CM விஜய்யின் தாத்தா கல்லறைக்கு போன தவெக அமைச்சர் ஸ்ரீநாத்.. திகைத்த ராமநாதபுரம் முத்துப்பேட்டை.. ஏன்
ராமநாதபுரம்: முதல்வர் விஜய்யின் தாத்தா சேனாபதி பிள்ளையின் கல்லறைக்கு முத்துப்பேட்டையில் சென்று மரியாதை செலுத்திய அமைச்சர் ஸ்ரீநாத், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசியிருக்கிறார்.. கடல் ஆம்புலன்ஸ் திட்டம், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் மீனவர்களுக்கான நிவாரணத் தொகை உயர்வு என பல முக்கிய அறிவிப்புகளையும் தவெக அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு வந்த அமைச்சர் ஸ்ரீநாத், மீனவர் நலச் சங்க கட்டிடத்தை திறந்து வைத்தார்.. மேலும், மீனவர்களுடன் இணைந்து கேக் வெட்டி உலக மீனவர் தினத்தைக் கொண்டாடினார்.

ராமநாதபுரம் முத்துப்பேட்டை
அப்போது அவர் பேசும்போது, "எஸ்.ஏ. சந்திரசேகர் ஐயாவின் தந்தையும், முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தாத்தாவுமான சேனாபதி பிள்ளையின் கல்லறை இங்கு இருக்கிறது. அங்கு மரியாதை செலுத்தினேன்.
மீனவர் தின நிகழ்ச்சிக்காக முத்துப்பேட்டைக்கு வந்திருந்ததால், மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய்யின் தாத்தா கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நான் இங்கு வரும்போதெல்லாம் இந்த இடத்துக்கு வருவேன்.. இப்போதும் நம்முடைய ஊர் மக்களிடம் சொல்லி வைத்திருந்தேன். அதன்படியே இங்கு வந்திருக்கிறேன்.
அமைச்சர் ஸ்ரீநாத்
தமிழகம் முழுவதும் மீனவர்களை சந்தித்து வருகிறோம். அப்போது அவர்களுடைய காப்பீடு, அடிப்படைத் தேவைகள், பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். இவை அனைத்தையும் பரிசீலித்து ஒவ்வொன்றாக நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
மீனவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அவர்கள் எதிர்பார்க்கும் உதவிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.
மீனவர்களின் வாழ்வாதாரம்
மீனவர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு, அவர்களுடைய அடுத்த தலைமுறையின் வளர்ச்சி என அனைத்து விஷயங்களிலும் அவர்களுடைய மேம்பாட்டுக்காக சில திட்டங்களை தயாரித்து வருகிறோம். அவற்றை ஒவ்வொன்றாக செயல்படுத்தியும் வருகிறோம். மீனவர் தினத்தன்று கடல் ஆம்புலன்ஸ் திட்டம் குறித்தும் அறிவித்திருக்கிறேன். இந்தத் திட்டம் கண்டிப்பாக கூடிய விரைவில் அமல்படுத்தப்படும்.
மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை கண்டிப்பாக உயர்த்தப்படும். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் மீனவர்களுக்கான நிதியுதவியை எவ்வளவு உயர்த்தலாம் என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இலங்கை கடற்படையால் பறிமுதல்
அதேபோல், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்படும் விசைப்படகுகளுக்கான நிவாரணத் தொகையை உயர்த்துவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. எந்த அளவுக்கு உயர்த்தலாம் என்பதைப் பரிசீலித்து, மீனவர்கள் திருப்தி அடையும் வகையில் கண்டிப்பாக நிவாரணத் தொகையை உயர்த்துவோம்.
அதேபோல், மீனவர்கள் ஆபத்துக் காலங்களில் பயன்படுத்தும் ஜிபிஎஸ், விஎச்எஸ் (Very High Frequency - VHF) உள்ளிட்ட கருவிகளைத் தொடர்ந்து மானிய விலையில் அவர்களுக்கு வழங்கி வருகிறோம்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் விரட்டியடிக்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நம்முடைய மீனவர்களையும் பாதுகாப்பாகவும், கூடுதல் அக்கறையுடனும் கவனமாகவும் இருக்கச் சொல்கிறோம். கடல் எல்லைகளைத் தாண்டாமல், சர்வதேச கடல் எல்லைகளை கவனித்து மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம்.
இழுத்துச் செல்லும் கடல்
இது மீனவர்கள் தெரிந்தே செய்யும் தவறு கிடையாது. கடல் என்பது உங்களுக்குத் தெரியும். அதில் வீசும் காற்றும், எழும் அலைகளும் சில நேரங்களில் மீனவர்களைத் தங்கள் போக்கில் இழுத்துச் சென்றுவிடும். அப்படிச் செல்லும்போதுதான் அவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். இதுகுறித்து மீனவர்களுக்குப் புரியவைத்து, 2 நாடுகளும் ஒன்றாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு தேவையான சரியான பாதுகாப்பு, மற்ற உதவிகள் மற்றும் நியாயம் ஆகியவற்றை நாங்கள் வழங்குவோம்.
தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர், தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார். மத்திய அரசும் நம்முடைய கோரிக்கைகளைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு, மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, பல்வேறு மீனவர் நலத்திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. நமக்கு என்னென்ன ஆதரவு வழங்க முடியுமோ அந்த வகையில் மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது" என்றெல்லாம் தெரிவித்தார்.




Click it and Unblock the Notifications
