26 சீட்கள்.. இரண்டே நாட்களில் காங்கிரஸுக்கான டீலை முடிக்கும் அகிலேஷ்! பயங்கர ஸ்பீடா இருக்கே
டெல்லி: உத்தர பிரதேசத்தில் அகிலேஷ்- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. நேற்றைய தினம் தான் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பித்த நிலையில், இன்றே கிட்டத்தட்ட 26 இடங்கள் இறுதியாகிவிட்டது. காங்கிரஸுக்கு எவ்வளவு இடங்கள், எந்த இடங்கள் குறித்த விவரம் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படும் என தெரிகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக காங்கிரஸுடன் அகிலேஷ் யாதவ் கைகோர்த்துள்ளார். இரு கட்சிகளுக்கும் இடையே நேற்று தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அது 20 நிமிடங்களில் முடிந்துவிட்டது.

உத்தர பிரதேசம்
இந்த சூழலில் தான் இதுவரை உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கான 26 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார். இதில் காங்கிரஸ் ஏற்கெனவே வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளும், இரண்டாவது இடத்தை பிடித்த நான்கு தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சிக்கே அதிக வாக்குகள் கிடைத்திருந்தாலும், கூட்டணி என்பதால் அதை காங்கிரஸுக்கு ஒதுக்கியுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.
26 தொகுதிகள்
அந்த 20 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சிக்கு 60,000 முதல் 70,000 வாக்குகள் வரை கிடைத்த நிலையில், காங்கிரஸுக்கு வெறும் 2,000 வாக்குகள்தான் கிடைத்திருந்ததாக குறிப்பிட்டார். இருப்பினும், அந்த தொகுதிகளையும் காங்கிரஸுக்கு வழங்க சமாஜ்வாதி முன்வந்துள்ளதாக அவர் கூறினார். இதுவரை 26 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன என்றும், கூட்டணி தொடர்பான மற்ற விவகாரங்களில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
நேற்று நடந்த முதற்கட்ட ஆலோசனை கூட்டத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக பேசியதாகவும், காங்கிரஸின் கோரிக்கைகளைக் கேட்ட சமாஜ்வாதி குழுவினர், அகிலேஷ் யாதவிடம் ஆலோசித்துவிட்டு பதிலளிப்பதாக கூறியதாகவும் உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜேந்திர பால் கவுதம் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் வழங்கியிருந்தனர்.
நம்பிக்கை
நேற்றைய தினம் நடந்த முதல் கூட்டம் சுமுகமாகவும் பாசிட்டிவாகவும் நடைபெற்றதாக இரு கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்தனர். இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆராதனா மிஸ்ராவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
2027 உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் 403 தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் 181 தொகுதிகளைக் கேட்டதாக அகிலேஷ் யாதவ் நவம்பர் 14ஆம் தேதி தெரிவித்திருந்தார். 2017 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்டபோது காங்கிரஸுக்கு 107 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அந்த தேர்தலில் காங்கிரஸ் 7 இடங்களிலும், சமாஜ்வாதி 47 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன. 2022 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட நிலையில், வெறும் இரு தொகுதிகளில் மட்டுமே வென்றது. அந்த தேர்தலில் அகிலேஷ் யாதவ் கட்சி 111 இடங்களில் வென்றிருந்தது.
அடுத்து என்ன
அடுத்து நடந்த 2024 லோக்சபா தேர்தலில் அகிலேஷ் - காங்கிரஸ் இந்த கூட்டணி நல்ல வெற்றியை பெற்றது. உத்தர பிரதேசத்தின் 80 தொகுதிகளில் 43 இடங்களை கைப்பற்றியது. அகிலேஷ் கட்சி 37 இடங்களிலும் காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றிருந்தது. இந்த தேர்தலை வைத்தே காங்கிரஸ் அதிக சீட்களை கேட்கிறது. ஆனால், காங்கிரஸுக்கு என பெரிய வாக்கு வங்கி இல்லை என்பதால் சட்டசபை தேர்தலில் தங்களுக்கே முக்கியத்துவம் இருக்க வேண்டும் என சமாஜ்வாதி விரும்புகிறது. இருப்பினும், இப்போது வரை பேச்சுவார்த்தை நல்லபடியாகவே செல்கிறது. இதன் காரணமாகவே வெறும் இரு நாட்களில் 26 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
