அடுத்து டெல்லி தான்.. வெகு வேகமாக இயங்கும் விஜய்! ’சவுத்’ பாலிடிக்ஸ்! ஆந்திரா - கர்நாடகா ப்ளான் ரெடி
சென்னை: தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தற்போது தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக தேர்தலை சந்தித்த நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ள தவெக, இனி மாநில அரசியலைத் தாண்டி தேசிய அரசியலிலும் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரளாவைத் தொடர்ந்து, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் "விஜய் மக்கள் இயக்கம்" மூலமாக அடிப்படை அமைப்புகளை உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை எட்டாத நிலையிலும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது.
அதன்பின் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பெரும்பான்மையை நிரூபித்ததன் மூலம், தமிழக அரசியலில் தவெக தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கட்சியை தமிழ்நாட்டைத் தாண்டி விரிவுபடுத்தும் பணிகள் வேகமடைந்துள்ளன.

விஜய்
குறிப்பாக, பல ஆண்டுகளாக நடிகர் விஜயின் ரசிகர் அமைப்பாக செயல்பட்டு வந்த "விஜய் மக்கள் இயக்கம்" தற்போது அரசியல் அமைப்பாக மாற்றப்பட்டு, பிற மாநிலங்களிலும் கட்டமைப்பு உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் புதுச்சேரியில் தவெக தனது தடத்தை பதித்துள்ளது. அங்கு நேயம் மக்கள் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தவெக, மொத்தமாக 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தவெக
ஆட்சியை அமைக்க முடியாவிட்டாலும், எதிர்க்கட்சித் தரப்பில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது கட்சிக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கேரளத்திலும் தவெக தனது அமைப்பை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது. திருச்சூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்தினர். மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கேரளா
விஜய்க்கு கேரளாவில் இருக்கும் ரசிகர் ஆதரவை அரசியல் ஆதரவாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் "விஜய் மக்கள் இயக்கம்" மூலமாக அடிப்படை அமைப்புகளை உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை மையமாகக் கொண்டு உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாக அமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.
தென்னிந்திய அரசியல்
அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது, "தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து ஆட்சியை பிடித்த தவெக, அதே வேகத்தில் தென் மாநிலங்களில் தனது அடையாளத்தை உருவாக்க முயல்கிறது. விஜய்க்கு இருக்கும் ரசிகர் கட்டமைப்பு இதற்கான மிகப் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது" என்கிறார்கள். மேலும், தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டும் என்றால் பல மாநிலங்களில் வாக்கு சதவீதமும், தேர்தல் வெற்றிகளும் தேவைப்படும்.
விஜய் மக்கள் இயக்கம்
அதற்கான நீண்டகால அரசியல் திட்டமிடலில்தான் தற்போது தவெக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் ரசிகர் மன்றமாக இருந்த அமைப்பு, விஜய் மக்கள் இயக்கமாக மாறி, பின்னர் அரசியல் கட்சியாகி இன்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்திருக்கிறது. தற்போது அந்த அமைப்பை தேசிய அளவிலான அரசியல் சக்தியாக மாற்றும் முயற்சியில் விஜய் தரப்பு இறங்கியிருப்பது, தென்னிந்திய அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.














Click it and Unblock the Notifications