போதிய ஆதாரம் இல்லை.. மல்யுத்த வீராங்கனைகள் வழக்கில் மாஜி பாஜக எம்பி பிரிஜ் பூஷண் விடுதலை

  • டெல்லி: பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் மற்றும் முன்னாள் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது குற்றங்களை நிரூபிக்க போதிய ஆதாரமில்லை என சொல்லி நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷண் ஷரண் சிங். பாஜகவை சேந்த இவர், கடந்த 2009 முதல் 2024 வரை உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து பாஜக எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இவர் மீது கடந்த 2023ம் ஆண்டு பல பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரை அளித்தனர். இது அப்போது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஒரு மைனர் வீராங்கனை உட்பட பலர் பிரிஜ் பூஷண் மீது பாலியல் புகார் அளித்திருந்தனர். அப்போது இந்தியாவின் டாப் பெண் மல்யுத்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தரில் போராட்டமும் நடத்தினர். அது நாடு முழுக்க பேசுபொருளானது. பிரிஜ் பூஷண் ஷரண் சிங், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த காலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து கடந்த 2023 ஜூன் 15ஆம் தேதி சுமார் 1,500 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதன்பிறகு பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மற்றும் வினோத் தோமர் மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பல கட்டங்களாக சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி இருவரையும் ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் விடுதலை செய்தது.

    பெண் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. ஜந்தர் மந்தரில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில், ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளும் கலந்து கொண்டு, பிரிஜ் பூஷண் ஷரண் சிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    English Summary

    Delhi court has acquitted ex-BJP MP Brij Bhushan Sharan Singh in the harassment case filed by women wrestlers(பாலியல் தொல்லை வழக்கில் பிரிஜ் பூஷண் விடுதலை): Brij Bhushan case latest news in tamil.