நாளை முதல்வராகும் விஜய்.. யாரெல்லாம் அமைச்சர்கள்? கசிந்த தகவல்.. ஆதவ்விற்கு முக்கிய துறை
சென்னை: தமிழ்நாடு முதல்வராக ஒரு வழியாக தவெக தலைவர் விஜய் நாளை பதவி ஏற்கிறார். திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன், விஜய் ஆட்சி அமைக்க உள்ளார். இந்த நிலையில் விஜய் நாளை மாலை அல்லது அதற்கு பின்பாக அமைச்சரவையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே 4-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில், தமிழகத்தின் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் (மேஜிக் நம்பர்) கிடைக்கவில்லை. 107 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஏற்கனவே ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரைச் சந்தித்தது.

அவர் 2 முறை சந்தித்தும் தவெகவை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் இன்று சிபிஎம் 2 , சிபிஐ 2 , ஐயுஎம்எல் 2 ஆகிய கட்சிகளின் ஆதரவு மற்றும் கடிதம் மூலமாக விசிக 2 கொடுத்த ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார். மொத்தமாக 120 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் விஜய் பதவி ஏற்க உள்ளார். நாளை காலை 11 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விஜய் பதவி ஏற்க உள்ளார்.
இப்படி தமிழக அரசியலில் ஒரு பக்கம் கூட்டணிக் கணக்குகள் அனல் பறக்க, இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கூடத்தில் அமைச்சரவைப் பட்டியல் தயாரிப்பு வேலைகள் படுவேகமாக நடந்து வருகின்றன. பனையூர் வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அனைத்தும் 'பகீர்' ரகம்.
விஜய்யின் கையில் 'சாவி'
ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகள் பணிகள் நடந்தாலும், முதல்வர் நாற்காலியில் அமரப்போகும் விஜய், மிக முக்கியமான ஒரு முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக முதல்வர் வசம் உள்துறை இருப்பது வழக்கம். ஆனால், விஜய் ஒரு படி மேலே போய், நிதியமைச்சகத்தையும் (Finance Department) தன் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறாராம். மாநிலத்தின் வரவு - செலவு கணக்குகளில் எந்தவிதமான கறையும் படிந்துவிடக்கூடாது என்பதில் 'விஜய்' கறாராக இருப்பதாகத் தெரிகிறது.
ரேஸில் முந்தும் விஐபிக்கள்!
அமைச்சரவை ரேஸில் பல பெயர்கள் அடிபட்டாலும், சில இடங்கள் இப்போதே 'ரிசர்வ்' செய்யப்பட்டுவிட்டன என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
சபாநாயகர் நாற்காலி: அனுபவம் வாய்ந்த ஜெ.சி.டி. பிரபாகரன் தான் சட்டப்பேரவை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாம். அவரின் அனுபவம் சபையை வழிநடத்த உதவும் எனக் கணக்கு போடப்படுகிறது.
ஆனந்தின் ஆசை: விஜய்யின் நிழலாக வலம் வரும் புஸ்ஸி ஆனந்த், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையை (Municipal Administration & Rural Local Bodies) குறிவைத்துக் காய் நகர்த்தி வருகிறார்.
ஆதவ் அர்ஜுனின் கோரிக்கை: கட்சியின் முக்கிய முகமாகப் பார்க்கப்படும் ஆதவ் அர்ஜுன், மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறையைக் கேட்டிருப்பதாகத் தகவல்.
சென்னை சிக்கலும்... மரியா வில்சனும்!
இங்குதான் ஒரு பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது. ஏற்கனவே சென்னையில் இருந்து மூன்று முக்கியப் புள்ளிகளுக்கு அமைச்சர் பதவி உறுதியாகிவிட்ட நிலையில், ஆர்.கே. நகரில் வெற்றி வாகை சூடிய மரியா வில்சனுக்கு மந்திரி சபையில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. "ஒரே மாவட்டத்தில் பலருக்குப் பதவி கொடுத்தால் மற்ற மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைவார்கள்" என்பதுதான் தலைமை முன் வைக்கும் வாதம். இதனால் மரியா வில்சன் தரப்பு கடும் அப்செட்டில் உள்ளதாம்.
ஒரே துறைக்கு இரண்டு போட்டி!
அமைச்சரவைப் பட்டியல் இன்னும் முடிவாகவில்லை என்பதற்குச் சாட்சியாகச் சில மோதல்களும் அரங்கேறி வருகின்றன. ஆதவ் அர்ஜுன் கேட்ட அதே மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறையை நிர்மல் குமாரும் குறிவைக்கிறாராம். இருவரில் யாருக்கு 'லக்' அடிக்கும் என்பது சஸ்பென்ஸ்.
அதேபோல், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையை (PWD & Highways) எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அருண்ராஜ் தரப்போ வணிகவரி மற்றும் உணவுத் துறையைப் பெறத் தீவிரமாகப் போராடி வருகிறது.
மாவட்டக் கணக்கும்... மந்திரி பதவியும்!
தேர்தல் முடிவுகள் என்னவோ சில அதிர்ச்சிகளைத் தந்துள்ளன. குறிப்பாக தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தவெக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இது தலைமைக்குக் கடும் அப்செட். இதனால், இந்த இரண்டு மாவட்டங்களைத் தவிர்த்துவிட்டு, மற்ற மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்களில் தலா ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. "ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பிரதிநிதித்துவம்" என்பதே விஜய்யின் தற்போதைய ஃபார்முலா.
டிமாண்டில் இருக்கும் துறைகள்
இவை தவிர சுகாதாரம், கனிம வளம், வீட்டுவசதி வாரியம், சி.எம்.டி.ஏ (CMDA), போக்குவரத்து, பால்வளத்துறை, பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளுக்குக் கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு துறைக்கும் குறைந்தது நான்கு பேராவது முட்டி மோதுகிறார்கள்.
கடைசி நேரத்தில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்? யாரைக் கழற்றிவிடப் போகிறார் விஜய்? கோட்டை வட்டாரத்தின் அடுத்தடுத்த நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம்!
இது போக காங்கிரஸ் கட்சிக்கு 1 அமைச்சரவை பதவி வழங்கப்படும். பெரும்பாலும் குளச்சல் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை அமைச்சராக வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications