கம்யூனிஸ்ட்கள் வரிசையில் தவெகவுக்கு ஐயூஎம்எல் ஆதரவு! தமிழக முதல்வராகிறார் விஜய்!
சென்னை: இந்திய முஸ்லீம் லீக் கட்சியும், தவெக ஆட்சி அமைக்க ஆதரவை கொடுத்துள்ளது. இதனால் தவெகவின் பலம் 118 ஆக உயர்ந்துள்ளது. ஐயூஎம்எல் கட்சித் தலைவர் காதர்மொய்தீன் திமுக கூட்டணியில்தான் இருப்பதாகவும், திமுக எடுக்கும் முடிவே தங்களது முடிவு என்றும் தெரிவித்து நேற்று வரை தவெகவுக்கு ஆதரவு கொடுக்க மறுத்து வந்த நிலையில் தற்போது ஆதரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து ஐயூஎம்எல் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் முறையே ஏ.எம். ஷாஜஹான்,
எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஜனநாயக முறையிலான ஆட்சி நிறுவப்படுவதற்கு திமுக தலைவர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு மனதோடு வரவேற்கிறது. சட்டசபையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய இரண்டு உறுப்பினர்களும் மேதகு ஆளுநர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்புக்கான அனைத்து செயல்பாடுகளுக்கும் துணை நிற்பர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக ஆதரவு அளித்துள்ள நிலையில் தற்போது இந்திய முஸ்லீம் லீக் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது.

நேற்று வரை தவெகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என கூறிய இந்திய முஸ்லீம் லீக் கட்சி தற்போது ஆதரவு அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய்யின் பலம் என்ன என்பதை பார்க்கலாம்.
தவெக 107
காங்கிரஸ் 5
மார்க்சிஸ்ட் 2
கம்யூனிஸ்ட் 2
ஐயூஎம்எல்- 2
மொத்தம் 118 பேரின் ஆதரவு உள்ளது. விடுதலைச் சிறுத்தைகளும் தங்களது ஆதரவு கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு மெயிலில் அனுப்பியதாக சொல்லப்படுகிறது. இதை வைத்து எளிதாக ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். ஆளுநரும் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி நாளை காலை சென்னை காலை 11 மணிக்கு உள்விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
தற்போது பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. விசிகவும் மாலையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துவிட்டது. இதனால் தவெகவின் பலம் தற்போது 120 உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications