குப்பை பொறுக்கி பிள்ளை வளத்த பெற்றோர்.. நள்ளிரவில் மாயமான கைக்குழந்தை! அலட்சியம் காட்டும் போலீஸ்!

  • சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்கம் நகர் வானாபாடி செல்லும் சாலையோரமாக ஒரு வயது பெண் குழந்தை காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை மாயமாகி ஒரு மாதத்துக்கும் மேலாகி உள்ள நிலையில் தற்போது வரை குழந்தை கண்டுபிடிக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் பெற்றோர். தமிழகத்தில் குழந்தைகள் அடிக்கடி மாயமாகி வரும் சம்பவங்கள் அதிகரித்துவரும், நிலையில் இந்த குழந்தை கடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    Advertisement

    லாலாப்பேட்டை பகுதியில், குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்த சேகர் - பிரேமா தம்பதியினர் தங்களது ஒரு வயது பெண் குழந்தை மகேஸ்வரியுடன் அப்பகுதி சாலையோரமாக வசித்து வருகின்றனர்.

    Advertisement

    இந்நிலையில், கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி இரவு குப்பைகளை சேகரித்த களைப்பில், சேகர், பிரேமா தம்பதியினர் தங்களது குழந்தையுடன் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்கம் நகர் வானாபாடி செல்லும் சாலையோரமாக அன்னை ஸ்டில்ஸ் என்ற கடை அருகே தூங்கியுள்ளனர்.

    நள்ளிரவில் எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    ஆனால், குழந்தை மாயமாகி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், காணாமல் போன ஒரு வயது குழந்தையை கண்டுபிடிக்க ஏ.டி.எஸ்.பி தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து, தேடுதல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும், குழந்தை குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக சிப்காட் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே குழந்தைகள் அடிக்கடி மாயமாகி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோரை நிலைகுலைய செய்துள்ளது. சமீபத்தில் செஞ்சி சிறுமி மாயமான சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குழந்தை மாயமாகி 10 நாட்கள் கடந்து நிலையில் இன்னும் குழந்தையை கண்டுபிடிக்கவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டினர்.

    ஆனால் ராணிப்பேட்டையில் ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஒரு வயது சிறுமி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் குப்பை பொறுக்கும் பெற்றோர்கள் என்பதால் போலீசார் அலட்சியம் காட்டுகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உடனடியாக குழந்தையை மீட்பதோடு, அவர்களது பெற்றோரின் வாழ்வாதாரத்திற்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்றம் கோரிக்கையும் எழுந்துள்ளது.

    English Summary

    A one-year-old girl has been missing for over a month in Ranipet, prompting police to form six special teams to trace her.