கோவை: தவெக ஆட்சியமைத்து 5 மாதங்கள் கடந்துவிட்டன. முதலமைச்சர் விஜயும், அதிகாரிகளும் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு பாதிப்பு, மின்வெட்டு, தொழில் முதலீடு சொதப்பல் என பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. கோவை சூலூர் எம்எல்ஏவை முற்றுகையிட்டு மக்கள் சிறை பிடித்தனர். மக்கள் எதிர்ப்பை மீறி திட்டத்திற்கான தொடக்க விழாவில் கலந்து கொண்டால் கல் வீசப்பட்டது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே நாகம்ம நாயக்கன்பாளையம் உள்ளது. அந்தப் பகுதியில் உள்ள குட்டையை தூர்வாரி சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பு அரசு திட்டமிட்டது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு கட்டமாக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குட்டையை தூர்வாருவதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சூலூர் தவெக சுகுமார் கலந்து கொண்டு தொடக்கி வைப்பதாக இருந்தது.
இதற்காக அவர் காலை நாகம்மநாயக்கன்பாளையம் சென்றார். அப்போது பொதுமக்கள் அவர் வந்த வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படியும் சுகுமார் பின்வாங்கவில்லை. கட்சிக்காரர்கள் முன்னிலையில் சுகுமார் தூர்வாரும் பணிக்கு பூமி பூஜை போட்டார். மக்கள் கொந்தளிப்புடன் சுகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அவர் மீது கல் வீசிப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. எம்எல்ஏ மீது கூட்டத்தில் இருந்து கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து எம்எல்ஏ சுகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நீர்வழிப்பாதையில் உள்ள குட்டையை தூர்வாருவது தான் திட்டம். கழிவு நீரை சுத்திகரித்து விடுவதால் நிலத்தடி நீர் அதிகரிக்கும். மழை பெய்தாலும் தண்ணீர் அதிகரிக்கும். சிலர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை மக்கள் உணர வேண்டும். இதை செய்யாவிடின் குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காது. சூலூரில் ஏற்கனவே வறட்சி நிலவுகிறது. அதிகளவு போர்வெல் போட்டால் நிலம் பாதிக்கும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மட்டுமே விடப்படும். கழிவுநீர் விட மாட்டோம். பல மாநிலங்களும் இதை செய்கிறது. வட மாநிலங்களில் மினரல் வாட்டர் போல இருக்கும். அதை காசுக்கு விற்கிறார்கள். சூலூரில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் மினரல் வாட்டர் போல இருக்கும். இந்த கூட்டம் பிளாஸ்டிக்கு எதிரான விஷயத்திற்கு போராடியிருந்தால் வரவேற்றிருப்பேன். நான் யாரிடமாவது காசு வாங்கியிருந்தேன் என்று நிரூபிக்க சொல்லுங்க. என்னை திருடன் என்று சொல்லுபவர்களை அழைத்து வாருங்கள் நான் சொல்கிறேன். நாங்கள் விபரம் தெரிந்தவர்கள் தான். நொய்யலில் யார் கழிவு கலக்கிறார்களோ அவர்களிடம் கேளுங்கள். யாரிடம் கேட்க வேண்டுமோ அவர்களிடம் கேளுங்கள். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் காசு வாங்கி கொண்டு அதை செய்யவில்லை. 4 மாதங்களில் நாங்கள் எவ்வளவு செய்ய முடியும்" என்றார்.எம்எல்ஏ சுகுமாரிடம் வாக்குவாதம்
காசு வாங்கினேனா..