சென்னை: பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளை அழைத்து பேசினால் என்ன பிரச்சனை? மிஸ்டர் விஜய் சார், உங்களுக்கு 34 சதவீதம் பேர்தான் ஓட்டு போட்டிருக்கிறார்கள் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பட்டிபனப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என அரசாணை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தோழர்களுடன் கலந்து கொண்டு பேசுகையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்றால் அங்கு மக்கள் நலனுக்கு பிரச்சினை என்பதால்தான்! அப்படியிருக்கும் போது அந்த கட்சிகளை அழைத்து பேசினால் உங்களுக்கு என்ன வந்துவிட போகிறது? அனைத்து கட்சிகளையும் வரவழையுங்கள், நாங்கள் எங்கள் கருத்துகளை சொல்கிறோம். நீங்கள் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். ஆரோக்கியமாக விவாதிக்கலாம். அதைவிட்டு விட்டு ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் திமிர்த்தனம் செய்வது கண்டனத்துக்குரியது. மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன்தான் நீங்கள் ஆட்சியில் அமர்ந்துள்ளீர்கள். அதை மனதில் வைங்க! இது போல் தான்தோன்றித்தனமாக அரசு செயல்பட்டால் வேறு விதமான முடிவை சந்திப்பீர்கள். சுனாமி அடித்து சென்றால் சுறா போல் தடுத்து நிறுத்துவாரா? இல்லை இன்னொரு தலைமை செயலகத்தை கட்டுவாரா விஜய்? கோயம்பேடு, கிண்டியில் இடம் இருக்கும் போது எதற்காக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட ஏன் அடம் பிடிக்கிறார்கள்? எந்த பிரச்சினையாக இருந்தாலும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு தவெக அரசு அச்சப்படுகிறது. காவிரி விவகாரம், பரந்தூர் விமான நிலையத்தை விட்டு 2ஆவது விமான நிலையத்திற்கான அறிவிப்பு என தொடர்ந்து எந்த பிரச்சனைகளிலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவில்லை. எங்களை எல்லாம் அழைத்து பேசி ஒரு முடிவு எடுத்தாலும் விஜய் ஆட்சியில் விமான நிலையம் கட்டப்பட்டது, விஜய் ஆட்சியில்தான் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது என்றுதான் வரலாறு பேச போகிறது, அதைவிட்டுவிட்டு மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளை எல்லாம் அழைத்து பேசியதால் விமான நிலையம் கட்டப்பட்டது, தலைமைச் செயலகம் கட்டப்பட்டது என்றா ஊரில் பேச போகிறார்கள்? எப்படியிருந்தாலும் உங்கள் ஆட்சியில் கட்டப்பட்டவை என்றுதான் ஊர், உலகம் பேசிக் கொள்ள போகிறது, வரலாறும் அப்படித்தான் எழுதப்படும். ஆலோசனை செய்து முடிவெடுக்க என்ன கஷ்டம் உங்களுக்கு, அனைத்துக் கட்சி கூட்டம் என்றாலே ஏன் வேப்பங்காயாக கசக்கிறது? எனவே பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என்ற 566 எண் கொண்ட அரசாணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்திருந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆளுநர் ஆட்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் , கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்துள்ளன. அதில் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கின்றன. மற்ற கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
மிஸ்டர் விஜய் சார்! 34 சதவீதம் பேர்தான் உங்களுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். 100 சதவீதம் தமிழக மக்களும் உங்களுக்கு ஓட்டு போட்டு நீங்கள் முதல்வராக தேர்வு செய்யப்படவில்லை.