகழ்ச்சிகளில் தவறாக நடந்து கொண்டதாகவும், ஆட்சியரின் வீட்டுக்கு செல்ல முயன்றதாகவும் சில குற்றசாட்டுகள் வெளியானது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் பற்றி ஆரம்பத்தில் கலெக்டர் எந்த புகாரும் கொடுக்கவில்லை, என்பதால் இதை வைத்து பெரிய விவாதமே போய்க்கொண்டிருந்தது.
மறுப்பு தெரிவித்த எம் எல் ஏ
அந்த சமயத்தில் தன் மீது கொடுத்த குற்றச்சாட்டுகளை எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுத்து, "தன் மீது அரசியல் உள்நோக்கத்துடன் வதந்திகள் பரப்பப்படுவதாக" கூறியிருந்தார். இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேற்று காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அந்த எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் இத்தனை நாட்களாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்த விவாகரம் தற்போது சட்டரீதியான நடவடிக்கை என்ற கட்டத்திற்கு வந்திருக்கிறது.

இதன் பின்னணியில்தான் ப்ளூ சட்டை மாறன், ஒரு சாதாரண பெண் இதே போன்ற புகாரை ஆளும் கட்சி எம்எல்ஏ மீது கொடுத்திருந்தால் இவ்வளவு கவனம் கிடைத்திருக்குமா? வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்குமா? என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார். குறிப்பாக அரசியல் செல்வாக்கு இல்லாத பெண்கள், தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காக காவல்துறையை அணுகும் போது அவர்களின் புகார்கள் எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்ற விவாதத்தையும் இந்த பதிவு எழுப்புகிறது.



Click it and Unblock the Notifications
