கோவை: கோவையில் புதிய வீட்டுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்வதற்காக ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னையில் மின்வாரிய ஊழியர் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கிய நிலையில், இப்போது கோவையிலும் மாநகராட்சி ஊழியர் கைதாகியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
கோவை இடையர்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (35). கட்டிட ஒப்பந்ததாரரான இவர், கவுண்டம்பாளையம் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு புதிய வீடு கட்டிக் கொடுத்துள்ளார். அந்த வீட்டுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்வதற்காக கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அப்போது அங்கு பில் கலெக்டர் அதாவது வரி வசூலராக பணியாற்றி வந்த பிரதீப் குமார் (35), வீட்டு வரி நிர்ணயம் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று சந்தோஷ் சொன்னாராம்.. அதற்கு பிரதுப், ரூ.10 ஆயிரத்தை குறைத்து ரூ.40 ஆயிரமாவது கொடுக்கும்படி கேட்டுள்ளார்.. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்தோஷ், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.40 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்ற சந்தோஷ், அந்த பணத்தை பிரதீப் குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பணத்தை பெற்ற பிரதீப் குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதே கோவையில் கடந்த ஆகஸ்ட் மாதம், யமுனா தேவி என்ற பில் கலெக்டர் லஞ்சத்துக்காக கைதாகியிருந்தார்.. காலி இடத்துக்கு வரி விதிக்க 40 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம் சுந்தராபுரத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வரும் 39 வயது யமுனாதேவி.. இந்த பணத்தை வசூல் செய்ய, பேக்கரி கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது, இவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்திருந்தது நினைவிருக்கலாம். தினந்தோறும் லஞ்சம் தொடர்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.. கடந்த வாரம் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே செக்கடிப்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி (45), தனது அப்பா பெயரில் இருந்த 6 சென்ட் நிலத்தின் பட்டாவை பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இதற்கு கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில், ரசாயன பவுடர் தடவிய பணத்தை தற்காலிக கிராம உதவியாளர் மாதவன் மூலம் கொடுத்தபோது, சரவணன் மற்றும் மாதவன் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதற்கு 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக மின்வாரிய ஃபோர்மேன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் பழக்கம் இன்னும் குறையவில்லையா என்ற கேள்வி மீண்டும எழுந்துள்ளது.. குறிப்பாக, லஞ்சத்தை ஒழிப்போம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தவெக அரசின் நடவடிக்கைகள் என்ன என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் பட்டா பெயர் மாற்றம், சொத்து வரி நிர்ணயம், மின் இணைப்பு போன்ற அடிப்படை தேவைகளுக்காக அணுகும்போது லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுவது கவலையளிக்கிறது. குறிப்பாக, பணப்புழக்கம் அதிகமுள்ள வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை உள்ளிட்ட துறைகளில் லஞ்சப் புகார்கள் நீண்டகாலமாகவே பேசப்பட்டு வருகின்றன. தவெக அரசு ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் லஞ்சத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் தொடர்வது அந்த வாக்குறுதி எந்த அளவுக்கு நடைமுறைக்கு வந்துள்ளது என்ற கேள்வியை எழுப்புகிறது. லஞ்சம் வாங்கும் ஊழியர்களை கைது செய்வது மட்டுமல்லாமல், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் நிலையே இல்லாத சூழலை உருவாக்குவதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது...!!கோவை பில் கலெக்டர்
சேலம் முதல் சென்னை வரை
குறையாத லஞ்ச புகார்கள்