ராஜீவ் அரசியலுக்கு வர எதிர்ப்பு தெரிவித்த சோனியா காந்தி.. ராகுலுக்கு தடை போடாதது ஏன்? வெளியான சீக்ரெட்
டெல்லி: ராஜீவ் காந்தி தனது தாயார் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, அரசியலுக்கு நுழைய முடிவு செய்தார். அப்போது கணவரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சோனியா காந்தி, தனது மகன் ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த போது எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. கணவருக்கு எதிர்ப்பு தெரிவித்த சோனியா, மகனுக்கு ஆட்சேபம் காட்டாதது ஏன் என்பது குறித்து தனது சுயசரிதை புத்தகத்தில் விளக்கியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சோனியா காந்தி சுய சரிதை புத்தகம் எழுதியுள்ளார். 'Belonging: A Journey of Love' என்று தனது சுயசரிதை புத்தகத்திற்கு பெயரிட்டுள்ளார். தனது வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு முக்கிய தகவல்கள் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

கணவருக்கு மட்டும் எதிர்ப்பு ஏன்?
குறிப்பாக தனது கணவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு அரசியலுக்கு அடியெடுத்து வைத்த போது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி அரசியலுக்கு வரும் போது அதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாதது ஏன்? என்பது பற்றி சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். சோனியா காந்தி கூறியிருப்பதாவது:-
ராகுல் காந்திக்கு அரசியல் மீது நீண்ட காலமாக ஆர்வம் இருந்தது. தங்கள் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான அமேதி தொகுதியுடன் ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு நீண்ட காலம் பிணைப்பு இருந்தது. ராகுல் காந்தி பள்ளி படிக்கும் காலத்திலேயே ராஜீவ் காந்தி அவரை பலமுறை அமேதி தொகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். கிராமப்புற மக்களின் கடினமான வாழ்க்கை சூழல் மற்றும் அங்குள்ள எதார்த்த நிலையை அறிந்துகொள்ளும் வகையிலும் அமேதிக்கு ராகுல் காந்தியை ராஜீவ் அழைத்து சென்றார்.
ராகுல் காந்தி படிப்பை முடித்ததும்
நான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் பிரியங்கா காந்தி அமேதியில் இருந்தார். கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று இருந்தார். அதேநேரத்தில் தனது பிள்ளைகளை வளர்ப்பதும், புத்த மதம் குறித்த தனது முதுகலை பட்டம் தொடர்பாகவே பிரியங்கா காந்தி அதிக அக்கறை காட்டினார்.
ராகுல் காந்தி படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும், என்னுடனோ அல்லது பிரியங்காவுடனோ அமேதி தொகுதிக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். இருவருமே அந்த தொகுதி மக்களிடம் நன்கு பரிட்சயம் ஆன முகங்களாக இருந்தனர். இதனால், இந்தியா திரும்பிய பிறகு அந்த மக்களின் பிரதிநிதியாக பணியாற்ற அவருக்கு ஆர்வம் வந்தது. தீவிர அரசியலில் ஈடுபடுமாறு கட்சியும் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியது.
அரசியலுக்கு செல்ல வேண்டாம் என்று கெஞ்சினேன்
அரசியல் என்பது அவரது வாழ்க்கையையே முற்றிலும் மாற்றிவிடும். ஒவ்வொரு கட்டத்திலும் பொதுமக்களால் கவனிக்கப்படும், விமர்சனங்களுக்கு உள்ளாகும் ஒரு பொது நபராக அவர் மாற வேண்டியிருக்கும். என்னுடனும் பிரியங்காவுடனும் தீவிரமாக கலந்து ஆலோசித்துவிட்டு அரசியலுக்கு வரும் முடிவை ராகுல் காந்தி எடுத்தார். 2004 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் ராகுல் காந்தி களமிறங்கினார்.
அதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பாக ராஜீவ் காந்தியிடம் நீங்கள் அரசியலுக்கு செல்ல வேண்டாம் என்று கெஞ்சினேன். அந்த கொடூரமான உலகத்திற்குள் உங்களையும், எங்களையும் தள்ளிவிடாதீர்கள் என்று கூறினேன். ஆனால் ராகுல் காந்தி அரசியலுக்கு வரும் நேரத்தில் நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ராகுல் காந்தி தனது தந்தையின் நிறைவு காலத்தை முன்பே கணித்து இருந்தார்.
இதற்காக அவரிடம் வாதிட்டும் இருந்தார். இருந்தாலும் தனது தந்தையின் கொள்கைகள் மீதும், துணிச்சலுடன் செயல்பட்ட விதம் மீதும் ராகுல் ஆழ்ந்த மதிப்பும் பிணைப்பும் கொண்டிருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
