விஜய் அரசை காப்பாற்றிய திமுக.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெளிநடப்பு! என்ன காரணம்?
சென்னை: விஜய் அரசுக்கு இன்று (மே 13) ஒரு மிக முக்கியமான நாள். முதலமைச்சர் விஜய் தனது அரசைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய 'நம்பிக்கை வாக்கெடுப்பு' இன்று சட்டசபையில் நடைபெற்றது. இரு பெரும் திராவிடக் கட்சிகளில் அதிமுக இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இரு பிரிவுகளாகப் பிரிந்துள்ள சூழலில், திமுக நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்துள்ளது..
தமிழகச் சட்டசபையில் இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒரு நிஜ அரசியல் த்ரில்லராக மாறியுள்ளது. 234 இடங்களைக் கொண்ட அவையில், விஜய்யின் தவெக அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. இதில் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிட்டிருந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்திருந்தார்.

அதேபோல திருப்பத்தூர் தவெக எம்எல்ஏவும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்த நிலையில், அவரது வெற்றிக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது. இதனால் மொத்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 232ஆக குறைந்துள்ளது. அதில் குறைந்தபட்சம் 51% வாக்குகள் தேவை.
இதற்கிடையே திமுக இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 'வெளிநடப்பு' செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகின. அதேபோல அவை தொடங்கிய சற்று நேர்தில் திமுகவின் 59 எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் இருந்த மொத்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 175ஆக குறைந்தது. இதில் பாதியான 88 வாக்குகள் பெற்றாலே விஜய் வெற்றி பெற்றுவிடலாம் எனச் சூழல் உருவானது.. தவெகவுக்கு மட்டும் 107 எம்எல்ஏக்கள் உள்ளதால் இது ஈஸியாக அமைந்தது!
இப்போது மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்க எந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களும் தயாராக இல்லை. தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே தமிழ்நாடு மற்றொரு தேர்தலுக்குத் தயாராக இல்லை என கூறியிருந்தார். தேர்தலுக்குச் செலவழித்த பணமும் உழைப்பும் வீணாகிவிடும் என்பதால், உடனடியாக மீண்டும் தேர்தல் என்பதில் திமுகவும் கூட ரெடியாக இல்லை. இதன் காரணமாகவே திமுக வெளிநடப்பு செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
திமுக வெளிநடப்பு செய்ததால், விஜய்க்குத் தேவையான இலக்கு 118லிருந்து 88ஆகக் குறைந்தது. விஜய்யின் தவெக வசம் ஏற்கனவே 107 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், காங்கிரஸின் 5 பேரும் இணைந்தால் 112 பேர் உறுதியாக உள்ளனர். அதிமுக அதிருப்தி குழுவின் 30 பேர் ஆதரவு அளிக்காவிட்டாலும் கூட, திமுகவின் வெளிநடப்பால் விஜய் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் மிக ஈஸியாக வெற்றி பெற்றது.












Click it and Unblock the Notifications