மத்திய பாஜக அரசுக்கு பணிந்த முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்? நீதிபதிகள் நியமனத்தில் நடந்தது என்ன?

  • டெல்லி: இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் நடைமுறை குறித்து, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது தேசிய அளவில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

    Advertisement

    மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு 'தி வயர்' இணையதளத்துக்காக அளித்த பேட்டியிலும், விரைவில் வெளியாக உள்ள தனது 'வித்அவுட் ஃபியர் ஆர் ஃபேவர்' (Without Fear Or Favour) என்ற சுயசரிதை நூலிலும், முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் செயல்பாடுகள் குறித்து அவர் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

    Advertisement

    கொலீஜியம் முறை என்றால் என்ன?

    பொதுவாக, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளைத் தேர்வு செய்வது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய 'கொலீஜியம்' அமைப்பாகும். இந்த அமைப்பு கூடிப் பேசி தகுதியான நபர்களின் பெயர்களை இறுதி செய்யும். அதன் பிறகே அந்தப் பெயர்கள் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கும் குடியரசுத் தலைவரின் உத்தரவுக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால், இந்த வழக்கமான நடைமுறைக்கு மாறாக முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் செயல்பட்டார் என்பது நீதிபதி கவுலின் குற்றச்சாட்டாக உள்ளது.

    Advertisement

    'முன் அனுமதி' வாங்கும் பழக்கம்: நீதிபதி கவுல் குற்றச்சாட்டு

    நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தனது பேட்டியில், கொலீஜியம் குழுவில் விவாதித்து ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாகவே, நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்களை ஒன்றிய அரசுடன் சந்திரசூட் முன் கூட்டியே பேசி விவாதிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் என்று தெரிவித்துள்ளார். இது ஒன்றிய அரசிடம் இருந்து முன் அனுமதி பெறுவது போன்ற தவறான அணுகுமுறை என்றும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

    கொலீஜியம் தனது ஆலோசனையை முடித்து அதிகாரப்பூர்வமாக ஒரு பட்டியலைத் தயாரிப்பதற்கு முன்னரே, அரசிடம் சென்று பேசுவது தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்று தான் சந்திரசூட்டை பலமுறை எச்சரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

    Advertisement

    கொலீஜியம் கூட்டத்தில் நடந்த சம்பவம்

    கொலீஜியம் கூட்டம் ஒன்றில் நடந்த சுவாரசியமான பின்னணியையும் நீதிபதி கவுல் விவரித்துள்ளார்.

    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்காக 5 பெயர்களைக் கொலீஜியம் ஒருமனதாக முடிவு செய்திருந்தது. ஆனால், தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட், கடைசி நேரத்தில் ஒரு ஆறாவது பெயரைப் பட்டியலில் சேர்க்க மிகவும் விரும்பினார். இதற்காக கூட்டத்தின் நடுவே கவுலை தனியாக அழைத்து, "இந்த நியமனங்கள் குறித்து அரசின் கருத்தைக் கேட்கலாமா, தொலைபேசியில் பேசிப் பார்க்கட்டுமா?" என்று கேட்டுள்ளார்.

    அதற்கு நீதிபதி கவுல், கொலீஜியத்தில் பேசி முடிவெடுக்கும் முன்பே அரசிடம் பேசுவது தவறு என்று மறுத்துள்ளார். மேலும் அந்த 6-வது நபரின் பெயர் தமக்கோ அல்லது கொலீஜியத்தில் உள்ள மற்ற மூத்த நீதிபதிகளுக்கோ உடன்பாடானது அல்ல என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அந்த 6-வது பெயர் உள்ளிட்ட சில பெயர்களுக்கு ஏற்கனவே அரசிடம் பேசி மறைமுக அனுமதி பெறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தமக்கு எழுந்ததாகவும் கவுல் கூறியுள்ளார்.

    Advertisement

    தலைமை நீதிபதியின் பதவிக்காலமும் அரசுக்கான சலுகையும்

    இதுபோன்ற செயல்பாடுகள் குறித்து சந்திரசூட்டிடம் தான் விவாதித்ததாகக் கூறிய கவுல், "சந்திரசூட் போன்ற ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் தலைமை நீதிபதி பதவி காலம் இருந்தது. அப்படிப்பட்ட அதிகாரமிக்க ஒருவரே அரசுடன் எல்லாவற்றையும் முன்னரே பேசி முடிவெடுத்தால், அவருக்குப் பின் வரும் தலைமை நீதிபதிகளுக்கு அது பெரும் சுமையாக மாறும். ஏனெனில் அவர்கள் குறைவான மாதங்களே பதவியில் இருப்பார்கள். அரசுக்கும் நீதிபதிகள் நியமனத்துக்கு முன்பே பெயர் பட்டியலை வாங்கிப் பார்க்கும் கெட்ட பழக்கம் உருவாகிவிடும். அதனால்தான் எல்லாவற்றையும் முன்கூட்டியே அரசுடன் பேசக் கூடாது என்று நான் அவரைத் தடுத்தேன்" என்று விளக்கியுள்ளார்.

    Advertisement

    அரசுடன் கலந்து பேசுவது தவறு இல்லை; ஆனால் அது கொலீஜியம் தனது முடிவை எடுத்த பிறகு முறைப்படி நடக்க வேண்டுமே தவிர, முடிவெடுக்கும் முன்பே முன் அனுமதி போல நடக்கக் கூடாது என்பதே கவுலின் முக்கிய வாதம்.

    வழக்கைத் திரும்பப் பெற்றதும் பி.எம்.எல்.ஏ வழக்கும்

    நீதிபதிகள் நியமனத்தை ஒன்றிய அரசு தாமதப்படுத்துவது தொடர்பாக நீதிபதி கவுல் அமர்வு முன்னிலையில் ஒரு வழக்கு பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்தது. ஆனால் அந்த வழக்கு திடீரென அவரது அமர்வில் இருந்து சந்திரசூட்டால் திரும்பப் பெறப்பட்டது என்றும், இது தமக்கு மிகுந்த வேதனையைத் தந்தது என்றும் கவுல் குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல், அமலாக்கத்துறைக்குக் கூடுதல் அதிகாரம் தரும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் (PMLA) தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விவகாரத்திலும், நடுநிலையான பாதையை எடுக்குமாறு சந்திரசூட் தமக்கு அறிவுரை வழங்கியதாகவும் கவுல் வெளிப்படுத்தியுள்ளார்.

    நிர்வாக ரீதியாக அரசுக்கு பணிந்து சென்றார்

    சந்திரசூட் ஒரு பலவீனமான தலைமை நீதிபதியா என்ற கேள்விக்கு பதிலளித்த கவுல், "ஒரு தலைமை நீதிபதிக்கு தீர்ப்புகள் வழங்கும் நீதித்துறைப் பணி, உச்ச நீதிமன்ற நிர்வாகப் பணி என இரு பக்கங்கள் உள்ளன. சட்ட அறிவு, கடின உழைப்பு ஆகியவற்றில் அவர் சிறந்தவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் நிர்வாக ரீதியாகவும், நீதிபதிகள் நியமனம் தொடர்பாகவும் ஒன்றிய அரசுக்குத் தேவையானதை விட அதிகமாகவே பணிந்து சென்றார்; அளவுக்கு அதிகமாக அரசுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

    சந்திரசூட்டின் விளக்கம்

    இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், "உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்த கொலீஜியம் ஆலோசனைகளின் போது எந்தவொரு உறுப்பினரும் எந்தவொரு பெயருக்கும் மாற்றுக் கருத்தோ எதிர்ப்போ தெரிவித்ததில்லை.. அனைத்து முடிவுகளும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டன" என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.

    நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதிபதிகள் நியமன நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்து உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் மூத்த நீதிபதியே எழுப்பியுள்ள இந்தக் கேள்விகள் இந்திய சட்ட வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

    English Summary

    CJI Chandrachud Sought Govt Nod Before Collegium Meetings? Justice Sanjay Kishan Kaul Makes Explosive Claims