அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?

  • சென்னை: தமிழக அரசியல் களம், திராவிட இயக்கம், தமிழ் சினிமா, நவீன இலக்கியம் என எதைத் தொட்டாலும் அதில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரே பெயர் கலைஞர் மு.கருணாநிதி. 1924 ஜூன் 3-ஆம் தேதி திருக்குவளை என்னும் எளிய கிராமத்தில் பிறந்து, தனது 94 ஆண்டுகால வாழ்நாளில் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழக அரசியலின் அச்சாணியாகத் திகழ்ந்தவர்.

    Advertisement

    5 முறை தமிழக முதலமைச்சர், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒருமுறை கூடத் தோற்காத அசாத்திய சாதனை, 50 ஆண்டுகள் ஒரு பேரியக்கத்தின் தலைவர் என இந்திய அரசியலின் திசையைத் தீர்மானித்த 'மகா காந்தம்' அவர். அவரது நூற்றாண்டு நினைவுகளையும் தாண்டி, இன்றுவரை அவர் ஏன் "நவீன தமிழகத்தின் சிற்பி" என்று கொண்டாடப்படுகிறார் என்பது தொடர்பாக பார்க்கலாம்.

    Advertisement

    சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குக் காரணியாக இருந்த காலத்தில், அதைச் சமூகச் சீர்திருத்தத்திற்கான கூர்மையான ஆயுதமாக மாற்றியவர் கலைஞர். சினிமாவை அரசியலுக்காக மாற்ற வேண்டும் என்ற கலைஞரின் சிந்தனை இன்று வரை தமிழ்நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    1952ல் வெளியான 'பராசக்தி' திரைப்படம் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியது என்று சொல்லலாம். பராசக்தி மற்றும் மனோகரா திரைப்படங்களில் அவர் எழுதிய பகுத்தறிவு மற்றும் அடுக்குமொழி வசனங்கள், அதுவரை பாடிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவை வசனங்களால் பேச வைத்தது. 'தூக்குமேடை' நாடகத்தின் போது அவரது அசாத்திய கலைத்திறமையைப் பாராட்டி நடிகர் எம்.ஆர்.ராதா மற்றும் பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோர் இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டத்தை வழங்கினர்.

    Advertisement

    அதுவே பின்னாளில் அவரது நிரந்தரப் பெயராக மாறியது. அதேபோல் 1957ல் குளித்தலை தொகுதியில் தொடங்கி, 2016 திருவாரூர் தொகுதி வரை கலைஞர் தனது வாழ்நாளில் சந்தித்த 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்றார். இந்திய தேர்தல் அரசியலில் தோல்வியே சந்திக்காத மிகச் சில தலைவர்களில் இவரும் ஒருவர்.

    ஐந்து முறை (1969, 1971, 1989, 1996, 2006) தமிழக முதலமைச்சராகக் கலைஞர் இருந்த காலகட்டம் தான், இன்றைய வளர்ந்த தமிழ்நாட்டிற்கான அடித்தளமாகும். மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்‌ஷா ஒழிப்பு (1969), பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம். இந்த திட்டங்கள் இன்று வரை சமூக சீர்திருத்த திட்டங்களுக்கான முன்னோடியாக இருந்து வருகின்றன.

    Advertisement

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு, அருந்ததியினருக்கு 3% உள் இடஒதுக்கீடு கொண்டு வந்து சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம், சென்னை தரமணியில் 'டைடல் பார்க்' உருவாக்கம் என்று சமூக, பொருளாதர, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அத்தனை மாற்றங்களுக்கும் முதற்புள்ளியாக அமைந்தது.

    மாநில சுயாட்சி பேசினாலும், டெல்லி தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகக் கலைஞர் விளங்கினார். இந்திரா காந்தி காலம் முதல் மன்மோகன் சிங் காலம் வரை இந்தியாவின் பல பிரதமர்களை உருவாக்குவதிலும், மதச்சார்பற்ற கூட்டாட்சி அரசுகளை அமைப்பதிலும் முதன்மைப் பாத்திரமாக இருந்தார்.

    Advertisement

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தோடு, இந்தியாவின் சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் இவரே. "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..." என்று அவர் முரசொலியில் எழுதும் கடிதங்கள், லட்சக்கணக்கான தொண்டர்களைத் தினமும் இயக்கிக் கொண்டிருந்தன.

    தீவிர அரசியல் வேலைகளுக்கு மத்தியிலும் 150-க்கும் மேற்பட்ட இலக்கிய நூல்கள், தென்பாண்டிச் சிங்கம், ரோமாபுரி பாண்டியன் போன்ற வரலாற்றுப் புதினங்களை எழுதிக் குவித்தார். "ஓய்வறியாமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்ற வாசகத்தோடு சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணாவின் அருகிலேயே அவர் துயில் கொள்கிறார். கொள்கை மாறுபாடுகள் கடந்து, தமிழகத்தின் உட்கட்டமைப்பை செதுக்கிய ஒரு மாபெரும் நிர்வாகியாகவும், காவியப் படைப்பாளியாகவும் 'கலைஞர்' என்ற ஆளுமை தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்.

    English Summary

    Kalaignar Karunanithi: The Architect of Modern Tamil Nadu: Who is 'Kalaignar' M. Karunanidhi and Why His Legacy endures?