சென்னை: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை விஜய் அரசுக்கு அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியதா அல்லது இது திட்டமிட்ட அரசியல் நகர்வா என்ற கேள்வி எழுந்துள்ளது. கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட உதயநிதிக்கு தஞ்சாவூரில் திமுகவினர் உற்சாக வரவேற்பை கொடுத்தனர். இது வெறும் சட்ட நடவடிக்கையாக இல்லாமல் அரசியல் மோதலாக மாறியுள்ளது.
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை போராட்டத்தில், பிரபல நடிகை குறிப்பதாக சர்ச்சைக்குரிய கருத்தை உதயநிதி ஸ்டாலின் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் நீதிமன்றத்தில் அரசு தரப்பு அவரை ரிமாண்ட் செய்யப் போவதில்லை என்று கூறியதால், அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
உதயநிதியின் கைது திமுகவுக்கு எதிர்பாராத அரசியல் வாய்ப்பை ஏற்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆட்சியை இழந்த பிறகு கட்சி தொண்டர்கள் சோர்ந்து போய் இருந்த நிலையில், அவர்களுக்கு அரசியல் ஆக்சிஜன் இந்த கைது கொடுத்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டு சில மணி நேரங்களிலேயே தஞ்சையில் மிக பெரியளவில் ஆதரவாளர்கள் குவிந்தனர். அவரிடம் செங்கிப்பட்டில் விசாரணை நடந்த நிலையில், அங்கும் திமுகவினர் மிக பெரியளவில் குவிந்தனர். விசாரணைக்கு பிறகு திரும்பிய உதயநிதிக்கு உற்சாக வரவேற்பையும் கொடுத்தனர். காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கூட உதயநிதியின் பேச்சு நாகரிகமானதல்ல என்று கண்டித்தாலும் அதற்காக கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றே கருத்து தெரிவித்துள்ளன. சில அரசியல் விமர்சகர்கள், இந்த கைது விஜய் அரசின் அரசியல் அனுபவமின்மையை வெளிப்படுத்துவதாக சாடியுள்ளனர். அதிலும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு நடந்துள்ள இந்த கைது தேவையற்றது என்பதே அவர்கள் கருத்து. இருப்பினும், மற்றொரு தரப்பு இதை திட்டமிட்டு எடுக்கப்பட்ட அரசியல் முடிவாகவே பார்க்கிறது. எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் சட்டத்தை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தியை சொல்லும் விதமாகவே விஜய் அரசு தீர்க்கமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். மேலும், இந்த கைதின் மூலம் பெண்கள் வாக்காளர்களுக்கு ஒரு தெளிவான அரசியல் மெசேஜ்ஜை அனுப்பவும் விஜய் முயன்றதாகவும் கூறப்படுகிறது. அதாவது பெண்களை இழிவுபடுத்தும் அல்லது ஆபாசமாகப் பேசும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையே அரசு காட்டியுள்ளது. கடந்த தேர்தலில் பெண்களின் வாக்குகள் விஜய்க்கு முக்கிய ஆதரவாக இருந்த நிலையில், அந்த ஆதரவை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த கைது உதயநிதியின் அரசியல் மைலேஜ்ஜையும் உயர்த்திவிட்டது. அதில் மாற்றுக்கருத்து இல்லை. இதுவரை கருணாநிதியின் பேரன், மு.க.ஸ்டாலினின் மகன் என்ற அடையாளத்துடன் மட்டுமே பேசப்பட்ட உதயநிதிக்கு இந்த கைது சம்பவத்துக்கு பிறகு தனி அரசியல் தலைவராக முன்னிறுத்தப்படும் வாய்ப்பு அமைந்துள்ளது. சட்டசபையிலும் வெளியேும் திமுக இதை பெரிய விஷயமாக எடுத்து செல்லவும் ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. தமிழக அரசியலை இனி விஜய் vs உதயநிதி என்ற நேரடி அரசியல் மோதலாக மாற்றும் முயற்சியாகவும் இந்த கைது பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு திமுக, மு.க.ஸ்டாலினை மட்டுமே பிரதான முகமாக முன்னிறுத்திய நிலையில், தற்போது உதயநிதி நேரடியாக விஜய்க்கு எதிரான முகமாக உருவெடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஒரு வகையில் விஜய்க்கு பிளஸ் பாயிண்ட் என்றே சொல்லலாம். ஏனென்றால் ஸ்டாலினுக்கு இருக்கும் அரசியல் அனுபவம் உதயநிதிக்கு இல்லை. எனவே, விஜய் vs உதயநிதி என அரசியலை நகர்த்துவது தவெகவுக்கு லாபமாகவே இருக்கும். தமிழக அரசியலில் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வது அழுத்தம் கொடுப்பது புதிய விஷயம் அல்ல. 1989ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்ட சம்பவம், 2001ல் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம் போன்றவை இன்னும் தமிழக அரசியலில் பேசுபொருளாகவே இருந்து வருகிறது.. மேலும், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் குடும்பத்தை நேரில் சந்தித்து நல்லிணக்க அரசியலை வெளிப்படுத்திய விஜய், இப்போது உதயநிதி கைது மூலம் மீண்டும் மோதல் அரசியலுக்கே திரும்புகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.அரசியல் விமர்சகர்கள்
அனுபவமின்மை
அனுப்பும் மெசேஜ்
உதயநிதிக்கு மைலேஜ்
விஜய் vs உதயநிதி