ராஜகுருவாக இருந்தா விஜய் பர்சனலாக வச்சிக்கணும்! ஏன் அரசு பதவி? பிரேமலதா ஆவேசம்! தடுக்காத சபாநாயகர்
சென்னை: விஜய்யின் ராஜகுருவுக்கு அரசு பதவி ஏன் கொடுக்கப்பட்டது என்பதை முதல்வர் விஜய் விளக்கமளிக்க வேண்டும் என தேமுதிக எம்எல்ஏவும் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை வாக்கெடுப்பில் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கண்டிக்கவில்லை.
தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாக்கெடுப்பை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் தேமுதிகவின் எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், முதல்வர் விஜய், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருவது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அது போல் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்ததும் நல்ல திட்டமாகும். குதிரை பேரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகாருக்கு விஜய் முதலில் பதிலளிக்க வேண்டும். அவரது வீட்டிற்கு முகத்தை மூடிக் கொண்டு சென்றது யார் என்பதை முதல்வர் விஜய் விளக்க வேண்டும்.
அது போல் விஜய்யின் ராஜகுருவுக்கு அரசு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ராதந் பண்டிட் அரசு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை தமிழகத்தில் உள்ள அனைவரும் கண்டித்து வருகிறார்கள். உங்களுக்கு ஆஸ்தான குரு என்றால் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள் என பிரேமலதா கடுகடுப்பாக பேசினார்.
மன்னார்குடி சுயேச்சை எம்எல்ஏ காமராஜை, சபாநாயகர் தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாம் என கூறி தடுத்து நிறுத்தினார். ஆனால் பிரேமலதா பேசியதை அவர் கண்டிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக அரசு தநது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஆளுநர் பொறுப்பு அர்லேகர் கெடு விதித்திருந்தார். அந்த வகையில் இன்று சட்டசபை கூடியதும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை விஜய் கொண்டு வந்தார்.
அப்போது அதன் மீது உறுப்பினர்கள் பேசினர். அந்த வகையில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், முதல்வர் செய்த நல்ல விஷயங்களை நாம் பாராட்டியிருக்கிறோம். எதிர்க்கட்சிகளை எதிரி கட்சியாக நினைக்காமல் அனைவரையும் சந்தித்து அரசியலில் ஒரு மாண்பையும் மரபையும் நீங்கள் ஏற்படுத்தியது வரவேற்கத்தக்கது.
அது போல் உங்களுடைய முதல் அறிவிப்பிலேயே பெண்களை பாதுகாக்கவும் மதுக்கடைகளை மூடுவோம் என சொன்னதசும் மக்களால் வரவேற்கப்பட்டது. முதலில் 717 மதுக்கடைகளை மூடியது ஒட்டுமொத்த தமிழக மக்களால் வரவேற்கப்பட்டது. இவை அனைத்தையும் தேமுதிக வரவேற்கிறது.
இருப்பினும் முதல்வர் அவர்களே நீங்கள் அன்றைக்கு பதவி ஏற்கும்போது உங்களுடைய ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும், மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கு ஒரு முன்னுதாரணமான ஆட்சியாக இருக்கும் என்று சொன்னீர்கள்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த அவையில் முதல் முறையாக மன வேதனையாக சொல்கிறேன். குதிரை பேரம் நடந்ததாக எதிர்கட்சிகள் சொல்லும் போது, இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடக்காத விஷயம் ஏற்பட்டது மன வேதனை அடைகிறேன். இங்கு யாரும் முகத்தை மூடி செல்ல வேண்டிய அவசியம் இல்லையென என முதலமைச்சர் கூறினார். ஆனால் முதலமைச்சரை சந்திக்க யார் முகத்தை மூடிக்கொண்டு சென்றார் என்பதை முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும். அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால் அதற்கு மேல் தலைக்குனிவு இல்லை. முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.
அது போல் ராஜகுருவுக்கு எதற்கு அரசு பதவி? உங்கள் ராஜகுருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள் என விஜய் முன்பு பிரேமலதா கடுங்கோபத்துடன் ஆவேசமாக பேசினார்.












Click it and Unblock the Notifications