நீதிபதி விக்டோரியா கௌரி திமுகவா? பெண் கலெக்டருக்கு ஆதரவாக தவெக அரசு ஏன் நிற்கவில்லை?
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீதிபதிகள் எழுப்பும் கேள்விகளுக்கு தவெக அரசிடம் பதில் இருக்கிறதா? அமைச்சர் அருண் ராஜ் மவுனம் காப்பது ஏன்? பெண்கள் பாதுகாப்பு முதல் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை வரை பல கேள்விகளை எழுப்பியுள்ளார் அரசியல் விமர்சகர் கோடீஸ்வரன். அவர் பேசியது என்ன? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
அரசியல் களம் சேனலுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், "வழக்கறிஞராக, நீதியரசர் விக்டோரியா கௌரி பேசியதைக் கேட்டபோது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. பெண்களின் பாதுகாப்பு, இளம் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், வேலை செய்யும் இடங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அவர் சரியான நேரத்தில், சட்டத்தின் அடிப்படையில் பேசியிருக்கிறார்.

நீதியரசர் விக்டோரியா கௌரி
ஆனால், அவர் பேசியதற்காக தவெகவினர் பலரும் சோஷியல் மீடியாவில் விமர்சனம் செய்கிறார்கள். அவர் நீதிபதியாக இல்லாமல் இருந்திருந்தால், அவரையே திமுக என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், அவர் திமுகவைச் சேர்ந்தவர் கிடையாது. திமுகவையே விமர்சித்துக் கேள்வி கேட்டிருக்கிறார்.
நீதிபதிகள் என்பவர்கள் சட்டம் படித்து, வழக்கறிஞர்களாக பணியாற்றி, தகுதி, திறமை, உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அந்தப் பொறுப்புக்கு வருகிறவர்கள். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பது சாதாரணமான பதவி கிடையாது. அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்ட பொறுப்பு. நீதிபதி பி.என். பிரகாஷ் போன்றவர்கள் பதவிக்கும் பொறுப்புக்கும் உரிய மரியாதை கொடுத்திருக்கிறார்கள். கிடைக்கும் பதவிகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல நீதிபதிகள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான சம்பவத்தில் காவல்துறை தரப்பில், மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவின்படி உயர் நீதிமன்றத்துக்கு தானாக முன்வந்து வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இருக்கிறது. மாவட்ட ஆட்சியருக்கே இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கும்போது, அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இல்லையா? ஆளுங்கட்சியும் அரசு அதிகாரிகளும் அரசின் 2 கண்கள் போன்றவர்கள். ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டால் அதை சரிசெய்ய வேண்டியதுதானே முக்கியம்?
ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகப் புகார் அளிக்க மக்கள் அச்சப்படலாம். அதற்காக புகார் வரவில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டாமா? தேவைப்பட்டால் பெண்கள் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் எனப் பலரும் புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.
அமைச்சர் அருண்ராஜ் கருத்து
அமைச்சர் அருண் ராஜிடம் நீதிபதியின் கருத்து குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். எல்லா விஷயங்களுக்கும் கருத்து தெரிவிப்பவர்கள், இதுபோன்ற முக்கியமான பிரச்சனையில் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்? ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான குற்றச்சாட்டு என்பதால் அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டாமா?
தவெகவினர் இந்தப் பிரச்சனையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், விஜய்யின் பிம்பத்தை மட்டும் முன்னிறுத்தி அரசியல் செய்கிறார்கள். ஆனால், ஒரு நீதிபதியே வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனால் விஜய்யின் மீதான நம்பிக்கையும் பாதிக்கப்படலாம். கட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் கட்சிக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.
திசை திருப்பும் அணுகுமுறை
திமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததா என்று கேட்டு பிரச்சனையைத் திசைதிருப்புவது சரியான அணுகுமுறை அல்ல. யார் ஆட்சியில் இருந்தாலும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். நீதிமன்றம் வழக்கின் உண்மைகளையும் சட்டத்தையும் பார்த்து முடிவெடுக்க வேண்டும். இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்பதைத் தாண்டி, நாடு முழுவதற்கும் ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.
இதுவரை இந்த சம்பவம் பேசப்பட்டிருக்கிறது. பலரும் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அதுவே நீதி கிடைத்துவிட்டது என்று அர்த்தமல்ல. மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை என்றால், சாதாரணப் பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்? நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து, உரிய நடவடிக்கைக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்" என்று தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
