மூஞ்சி நெளிந்த தகர டப்பா.. 30 வருட வலி போராட்டம்.. இன்று தமிழக வரலாறு எழுதுகிறார் தவெக விஜய்
சென்னை: விஜய் எனும் ஆளுமை சினிமாவில் சந்தித்த அவமானங்களாகட்டும் அல்லது அரசியலில் அவர் எதிர்கொள்ளும் சவால்களாகட்டும், ஒவ்வொன்றும் ஒரு தலைவனின் மனவலிமையைச் சோதிக்கும் களங்களாகவே அமைந்தன.. தடைகளைத் தகர்த்து முன்னேறுவதே தனது சுபாவம் என்பதை நிரூபித்துள்ள விஜய்யின் இந்த நீண்ட காலப் பயணம், விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.. சினிமாவில் வேர்விட்டு அரசியலில் கிளை பரப்பியுள்ள இந்த முப்பதாண்டு காலப் போராட்டம், ஒரு மனிதனை எப்படிச் செதுக்கும் என்பதற்கு விஜய்யின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்..!!
விஜய் தனது ஆரம்பகால சினிமா பயணத்தில் எதிர்கொண்ட விமர்சனங்கள் சாதாரணமானவை அல்ல; அவை ஒரு இளைஞனின் தன்மானத்தையே சிதைக்கக்கூடிய மிகக்கடுமையான தாக்குதல்கள்.

1992-ல் "நாளைய தீர்ப்பு" படத்தின் மூலம் அறிமுகமானபோது, திரையில் அவரது தோற்றத்தை ஊடகங்கள் மிக மோசமான வார்த்தைகளால் கேலி செய்தன. குறிப்பாக, ஒரு பிரபல வார இதழ் அவரது முகத்தை "நெளிந்த தகர டப்பா" என்று வர்ணித்தது, இன்று வரை தமிழ் சினிமா வரலாற்றின் கசப்பான பக்கமாகவே பார்க்கப்படுகிறது.
மூஞ்சி நெளிந்த தகர டப்பா
இந்த அவமானங்கள் ஒருபுறமிருக்க, அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் உணர்ச்சிவசப்பட்டு அந்த அலுவலகத்தின் மீது நடத்திய தாக்குதல் போன்ற சர்ச்சைகளும் விஜய்யைச் சூழ்ந்தன. இத்தகைய எதிர்மறையான விமர்சனங்களும், ஒரு ஹீரோவாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் சந்தித்த போராட்டங்களுமே, பின்னாளில் அவரை ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை நோக்கி நகர்த்திய தொடக்கப்புள்ளிகளாக அமைந்தன.
தன்னை விமர்சித்தவர்களின் பார்வையைத் தனது உழைப்பின் மூலம் மாற்றித் காட்டியதே விஜய்யின் அசுரத்தனமான வெற்றியாக இன்று நிற்கிறது.
அன்றைய "தகர டப்பா" விமர்சனம் இன்று 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டும் ஒரு வசூல் நாயகனின் அடையாளமாக மாறியிருப்பது, காலத்தின் சுவாரஸ்யமான பதில். தனது தந்தையின் ஆக்ரோஷமான அணுகுமுறைகளிலிருந்து விலகி, அமைதியையும், புன்னகையையும் ஆயுதமாக்கிக் கொண்ட விஜய், தன் மீதான விமர்சனங்களுக்குப் பேச்சால் பதில் சொல்லாமல், சினிமாவில் தனது அபாரமான வளர்ச்சியின் மூலம் பதிலடி கொடுத்தார்.
தவெக நடத்திய புரட்சி போர்
இன்று அவர் அடைந்திருக்கும் உச்சம் என்பது வெறும் அதிர்ஷ்டம் அல்ல; அது முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் தனிமனிதப் போராட்டத்தின் முதிர்ச்சியான முடிவு என்றே சொல்லலாம்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு அடியெடுத்து வைத்தபோது பலரால் கேலி செய்யப்பட்ட "தமிழக வெற்றிக் கழகம்", இன்று 2026 சட்டப்பேரவை தேர்தல் களத்தில் ஒரு புரட்சியையே நடத்தி கொண்டிருக்கிறது..
வெறும் திரை கவர்ச்சியாகப் பார்க்கப்பட்ட விஜய்யின் வருகை, தமிழகத்தின் பாரம்பரிய சாதிய அரசியல் சமன்பாடுகளைத் தகர்த்து, சுமார் 12.5 லட்சம் புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையாக உருவெடுத்துள்ளது.. குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக போன்ற கோட்டைகளையே அதிர வைக்கும் வகையில், சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தவெக முன்னிலை பெற்று வருவது அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது..
செங்கோட்டையன் - சிக்கல்கள்
சினிமாவில் "தகர டப்பா" என்று கேலி செய்யப்பட்ட அதே வலி நிறைந்த தொடக்கத்தைத்தான், இன்று அரசியல் களத்திலும் விஜய் எதிர்கொண்டிருக்கிறார்.. தேர்தலில் அதிக இடங்களை வென்று தனிப்பெரும் சக்தியாக நின்ற போதிலும், ஆட்சி அமைக்க முடியாமல் அவர் தவித்த அந்தத் தருணங்கள் ஒரு தலைவனாக அவரை இன்னும் பக்குவப்படுத்தியிருக்கிறது.
செங்கோட்டையன் போன்ற அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் ஒருபுறம் இருந்தாலும், மெஜாரிட்டியை நிரூபிக்கப் போதுமான பலம் கிடைப்பதில் இருந்த சிக்கல்கள் அவரைத் தூக்கமில்லா இரவுகளுக்குத் தள்ளின..
அன்று 1996-ல் வாஜ்பாய் அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தைக் கூட வழங்காமல், ஆளுநர் மிகக் குறைந்த நாட்களே கெடு விதித்ததும், அதற்குள் தனது எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாத்துத் தக்கவைக்க வேண்டிய கட்டாயமும் விஜய்க்குப் பெரும் மன அழுத்தத்தைக் கொடுத்தன.
கொள்கை எதிரி பாஜக
இந்த இக்கட்டான சூழலிலும், "கொள்கை எதிரி பாஜக" என்ற தனது நிலைப்பாட்டில் அணுவளவும் பின்வாங்காமல், கொள்கைக்காக அதிகாரத்தைச் சமரசம் செய்யாத அவரது உறுதிதான் இன்று இடதுசாரிகளின் ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளது..
வெற்றி பெற்றும் அதைக் கொண்டாட முடியாத அளவிற்குச் சூழ்ந்திருந்த அந்த அரசியல் சதிவலைகளை விஜய் கையாண்ட விதம் ஒரு தேர்ந்த ராஜதந்திரியின் முதிர்ச்சியை காட்டியது.
ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க திமுகவின் பின்னணி ஆதரவு இருப்பதாக எழுந்த பரபரப்பான தகவல்கள், மறுபுறம் பாஜக மற்றும் திராவிடக் கட்சிகளின் முட்டுக்கட்டைகள் என அத்தனையையும் அவர் மௌனமாகவே கடந்து வந்தார்.
கோட்டையில் வெற்றிக்கொடி
முதல்முறை தேர்தலைச் சந்தித்து, முதல்முறையிலேயே சரித்திர வெற்றி பெற்ற சாதனையை ரசிக்கக் கூட நேரமில்லாமல், ஒவ்வொரு நொடியும் "அடுத்தது என்னவாகுமோ" என்ற பதட்டத்தோடு அவர் கழித்த நாட்கள் அவரது அரசியல் வாழ்வின் அக்னிப் பரீட்சை..
இதோ இப்போது கம்யூனிஸ்ட்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில், விசிக-வின் ஆதரவும் உறுதியானால், அந்த 2 இடங்கள் என்ற இடைவெளி குறைந்து அவர் முதல்வராகப் பதவியேற்கப் போகிறார்.. சினிமாவில் அவமானங்களை வெற்றியாக மாற்றியது போலவே, இன்று அரசியலில் துரோகங்களையும் முட்டுக்கட்டைகளையும் தனது நிதானத்தால் தகர்த்து, ஒரு மக்கள் தலைவனாக அரியணையில் அமரத் தயாராகிவிட்டார் தவெக தலைவர் விஜய்..!!!












Click it and Unblock the Notifications