Karur: கரூர் கூட்ட நெரிசல்! ஆறாத வடுவாக மாறிய 41 பேர் உயிரிழப்பு! முதல்வர் விஜய் முக்கிய முடிவு?
சென்னை: தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஜோசப் விஜய், தற்போது முன்னாள் முதல்வர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கூட்டணி கட்சியின் அலுவலகங்களுக்கு சென்று வருகிறார். அந்த வகையில் கரூருக்கு செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கினார். அந்த கட்சி தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில் பங்கேற்கவில்லை, மேலும் இடைத்தேர்தல்களிலும் பங்கேற்கவில்லை.

தவெகவின் இலக்கு 2026 சட்டசபை தேர்தல் என விஜய் அடிக்கடி தெரிவித்து வந்தார். அந்த வகையில் விஜய், சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க தனது பிரச்சார திட்டங்களை வகுக்கத் தொடங்கினார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்திற்கு விஜய் மதியம் வருவதாக பலருக்கு தகவல்கள் கிடைத்ததால் அவரை அருகே இருந்து பார்க்க வேண்டிய நோக்கில் பலர் காலை முதலே கூடிவிட்டனர்.
அதே நாளில் விஜய் நாமக்கல்லிலும் பொதுக் கூட்டத்திற்கு திட்டமிட்டிருந்தார். அங்கு காலை 9.30 மணிக்கு பொதுக் கூட்டத்தை நடத்தவிருந்தார். ஆனால் சென்னை நீலாங்கரை வீட்டிலிருந்தே 9.30 மணிக்குத்தான் கிளம்பினார். இதனால் தொடர் தாமதம், வழியெங்கும் ரசிகர்கள் குவிந்ததால் விஜய்யின் வாகனமானது இன்ச் பை இன்ச்சாக நகர்ந்தது, எனவே லேட்டானது.
சரியாக இரவு 7 மணிக்கு வந்த விஜய், போக்குவரத்தை சீர்படுத்திய காவல் துறைக்கு நன்றி தெரிவித்திருந்தார். பின்னர் அவர் பேச பேச ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர்.
இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக 41 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். இவர்கள் எல்லாம் காலை முதலே சாப்பிடாமலும், வெயிலில் காத்திருந்ததும் இவர்கள் மயங்கி விழுந்ததாகவும் கூட்டத்தில் தள்ளுமுள்ளுவால், மயங்கி கீழே விழுந்தவர்கள் மீது பலர் ஏறி ஓடியதாலும் இந்த இறப்பு நடந்ததாக சொல்லப்பட்டது.
இந்த சம்பவம் நடந்ததும் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவத்தை அறிந்து முதல்வராக இருந்த ஸ்டாலின் இரவோடு இரவாக கரூருக்கு வருகை தந்து, மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
கரூர் அரசு மருத்துவமனைக்கு தவெகவை தவிர மற்ற அனைத்து கட்சி நிர்வாகிகளும் கூடியிருந்தனர். இந்த கரூர் சம்பவம் தவெகவுக்கு பெரும் விமர்சனங்களை ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் பிறகு 20 நாட்களுக்கு குறைந்து விஜய் நீலாங்கரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கரூர் வழக்கு குறித்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், விஜய் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் விஜய், 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என சொல்லப்பட்டது. ஆனால் அவரோ அந்த 41 பேரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு வரவழைத்து அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 20 லட்சமும் விஜய் சார்பில் வழங்கப்பட்டது.
துக்கத்தில் இருப்போர் வீட்டுக்கு சென்று விசாரிப்பதுதான் முறை, ஆனால் இவர் மாமல்லபுரத்திற்கு துக்க வீட்டினரை வரவழைக்கிறாரே என பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது போன்ற கண்டனங்கள், விஜய்க்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் பெரும்பான்மைக்கு போதிய பலம் இல்லாததால் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் அனுமதி கோரினார். ஆளுநரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து முதல்வராக பதவியேற்றுள்ள விஜய், அரசியல்வாதிகளின் வீடுகளுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில் விஜய் விரைவில் கரூருக்கு சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து சந்திப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications