நம்பிக்கை வாக்கெடுப்பு.. சொகுசு பேருந்தில் வந்த தவெக எம்எல்ஏ-க்கள்.. எச்சரிக்கையாக இருக்கும் விஜய்!
சென்னை: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தவெகவின் 105 எம்எல்ஏ-க்கள் சொகுசு பேருந்தில் அழைத்து வரப்பட்டுள்ளனர். தவெக பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், எம்எல்ஏ-க்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் சட்டசபைக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.
தமிழக சட்டசபையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை இன்று நடத்துகிறது. சடசபையில் அரசு சார்பாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பாக ஒருவர் முன்மொழிய, அதில் முதல்வர் விஜய் உரையாற்றுவார். இதில் எதிர்க்கட்சியினரும் உரையாற்றுவர்கள். அதன்பின் அந்த தீர்மானம் எம்எல்ஏ-க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

எதிர்க்கட்சியினர் யாராவது எண்ணிக் கணிக்கும் டிவிஷன் முறைப்படிப்படி வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று கேட்டால், அந்த வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட வேண்டும். அவைக்கு வெளியில் எம்எல்ஏ-க்கள் சென்றிருந்தால், அவர்களை அழைத்து வரச் செய்வதற்கான மணி ஓசை 3 முறை ஒலிக்கப்படும். இதன்பின் அவையின் கதவுகள் அடைக்கப்படும்.
சட்டசபை செயலாளர் டிவிஷன் வாக்கெடுப்பை நடத்துவார். ஒவ்வொரு டிவிஷனுலும் உள்ள எம்எல்ஏ-க்களிடமும் சட்டசபை செயலாளர் தீர்மானத்தை ஆதருப்போரையும், எதிர்ப்போரையும், நடுநிலை வகிப்போரையும் தனித்தனியாக எழுந்து நிற்க கூறுவார். அந்த வகையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கையை, எதிர்ப்போரின் எண்ணிக்கையை கணக்கிட்டு சபாநாயகரிடம் வழங்குவார்.
சட்டசபையில் இருக்கும் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் மற்றும் கூடுதலாக 1 என்ற எண்ணிக்கையை தீர்மானம் பெற வேண்டும். இதன்படி வெற்றி, தோல்வியை சபாநாயகர் அறிவிப்பார். வெற்றி பெற்றால் அரசு தனது பணிகளை தொடரும். ஒருவேளை தீர்மானம் தோல்வி அடைந்தால், அது ஆளுநருக்கு தெரிவிக்கப்படும்.
ஒருவேளை தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால், அரசு கலைக்கப்படுவதாக ஆளுநர் உத்தரவிடுவார். ஆனால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு தோல்வி அடைய வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று பார்க்கப்படுகிறது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தவெக எம்எல்ஏ-க்கள் சொகுசு பேருந்தில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர பிற மாவட்டங்களைச் சேர்ந்த தவெக எம்எல்ஏ-க்கள் மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். விஜய் முதல்வராக பதவியேற்பதற்கு முன் தவெகவின் அத்தனை எம்எல்ஏ-க்களும் மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications