LPG கேஸ் சிலிண்டர் கஸ்டமர்களுக்கு ஆகஸ்ட் 16 கெடு! மானியம் வராதா? நிமிடத்தில் eKYC முடிப்பது எப்படி?

  • சென்னை: தமிழகத்தில் எல்பிஜி சமையல் கேஸ் இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களது இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்பை வரும் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் கட்டாயம் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு இறுதிக்கெடு விதித்துள்ளது. இந்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஆதார் சார்ந்த உண்மைத்தன்மை சரிபார்ப்பை பூர்த்தி செய்யாத கஸ்டமர்களுக்கு, தடையின்றி வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு மானியத் தொகை உடனடியாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் எண்ணெய் நிறுவன அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

    Advertisement

    இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் தொடர்ச்சியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    எல்பிஜி கேஸ் சிலிண்டர்

    நாட்டில் ஒரே நபர் பெயரில் பல போலி இணைப்புகள் செயல்படுவதைத் தடுப்பதற்கும், இறந்துபோன வாடிக்கையாளர்களின் பெயரில் தவறாக சிலிண்டர் வாங்குவதைக் கட்டுப்படுத்துவதற்கும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தகுதியான மற்றும் உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே அரசு வழங்கும் DBT எனப்படும் Direct Benefit Transfer அதாவது நேரடி மானியம் முழுமையாகச் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் சுமார் 2.40 கோடி சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த சரிபார்ப்பு பணிகளை முடிக்க ஏற்கனவே பலமுறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட போதிலும், மாநில அளவில் இன்னும் சுமார் 15 சதவீதம் பேர் இ-கேஒய்சி நடைமுறையை முடிக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறார்கள்..

    Advertisement

    கேஸ் மானியம் வராதா

    இதன் காரணமாகவே, உண்மைத்தன்மை சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக, வரும் ஆகஸ்ட் 16ம் தேதியை இறுதி கெடுவாக நிர்ணயித்து எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளன.

    பொதுவாக பல வாடிக்கையாளர்கள் கேஒய்சி சரிபார்ப்பை ஒரு சாதாரண நடைமுறையாகக் கருதி அலட்சியம் காட்டி வருகின்றனர். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கெடுவுக்குள் சரிபார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டால், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் மாதாந்திர மானியத் தொகை நிறுத்தப்படுமாம். அதுமட்டுமல்லாமல், எல்பிஜி நுகர்வோர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டு, அடுத்தடுத்து புதிய சிலிண்டர் முன்பதிவு செய்வதிலும் கடுமையான தாமதங்கள் அல்லது தடங்கல்கள் ஏற்படக்கூடும்.

    Advertisement

    நிமிடத்தில் முடிப்பது எப்படி

    அதனால்தான், கேஸ் ஏஜென்சிகளுக்கு நேரில் சென்று மணிக்கணக்கில் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் பொருட்டு, நவீன டிஜிட்டல் வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    பாரத் கேஸ் கஸ்டமர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் "Hello BPCL" செயலி மற்றும் ஆதார் அமைப்பின் "AadhaarFaceRD'" செயலியை டவுன்லோடு செய்து, வீட்டிலிருந்தபடியே முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் நொடிகளில் இ-கேஒய்சி செய்து கொள்ள முடியும்.

    ஆன்லைன் வசதிகள்

    ஆன்லைன் வசதி இல்லாத பொதுமக்கள், தங்களது அருகில் உள்ள கேஸ் ஏஜென்சிக்கு நேரடியாகவே சென்று, அங்கிருக்கும் பயோமெட்ரிக் கருவி வாயிலாக விரல் ரேகை அல்லது கண் கருவிழி பதிவு செய்து தங்களது இணைப்பைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

    Advertisement

    சமையல் எரிவாயு கணக்கில் எல்பிஜி நுகர்வோர் எண், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு விபரங்கள் ஆகியவை சரியாக இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே மானியத் தொகை தடையின்றி கிடைக்கும். அதனால் கடைசி நேர நெரிசலையும், மானியம் நிறுத்தப்படுவதையும் தவிர்க்கும் வகையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் வரும் 16ம் தேதிக்குள் இந்த இ-கேஒய்சி சரிபார்ப்பு நடைமுறையை உடனடியாக நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    English Summary

    LPG Gas Cylinder eKYC Deadline on August 16.. How to Complete eKYC and Continue Receiving Subsidy