பழனி மலையடிவாரத்தில் ரூ 100 கோடி நிலம் முறைகேடு! தப்பு நடந்துடுச்சி! ஒப்புக் கொண்ட அமைச்சர் லோகேஷ்

  • சென்னை: பழனி கோயில் நிலம் பத்திரப்பதிவு விவகாரத்தில் தவறு நடந்துள்ளது என பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சென்னையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பழனி கோயில் பத்திரப்பதிவு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்: தவறு நடந்திருக்கிறது, சார் பதிவாளர் தவறு செய்தது தெரிந்ததால்தான் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    Advertisement

    அவர் பேசும்போது வாய்மொழியாக கோர்ட் உத்தரவை அடிப்படையாக வைத்து பத்திரப்பதிவு செய்ததாக கூறுகிறார். அந்த ஆவணத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம். எனினும் தவறு நடந்தது நடந்ததுதான்.

    அதனால்தான் சார் பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பத்திரப்பதிவு விவகாரத்தில் விசாரணையை தொடங்கியுள்ளோம். இந்த பத்திரப்பதிவு விவகாரத்தில் சார் பதிவாளருக்கு மட்டும்தான் தொடர்பா? இல்லை அவருக்கு பின்னால் மேலதிகாரிகள் யாராவது இருக்கிறார்களா? என்பதை ஆராய வேண்டும்.

    அப்படி யார் இருந்தாலும் அவர் தனி நபராக இருந்தாலும் சரி அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, அதிகாரியாக இருந்தாலும் சரி, சட்ட நடவடிக்கை பாயும் என்பதால் எந்த சந்தேகமும் இல்லை. தேவைப்பட்டால் மேல்விசாரணைக்கு முதல்வரிடம் கோரிக்கை வைப்போம். இவ்வாறு அமைச்சர் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அது போல் பழனி அடிவாரத்தில் ரூ 100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடு செய்தது அமைச்சர் ரமேஷின் உறவினர் என திமுக குற்றம்சாட்டி வருகிறது.

    இதுகுறித்து திமுக ஐடி விங் கூறியிருப்பதாவது: பழநி ஆண்டவருக்கே மொட்டை போடும் தவெக ரியல் எஸ்டேட் அரசு!

    பழநி ஆண்டவன் பூங்கா சாலையில், கடந்த கால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியில் 2025-ம் ஆண்டு மீட்கப்பட்டு, பக்தர்களின் வாகன நிறுத்தமாக மாற்றப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் கோயில் நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்குத் தாரை வார்த்திருக்கிறது தவெக அரசு!

    Advertisement

    கடந்த ஜூலை 6-ம் தேதி, பழநி இணை சார்பதிவாளர் பணி மாறுதலான அந்த ஒருநாள் இடைவெளியைத் தந்திரமாகப் பயன்படுத்தி, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி இந்த இமாலய முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளது; இது தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டை அப்பட்டமாகக் காட்டுகிறது.

    நிலப் பதிவு முடிந்த அடுத்த நொடியே, அந்த அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கி வெகுமதி அளிக்கப்பட்டிருப்பது, இது அரசின் நேரடித் துணையோடு திட்டமிட்டு நடத்தப்பட்ட 'கொள்ளை' என்பதை உறுதிப்படுத்துகிறது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களே! கேமரா முன்னால் கோயில் ஆய்வுகளை ரீல்ஸாகப் படம்பிடித்து நாடகமாடும் நீங்கள், திரைக்குப் பின்னால் நிலத் தரகராகச் செயல்பட உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

    Advertisement

    முந்தைய ஆட்சியில் சுமார் ரூ.1,316 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்ட நிலையில், இன்று நீங்கள் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் போலக் கோயில் நிலங்களைத் தனிநபர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?

    பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் பழநி ஆண்டவருக்கே மொட்டை போடும் உங்கள் இந்த அட்ராசிட்டியை ஆன்மீக பக்தர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமைச்சர் ரமேஷுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்தான் அவர் அதை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், எனது உறவினர் பெயரில் பழனி அடிவாரத்தில் ரூ 100 கோடி மதிப்பிலான சொத்து சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டதாக சமூகவலைதளத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரிவித்துள்ளார்.

    English Summary

    Minister Lokesh Tamil selvan says that there is something wrong in Rs 100 crore asset registration at Palani Malai Adivaaram.