“எங்க வீட்டுப் பையன் தம்பி விஜய்” பிரேமலதாவுக்கு திடீர் பாசம்! ’கேப்டன்’ சார்பாக வாழ்த்து என பதிவு!
சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். "எங்க வீட்டுப் பையன் தம்பி விஜய்" என்று உருக்கமாக குறிப்பிட்ட அவர், சிறந்த நிர்வாக திறமையுடன் செயல்பட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலைக்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்துள்ளது. நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சியமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாததால், கூடுதல் ஆதரவை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் தமிழக வெற்றிக் கழகம் பேச்சுவார்த்தை நடத்தியது. முதலில் காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை வழங்கியது.
கம்யூனிஸ்ட் கட்சிகள்
அதன் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்தன. இதன் மூலம் தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்தது. இதற்கிடையில், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இறுதியில் விசிக தனது ஆதரவை அறிவித்ததுடன், ஐயூஎம்எல் கட்சியும் கடைசி நேரத்தில் ஆதரவு கடிதத்தை வழங்கியது. இதன் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 120 ஆக உயர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை உறுதி செய்யப்பட்டது.
ஆளுநர் அர்லேகர்
இந்த நிலையில், ஆளுநர் அர்லேகர் விஜயை ஆட்சி அமைக்க அதிகாரப்பூர்வமாக அழைத்தார். மாலை நேரத்தில் ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணைந்து 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களை சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164ன் கீழ் விஜயை தமிழக முதலமைச்சராக நியமிக்கும் ஆணையை ஆளுநர் வழங்கினார். இதையடுத்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
முதலமைச்சர் விஜய்
தமிழகத்தின் 18வது முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளார். அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், கூட்டணி கட்சிகளை சேர்ந்த சிலரும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் பிரேமலதா வெளியிட்டுள்ள வாழ்த்து அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
பிரேமலதா
"கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள். தம்பி விஜய் சிறந்த நிர்வாக திறமையுடன் செயல்பட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் விடுதலை, சிறுத்தைகள் விஜய்க்கு ஆதரவு அளித்திருக்கும் நிலையில் அதே கூட்டணியில் இருந்த பிரேமலதா விஜயகாந்த் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மேலும் தேர்தலுக்கு முன்பாகவே தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அதிமுக மற்றும் திமுக உடனான பேச்சுவார்த்தைகளில் மட்டுமே பிரேமலதா விஜயகாந்த் தீவிரம் காட்டினார். இந்த நிலையில் தற்போது விஜய்க்கு எங்க வீட்டு பிள்ளை என கூறி பிரேமலதா வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications